சிந்தனைக்கு விருந்து
இந்தத் தொடர், தமிழ்ப் பண்பாடு, வரலாறு குறித்துப் பரவலாக அறியப்படாத ஆர்வத்தைத் தூண்டும் பல்வேறு தகவல்களைத் தாங்கி வருகிறது.
Series
This section features information, ideas and views to stimulate reflection and dialogue. We welcome contributions.
சிங்கப்பூரில் இந்தியராக இருப்பது என்றால் என்ன?
ஏரன் மணியம் – கல்வியாளர், கவிஞர், முன்னாள் சிங்கப்பூர் அரசு அதிகாரி.
ஊர் திரும்பியவர், வேர் ஊன்றியவர்: தென்கிழக்காசியாவிலும் சிங்கப்பூரிலும் தமிழர் எனும் நூலில் வெளியிடப்பட்ட கட்டுரைப் பகுதியின் சுருக்கம், உங்கள் சிந்தனைக்கு விருந்தாக…
அடையாளம் நிலையானதல்ல — அது பரிணாம வளர்ச்சி அடைகிறது
எந்த ஓர் இனக்குழுவின் வடிவத்தையும் எல்லைக் கோடுகளையும் வரையறுப்பது கடினம். சமயம், சித்தாந்தம் போன்ற அடையாளக் கூறுகளைப் போலவே இனம் என்பதும் நெகிழ்வுத் தன்மையுடைய ஒன்று. பெரும்பாலும் உடலியல், உயிரியல் பண்புகளை அடிப்படையாகக் கொண்டதாகக் கருதப்படும் ‘race’ கூட ஆழமாக ஆராய்ந்தால் குழப்பத்திலேயே முடிகிறது. தத்துவவாதி குவாமே அந்தோணி அப்பையா (Kwame Anthony Appiah) அத்தகைய அடையாளங்களை நம்மைப் “பிணைக்கும் பொய்கள்” என்று அழைக்கிறார். அவை அறிவார்ந்ததாக அல்லாமல் முரண்பாடுகளின் அடிப்படையில் மக்களை உணர்வு ரீதியாக ஒன்றிணைப்பவை என்கிறார்.
அந்தச் சிக்கலை விளக்க இரண்டு மாறுபட்ட தத்துவ அணுகுமுறைகள் உதவுகின்றன. ஒன்று பிளேட்டோவின் (Plato) “அடிப்படை வடிவங்கள்” முறை. ஒவ்வொன்றுக்கும் அதன் அதன்மையை வரையறுக்கும் ஓர் உள்ளார்ந்த, தனிப்பட்ட பண்பு உண்டு என்பது அவரது கருத்து. அதற்கு மாற்றாக, “குடும்பச் சாயல்கள்” என்ற கருத்தாக்கத்தை லுட்விக் விட்கென்ஸ்டைன் (Ludwig Wittgenstein) முன்வைத்தார். அது பொதுவான ஒற்றுமைகளையும் இசைவான தன்மைகளையும் முக்கியமாகப் பார்க்கிறது. சிங்கப்பூர் போன்ற பன்முகத்தன்மை மிகுந்த சமூகங்களில் இந்தியத்தன்மையைப் புரிந்துகொள்ள விட்கென்ஸ்டைனின் அணுகுமுறை நன்கு பயன்படுகிறது.
வாழ்வனுபவத்தின் மூலம் அடையாளம் உருவாக்கப்படுகிறது
சிங்கப்பூரில் இந்தியத்தன்மை பற்றிய எனது புரிதல் ‘சிண்டா’ எனப்படும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்துடன் (Singapore Indian Development Association, SINDA) சேர்ந்து பல்லாண்டுகளாகத் தன்னார்வத் தொண்டு செய்ததன் மூலம் உருவானது. அல்ஃபா திட்டத்திலும் (Project Alpha) பின்னர் சிண்டா இளையர் மன்றத்திலும், தமிழ், மலையாளி, குஜராத்தி, பஞ்சாபி, சிந்தி, மராத்தி, உருது ஆகிய மொழிகளைப் பேசும் இந்திய இன உட்பிரிவுகளைச் சேர்ந்த இளையர்களுடன் கலந்துறவாடினேன். அவர்களின் சமயங்கள் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம், சமணம், சீக்கியர், பஹாய் மற்றும் பௌத்தம் என வேறுபட்டிருந்தன. ஆங்கிலம் எங்கள் பொது மொழி எனினும் உரையாடல்கள் தமிழ், மலையாளம், குஜராத்தி, மலாய் ஆகிய மொழிகளைக் கலந்துகட்டி அமைந்திருந்தன. பன்முகத்தன்மை என்பது புலனாகாத ஒரு பொருளல்ல; நாங்களே வாழ்ந்துபார்த்தபோது அது புலப்பட்டது.
எனது சொந்தக் குடும்பம் அதை நன்கு பிரதிபலிக்கிறது. என் தந்தை, பாதி தமிழர், பாதி யூரேசியர். கோவா, மலாக்கா பகுதிகளின் போர்த்துகீசிய மூதாதையர்களின் கொடிவழி. ரோமன் கத்தோலிக்கராகப் பிறந்த அவர், என் தாயை மணந்தபோது இஸ்லாத்திற்கு மாறினார். என் தாயோ பாதி மலாய்க்காரர், பாதி பாகிஸ்தானியர். அவரது கொள்ளுப் பாட்டி ஒரு சீனர். அந்தப்பாட்டி தத்தெடுக்கப்பட்டு எங்கள் குடும்பத்திற்குள் நுழைந்தவர். எங்கள் வீட்டு மொழி மலாய். பண்டிகைகள், குடும்பக் கூடுகைகளின்போது தமிழ் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது.
குடும்பத்துக்கு வெளியே, நான் அடிக்கடி “அடிப்படை வடிவ” அனுமானங்களை எதிர்கொண்டேன். டாக்ஸி ஓட்டுநர்கள் நான் இந்து என்று கருதி எனக்கு தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவிப்பார்கள். நான் முஸ்லிம் என்று விளக்கும்போது ஆச்சரியப்படுவார்கள். உணவங்காடிக் கடைக்காரர் ஒருமுறை “நீ எப்படிப்பட்ட இந்தியன்?” என்று கேலி செய்தார். ஏனென்றால், நான் அவரிடம் மலாயில் பேசுவேன். அவை இலகுவாக எடுத்துக்கொண்டு போய்விடக்கூடிய அனுபவங்கள்தாம் என்றாலும் அவை அவர்களுக்கு ஓர் எதிர்பார்ப்பு இருப்பதை வெளிப்படுத்தின. அதாவது, சமய, மொழி, கலாசார நடத்தைகளுடன் இனம் ஒருசில வகைகளில் ஒத்துப்போக வேண்டியுள்ளது. அவர்களின் அனுமான எதிர்பார்ப்புகள் ஓர் ஆழமான கேள்வியை எழுப்பின. சிங்கப்பூரில் இந்தியராக இருப்பது என்றால் என்ன?
“அடிப்படை வடிவம்” தேடுவதன் வரம்புகள்
ஒவ்வொரு பொருளும் ஓர் அடிப்படை வடிவத்தைக் கொண்டுள்ளது என்று பிளேட்டோ நம்பினார்: நாற்காலிகள் “நாற்காலித்தன்மை” கொண்டவை. குதிரைகள் “குதிரைத்தன்மை” கொண்டவை. அதை அப்படியே நாம் இந்தியத்தன்மைக்குப் பயன்படுத்தினால், ஒருவர் இந்தியரா என்பதைத் தீர்மானித்து வரையறுக்கும் பண்பானது வம்சாவளி, சமயம், மொழி, பண்பாட்டு நடவடிக்கைகள் ஆகியவற்றில் இருக்க வேண்டும்.
ஆனால் நிஜ வாழ்க்கை அத்தகைய வசதியான வகைப்பாட்டை மறுக்கிறது. ஒரு விசுப்பலகை, பெட்டி அல்லது பாறையில் உட்கார முடிந்தால், அது ஒரு நாற்காலியா? வரிக்குதிரைகளும் குதிரைகளும் இனப்பெருக்கம் செய்தால் அவை உண்மையிலேயே தனித்தனி இனங்களா? யதார்த்தம், பிளேட்டோவின் அடிப்படை வடிவங்களின் தூய்மையை எதிர்க்கிறது. அடையாளங்களை விறகுக்கட்டுகளைப் போலத் தொகுக்க முடியாது என்பதால் “அடிப்படை வடிவம்” தோல்வியடைகிறது. அடையாளங்கள், நெகிழ்வான, ஒன்றோடொன்று கலந்து வாழும் அனுபவங்கள்.
மேம்பட்ட பார்வை: விட்கென்ஸ்டைனின் “குடும்பச் சாயல்கள்”
விட்கென்ஸ்டைன் ஒரு மாற்று ஏற்பாட்டை வழங்கினார். அடிப்படை வடிவத்தைத் தேடுவதற்குப் பதிலாக, பொதுவான ஒற்றுமைகளையும் இசைவான தன்மைகளையும்கொண்டு வகைப்பாட்டை அங்கீகரிக்க வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார். அவரது எடுத்துக்காட்டு, விளையாட்டுகள். சதுரங்கம், கால்பந்து, கணினி விளையாட்டுகள் மிகவும் வேறுபட்டவை. அவற்றுக்குப் பொதுவான ஒரே அம்சத்தைத் தேடாமல் சில அம்சங்களை அவை பகிர்ந்து கொள்வதால் அவற்றை விளையாட்டுகளாக அங்கீகரிக்கிறோம். இவர் இன்னார் என்பதற்கு அவரது ஒவ்வொரு பண்பையும் வரிசைப்படுத்திப் பொருத்தம் பார்க்கவேண்டிய அவசியமில்லை. விட்கென்ஸ்டைனின் அந்தப் பார்வை இந்தியத்தன்மையை விளக்குவதற்கு நன்கு பொருந்துகிறது.
ஊடும்பாவுமாக ஒன்றிணையும் பண்புகளாக இந்தியத்தன்மை
சிங்கப்பூரில், இந்தியத்தன்மையை ஒற்றைச் சமயம், மொழி அல்லது பண்பாட்டு நடைமுறையாகக் குறைத்துவிட முடியாது. இங்குள்ள இந்தியர்களில் இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள் ஆகியோர் அடங்குவர். அவர்கள் தமிழ், மலையாளம், குஜராத்தி, பஞ்சாபி, பெங்காலி, இந்தி, உருது உள்ளிட்ட பல்வேறு மொழிகளைப் பேசுகிறார்கள். அவர்களின் பண்பாட்டு வெளிப்பாடுகளான உணவு, பண்டிகைகள், இசை, சடங்கு சம்பிரதாயங்கள் அனைத்தும் வெகுவாக வேறுபடுகின்றன.
இருப்பினும் “குடும்பச் சாயல்கள்” உள்ளன. தெற்காசியாவுடன் பரந்துபட்ட பண்பாட்டு, வரலாற்றுத் தொடர்புகள் உள்ளன. ஒன்றுபோலத்தோன்றும் மூதாதையர் புலப்பெயர்வுக் கதைகள் உள்ளன. ஒன்றோடொன்று கலந்துவிட்ட பண்டிகைகள், உணவுகள், கலை மரபுகள், வரலாற்றுத் தடங்கள் ஆகியவற்றால் உருவாக்கப்பட சில விழுமியங்கள் உள்ளன. ஒவ்வொரு இந்தியரும் எல்லாப் பண்புகளையும் வெளிப்படுத்துவதில்லை. ஆனால் ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், பல ஒற்றுமைகள் இந்தியத் தன்மையை அங்கீகரிக்கும் உள்ளுணர்வை நமக்கு உண்டாக்குகின்றன.
இது ஏன் முக்கியம்: தனிநபர் சுதந்திரம், கூட்டுச் சுதந்திரம்
தனிநபர்களைப் பொறுத்தவரை, அடையாளம் என்பது சிக்கலான பன்முகத் தன்மையை அனுமதிக்க வேண்டும். மலாய்-தமிழ் பெற்றோருக்குப் பிறந்த, ஜப்பானிய உணவை விரும்பும் ஒரு குஜராத்தியையோ, ஒரு தமிழ் முஸ்லிம் குடும்பத்தில் தத்தெடுக்கப்பட்டு வளர்க்கப்ட்ட சீனப் பிள்ளையையோ ஒருமாற்று “குறைவான இந்தியர்கள்” என்று சொல்வதைக் கற்பனை செய்து பாருங்கள். குடும்பச் சாயல் ஏற்பாடு, அவர்கள் வாழ்ந்து அனுபவித்த, மரபுரிமையாகக் கைக்கொண்ட, இயல்பான அடையாளங்களைத் தம்முடையவையாகக் கோரும் கண்ணியத்தை அவர்களுக்கு வழங்குகிறது.
சமூகங்களைப் பொறுத்தவரை, எதையும் ஏற்கும்தன்மையே உகந்தது. அது சொந்தபந்தம் என்னும் உணர்வை வளர்க்கிறது. கலப்புத் திருமண உறவுகளுள்ள குடும்பங்களில், பண்பாட்டுப் பங்கேற்பு என்பது பாரம்பரியக் கொடிவழி உறவுகள் இன்றியே நிகழலாம். “அடிப்படை வடிவ” வாதம் எல்லைகளை எழுப்புகிறது ஆனால் “குடும்பச் சாயல்” பாலங்களை அமைக்கிறது.
சமுதாயத்தைப் பொறுத்தவரை, குடும்பச் சாயல் பார்வை யார் “அசலானவர்” என்ற மோதலைக் குறைக்கிறது. சிக்மண்ட் ஃபிராய்ட் (Sigmund Freud) அத்தகைய மோதலை “சிறிய வேறுபாடுகளைப் போற்றி நேசிக்கும்” மனப்பாங்கின் விளைவாகக் கண்டார். நெருக்கமான தொடர்புடைய இனக்குழுக்கள் சிறிய வேறுபாடுகளுக்காகத் தமக்குள் சண்டையிடும் போக்கு. அடிப்படை வடிவச் சிந்தனையின்கீழ், மாறுபாடுகள் அச்சுறுத்தல்களாக மாறுகின்றன. எடுத்துக்காட்டாக, இந்தியர்கள் அல்லாதவர்களால் யோகா பயிற்சி செய்யப்பட்டால், அது நல்லவிதமாகப் பார்க்கப்படுவதில்லை. ஆனால், குடும்பச் சாயல் அணுகுமுறை, மாறுபாடுகளை நீர்க்கச்செய்யும் கலப்புகளாக அல்லாமல் செறிவூட்டும் சேர்க்கைகளாகக் காண்கிறது.
சீனர்-மலாய்க்காரர்-இந்தியர்-மற்றவர் (CMIO) சட்டகத்தை மறுபரிசீலனை செய்தல்
சிங்கப்பூரின் CMIO (சீன-மலாய்-இந்திய-மற்றவர்கள்) சட்டகம் பெரும்பாலும் அடிப்படை வடிவ அணுகுமுறைகொண்டது என விமர்சிக்கப்படுகிறது. ஏனெனில் அச்சட்டகம், வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளை வாங்குவதில் ஒதுக்கீடு, பள்ளியில் பிள்ளைகள் படிக்கவேண்டிய மொழிகள் போன்றவற்றை இன அடிப்படையில் முடிவுசெய்கிறது. நிர்வாக வசதிக்காக ஒவ்வொரு குடிமகனையும் ஓர் இன வகைக்குள் கொண்டுவருகிறது. அது நெகிழ்வான அடையாளங்களைக் கல்லாய்ச் சமைத்துவிடும் “மெடுசா (Medusa) விளைவை” உருவாக்கலாம் என தத்துவவாதி அப்பையா எச்சரிக்கிறார்.
சிங்கப்பூர் படிப்படியாகப் பன்முக அடையாளத்தை நோக்கி நகர்ந்துள்ளது. இந்திய-யூரேசியன் போன்ற இரட்டைக் குழல் இனங்கள் 2010-இல் அறிமுகப்படுத்தப்பட்டன. பஞ்சாபி, பெங்காலி, குஜராத்தி போன்ற தமிழ் அல்லாத இந்திய மொழிகள் 1989 முதல் பள்ளிகளில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அம்மாற்றங்கள் வாழ்வனுபவங்களின் யதார்த்தங்களைப் பிரதிபலிக்கும் வகையில் உருவாகி வருகின்றன. சில கொள்கைகளைச் செயல்படுத்த நிர்வாக அடையாளங்கள் அவசியம், ஆனால் உண்மையான அடையாளம் உணவு, சடங்குகள், உறவுகள், மொழி ஆகியவை கலந்த அன்றாட நடைமுறைகளால் வடிவமைக்கப்படுகிறது.
எவர் நம்மவர்?
அடையாளம் என்பதைக் கொடிவழிச் சாரத்தைவிட பொதுவான ஒற்றுமைகளை அடிப்படையாகக் கொண்டு ஏற்போமானால், இனம் என்பதை நம் முன்னோர்களிடமிருந்து பெற்றதாக மட்டுமின்றி, நாம் தேர்ந்தெடுக்கும், விரும்பி ஏற்கும், வாழ்ந்துபார்க்கும் ஒன்றாகவும் ஏற்கலாம். ஒருவர் இஸ்லாத்தில் நுழைவதைப்போல இந்தியத்தன்மைக்குளும் நுழையலாம். அதன் பண்பாட்டுப் பரப்பில் அர்த்தமுள்ள வகையில் பங்கேற்கலாம். அப்போது, அடையாளம் என்பது நம்மை விளிக்கும் பெயர்ச்சொல்லாக அல்லாமல் நாம் செய்யும் வினைச்சொல்லாக மாறுகிறது.
தேசிய அடையாளத்தைப் பற்றிய எஸ். ராஜரத்தினத்தின் சொற்கள் இங்கே நன்கு பொருந்தும்: “சிங்கப்பூராக இருப்பது என்பது வம்சாவளியைச் சார்ந்தது அல்ல, மாறாகத் தேர்வையும் தீர்க்கமான நம்பிக்கையையும் பொறுத்தது.” இந்தியத்தன்மையையும் அதேவழியில் புரிந்து கொள்ளலாம்.
அடையாளம்: இழைகளால் நெய்யப்படுகிறது, உருக்கி வார்க்கப்படுவதல்ல
பண்பாட்டுப் போராட்டங்களும் அடையாளப் பதற்றங்களும் நிறைந்த இந்தக்காலத்தில், அடிப்படை வடிவச் சிந்தனை ஒரு கவர்ச்சிகரமான எளிமையை வழங்குகிறது. இருப்பினும் அது அசல்தன்மை, தூய்மை ஆகியவை குறித்த அச்சங்களை விதைத்து விரிசல்களையும் விலகல்களையும் வலுப்படுத்திவிடுகிறது. மாறாக, விட்கென்ஸ்டைனின் குடும்பச் சாயல் கண்ணோட்டம், மனிதத்தன்மை மிக்க ஒரு கட்டமைப்பை வழங்குகிறது. அது தனிநபர்களை எவ்விதக் குற்றவுணர்ச்சியுமின்றி ஒரே நேரத்தில் பல அடையாளங்களை ஏற்க அனுமதிக்கிறது. சமூகங்கள் பரிணாம வளர்ச்சியடைய உதவுகிறது. யார் “அசலானவர்” என்ற போட்டியைக் குறைக்கிறது.
அனைத்து அடையாளங்களையும் போலவே இந்தியத்தன்மை என்பதும் ஒரு மொழி, ஒரு அல்லது ஒரு கொடிவழி ஆகியவற்றால் வரையறுக்கப்படவில்லை. அது ஒன்றோடொன்று இணைந்த வரலாறுகள், நடைமுறைகள், உறவுகள், தேர்வுகள் ஆகியவற்றின்மூலம் வெளிப்படுகிறது.
அடையாளம் ஏற்கெனவே முழுமைபெற்று நம்மை வந்தடையும் ஒன்றல்ல.
ஊடும்பாவுமாக நம்மால் நெய்யப்படும் ஓர் அழகிய கம்பளம்.
மூலம்
- ஊர் திரும்பியவர், வேர் ஊன்றியவர்: தென்கிழக்காசியாவிலும் சிங்கப்பூரிலும் தமிழர், அருண் மகிழ்நன், நளினா கோபால் (தொகுப்பாசிரியர்கள்), இந்திய மரபுடைமை நிலையம்-கொள்கை ஆய்வுக் கழகம் இணைவெளியீடு, 2021
திணையற்ற தமிழரின் முதல் குரல்
கவிதை, புனைவு, அபுனைவு, விமர்சனம், இதழியல் எனப்பல தளங்களிலும் தீவிரமாகச் செயல்பட்டுக் குறிப்பிடத்தக்க ஆக்கங்களைத் தொடர்ந்து வெளியிட்டுவரும் சிங்கப்பூரின் முன்னோடி எழுத்தாளர்களுள் ஒருவர் லதா. ‘ஊர் திரும்பியவர் வேர் ஊன்றியவர்: தென்கிழக்காசியாவிலும் சிங்கப்பூரிலும் தமிழர்’ நூலில் இடம்பெற்ற அவரது ‘திணையற்ற தமிழரின் முதல் குரல்’ என்னும் இயலில், சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம், அதுவரை தமிழ் இலக்கிய வரலாற்றில் கண்டிராதபடி, ‘திணை’ என்னும் பாரம்பரியமிக்கக் கருத்தாக்கத்திலிருந்து துண்டிக்கப்பட்ட நிலையில் எழுந்த முதல் குரல் என்று வாதிடுகிறார். அவ்விரிவான இயலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகள் சுருக்கமான, செம்மைப்படுத்தப்பட்ட வடிவில் உங்கள் சிந்தனைக்கு விருந்தாக…
திணையற்ற தமிழர் யார்? அவர் சிங்கப்பூரில் ஏன் உருவாகிறார்?
திணை என்று இங்கே குறிப்பிடப்படுவது நிலம் சார்ந்த வாழ்க்கையை. தமிழரின் ஐந்திணைகளைச் சுருக்கமாக, புறச்சூழலையும் அக ஓட்டத்தையும் இணைப்பது என்று சொல்லலாம். அகம் புறத்தையும் புறம் அகத்தையும் எதிரொலிக்கும். திணையின் முதல் பொருளான நிலம், பொழுது (Space and Time) ஆகியவற்றைப் புவியியல் சூழலியலுக்கு அப்பாற்பட்ட உளவியல் பரிமாணமாகவும் பார்க்கலாம். நிலம் ஒரு குறிப்பிட்ட பண்பாட்டையும் வாழ்க்கை முறையையும் குறிக்கலாம். நிலம் என்பது அசையாதது ஆனால் காலம் மாறிக்கொண்டே இருப்பது. நிலையானதையும் நிலையற்றதையும் இணைக்கும் ஒரு செழுமையான தமிழர் மரபே திணை.
சிங்கப்பூர் ஒரு சிறு தீவானாலும் அதற்கும் நிலம், பொழுது உண்டு. ஆயினும் நவீன சிங்கப்பூர், புலம்பெயர்ந்த மக்களின் உழைப்பில் உருவாகி வந்த, வந்துகொண்டிருக்கும் ஒரு புதிய நகரம். பல்வேறு இன மக்களின் கூட்டுழைப்பில், முழுக்கத் தொழில்நுட்பதால் ஆன இந்த ஒரு நகரத்தைப் பெரும் சந்தை என்றுகூடச் சொல்லலாம். நாடே ஒரு நகரம். இயற்கையிடம், அதாவது காட்டிடம் நிலத்திடம் கடலிடம் இருந்து பெறுவதும் மீண்டும் பங்களிப்பதும் இந்த நகரத்தின் பெருவாரி மக்களின் வாழ்க்கையாக இல்லை. திணை சார்ந்த வாழ்க்கையில் நிலத்துக்கும் மனிதனுக்கும், நீருக்கும் மனிதனுக்கும் கொடுக்கல் வாங்கல் தொடர்பு இருக்கிறது. நகரத்தில் அது சாத்தியமாவதில்லை. நகர மனிதன் பெறக்கூடியவனாக மட்டுமே உள்ளான். முழுக்க முழுக்க நகர்மயப்படுத்தப்பட்ட இடத்திற்கு சிங்கப்பூர் வந்துவிட்டது. இதுவரை சொல்லப்படாத திணை இது. திணையற்ற திணை.
சிங்கப்பூருக்கும் இதர நகரங்களுக்கும் திணையில் என்ன வேறுபாடு?
உலகமயமாக்கல் வழியாகத் தொழில்நுட்ப சாத்தியம் ஏற்படுத்திய, மெய்நிகர் பொதுவெளிக்குள் ஒரு வாழ்க்கையை சிங்கப்பூர் எல்லா வழியிலும் தற்போது உருவாக்கியுள்ளது. தமிழ் வாழும், இலக்கியம் படைக்கப்படும் தமிழகம், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நான்கு நாடுகளில் சிங்கப்பூர் மட்டுமே திணைக்கு அப்பாற்பட்ட ஒரு குரலை ஒலிக்கிறது.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து நவீன சிங்கப்பூரில் தமிழர்களின் தொடர்ச்சியான குடியேற்றமும் சமூக உருவாக்கமும் இடம்பெற்று வந்திருந்தாலும், ஒரு நூற்றாண்டு காலத்துக்குப் பின்னரே இந்நாட்டுக்கே உரிய, சாதி, சமய, வர்க்க வேறுபாடுகளைக் கடந்த தமிழ் அடையாளம் உருவாகத் தொடங்கியது. அனுபவங்கள், பார்வைகளின் வழி, மொழி அடிப்படையிலான ஒரு பண்பாட்டு அடையாளத்தை இங்கு வாழும் தமிழ்ச் சமூகம் கண்டறிந்துள்ளது. சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியத்தின் இலக்கு, பணி, சாதனை என அனைத்துமாக இந்த மொழிப் பண்பாட்டுத் தொடர்ச்சி விளங்குகிறது.
நிலத்துக்கு அப்பாற்பட்ட உலகத் தமிழ்ச் சமூக வரலாற்றின் தொடக்கமாக விளங்கும் கதைகளையும் கவிதைகளையும் கட்டுரைகளையும் சிங்கப்பூர் நகர வாழ்க்கை சாத்தியமாக்கியுள்ளது. “இந்தியாவின் விடுதலையே என் இனத்தின் விடுதலை” என்றும், “எங்கள் மலாயா” என்றும் “நான்கினமும் வாழும் நம்பூமி சிங்கப்பூர்” என்றும் சிங்கப்பூர்க் கவிஞர்களாலேயே பாட முடியும். இது நிலையற்ற மனத்தின் வெளிப்பாடு அல்ல; திணைகளைக் கடந்த தமிழரின் குரல்! தமிழ் மக்களின் சமூக, பண்பாட்டு அடையாளத்தை ஒருமுகப்படுத்தும் அடித்தளமாக மொழியை நிலைநிறுத்தும் தொடர் முயற்சி.
கிட்டத்தட்ட 1970கள் வரை மலேசியா, சிங்கப்பூர்ப் படைப்புகள் மலாயா இலக்கியம் என்றே அழைக்கப்பட்டன. இந்த வட்டாரத்தின் முக்கிய பத்திரிகைகளும் ஊடகங்களும், தமிழர் திருநாள் போன்ற பெரிய நிகழ்வுகளும் இருநாட்டு இலக்கியங்களையும் ஒன்றாகத்தான் வளர்த்தன. ஆனாலும் மலேசிய இலக்கியம் மண்ணில் வளர்ந்தது. சிங்கப்பூர் இலக்கியம் மண் வாசனை அறியாமலேயே உருப்பெற்றது. சிங்கப்பூர் இலக்கியத்திற்கும் மலேசிய இலக்கியத்திற்கும் உள்ள முக்கியமான, துல்லியமான வேறுபாடு இதுதான். சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியத்தின் தனித்தன்மையும் இதுதான்.
நிலத்தைக் குறித்த பிடிப்பு நகர மக்களுக்கும் உண்டுதானே?
நிலப்பற்றோ, நிலத்தை முன்வைத்த போராட்டங்களோ சிங்கப்பூரில் இல்லை. ரப்பர்த் தோட்டங்களும் கரும்புத் தோட்டங்களும் சிங்கப்பூரில் இருந்த காலத்தில்கூட இந்தியர்களில் மிகக் குறைந்த விகிதத்தினரே விவசாயத்தில் ஈடுபட்டிருந்தனர். ஆற்றுப்பகுதியிலும் துறைமுகத்திலும் பெரும்பாலும் கூலித்தொழிலாளாக அன்றாட ஊதியத்திற்குப் பணிபுரிந்த தமிழ் மக்களுக்கு இந்தக் கடலும் அந்நியமாகவே இருந்துள்ளது. அதனால், துறைமுகத்தின் செழிப்பைப் பாடிய அவர்களுக்கு கடலைப் படைப்பாக்குவது சாத்தியமாகவில்லை.
காலனித்துவ ஆட்சி, இந்திய சுதந்திரப் போராட்டம், இரண்டாம் உலகப் போர், ஜப்பானியர் ஆட்சி, நேதாஜியின் இந்திய தேசிய ராணுவம், சுதந்திர சிங்கப்பூரின் சிக்கல்கள், விரைந்த முன்னேற்றம், புதிய மொழிக்கொள்கைகள், குடியேற்றக் கொள்கைகள் போன்ற தொடர் நிகழ்வுகள் இந்தத் தமிழ்ச் சிந்தனையைக் குழப்பியதோடு, மக்களுக்கு இந்த நிலம் மீதான பற்றை அறுத்துக்கொண்டே இருக்கின்றன. எல்லா வகையிலும் ஒரு மையமாக அதுவும் தொடர்ந்து மாறிக்கொண்டிருக்கும் மையமாக உருவாவதே பொருளியல் வெற்றி தருவதாக இருக்கிறது. மாறிக்கொண்டே இருக்கும் இந்த நகரத்தில் ஓர் அடுக்குமாடி வீட்டோடுகூட மக்களால் ஒன்றிணைய முடியவில்லை. சிங்கப்பூருக்கே நிலம் மீதான ஒரு பற்று இல்லை.
நகரமயமாக்கம் தவிர்த்த இதர காரணிகள் உண்டா?
சுதந்திர சிங்கப்பூரைக் கட்டி எழுப்பிய, நாட்டின் முதல் பிரதமரான லீ குவான் இயூவின் தொடக்ககால அரசியல் சிந்தாந்தம் கவனத்தில் கொள்ளத்தக்கது. இந்நாட்டின் இனக் குழுமங்கள் தத்தமது பாரம்பரியப் பெருமைகளையும் தொடர்புகளையும் மறந்துவிட்டு, ஒரு புதிய தேசிய அமைப்பில் முதலிலிருந்து தொடங்க வேண்டும் என்றார் அவர். அதுகாலம் வரையிலும் நீண்ட தொன்மையான தமிழிய அடையாளத்தின் மூலம் உயர்வுணர்ச்சி பெற்று வந்த தமிழ்ச் சமூகம், பொருளாதார உயர்வை நாடத்தொடங்கியபோது ஒரு தலைமுறை, மொழி அடிப்படையிலான பண்பாட்டு அடையாளத்திலிருந்து விலகி, மொழி, இலக்கியத்தில் ஈடுபாடு வெகுவாகக் குறைந்தது. இதில், கல்விக்கொள்கைக்கும் பங்குண்டு என்பதை மறுக்கமுடியாது.
மற்ற தேசிய மொழிகளுடன் ஒப்பிட, தமிழ் மொழி எழுத்தறிவு குறைந்தது. சிங்கப்பூரில் ஆங்கிலம், சீனம், மலாய் மொழிகளுக்கு இருப்பது போல் தமிழுக்கு அரசியல், பொருளாதார முக்கியத்துவம் தேசிய ரீதியாகவோ வட்டார ரீதியாகவோ இல்லை என்ற எண்ணம் சில இந்தியர்களிடம் வலுப்படத் தொடங்கியது. தமிழார்வம் குறைந்ததால் ஏற்பட்ட தமிழ்ப் பண்பாட்டுக் குறைவு, தமிழ் சிறப்பிழப்பது குறித்து ஏராளமான படைப்புகள் பேசுகின்றன. எனினும், கல்விக்கொள்கை மாற்றம், தாய்மொழி வழிக் கல்வி இல்லாது போனது போன்ற நிகழ்வுகள் தமிழ்ப் பண்பாடு, படைப்பிலக்கியத்தில் ஏற்படுத்திய விளைவுகளை தமிழ்ப் படைப்பாளர்கள் சீனர்கள்போல வெளிப்படையாக விவாதிக்கவில்லை. மொழியார்வக் குறைவை இனத்தின் குறையாகவே கண்டிக்கும் தமிழ்ப் படைப்பாளர்கள், அதிகாரத்துவ மொழியாகத் தமிழுக்கு இடமளித்து, இருமொழிக் கல்விக்கொள்கையால் தமிழ்க் கல்வி இந்நாட்டில் தொடரப்பட்டு வருவதை போற்றிக்கொண்டாடுவதன் உளவியல் ஆராயப்பட வேண்டியது.
இத்தகைய சூழலில், அந்தந்த இனங்களின் தனித்த பண்பாடுகளின் செழிப்பே சிங்கப்பூரின் தனித்தன்மையான அடையாளம் என்ற நிலைப்பாட்டுடன், வெள்ளிவிழாவைக் கொண்டாடி, அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கிய சிங்கப்பூரின் பயணத்தில் பல்லினத் தேசிய அடையாளச் சொல்லாடல்கள் வலுப்பட்டன. சிங்கப்பூரின் வெள்ளி விழாவையொட்டி 1990இல் நடைபெற்ற இந்தியப் பண்பாட்டு மாதக் கொண்டாட்டத்தில் 25 தமிழ் நூல்கள் ஒரே சமயத்தில் வெளியீடு கண்டன. இளைய தலைமுறையினரின் படைப்புகளைக்கொண்ட புதியவர்களின் சிறுகதைகள், சின்னச்சின்ன சிந்தாந்தங்கள் இரண்டும், அக்காலகட்டத்தின் வாழ்வியல் மாற்றங்களைப் பேசுகின்றன.
பண்பாட்டு அடையாளம், தேசிய அடையாளம் என்பனவற்றை உருவாக்க 1970களின் இறுதியிலிருந்து சமூகநிலையிலும், பின்னர் 1980களின் இறுதியிலிருந்து தேசிய நிலையிலும் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் பொருள்முதல்வாத சிந்தனையில் வளர்ந்த தலைமுறையிடம் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதற்கான காரணங்களில் ஒன்று, சமூக மேம்பாட்டின் பொறுப்பு சமூகத்திடம் இருந்து அரசாங்கத்திடம் சென்றது அல்லது நிறுவனமயமாக்கப்பட்டது. சமூகத்துக்காக, சமூகமே ஒன்றுதிரண்டு பாடுபட்டுபோது உண்டான கூட்டுக் குழும உணர்வும் அதன்வழியே உருப்பெற்ற தமிழ் அடையாள மேன்மையும் இல்லாதுபோயின.
திணையற்ற திணையில் புதிய குரல்கள் ஒலிக்கின்றனவா?
படித்த, திறன்கள் பெற்ற வெளிநாட்டினருடன் தொழிலாளர்களும் 90களில் தொடங்கி அதிகரித்ததால் பொருளியலின் அபரிமித வளர்ச்சியோடு கலை, இலக்கியம் உள்ளிட்ட பிற துறைகளும் வளர்ச்சி காணத் தொடங்கின. கலை, இலக்கியத்துக்கான அரசாங்கத்தின் ஆதரவும் எக்காலத்திலும் இல்லாத அளவுக்கு அதிகரித்தது.
பிறந்து வளர்ந்த நாட்டின் பெரும் நிலப்பரப்பின் அத்தனை வசதிகளையும் போதாமைகளையும் பார்த்து வளர்ந்திருந்த புதியவர்களுக்கு, நிலமில்லாத ஒரு நகரவாழ்வை முழுமையாக உள்வாங்குவதோ, அதில் இயைந்து போவதோ எளிதில் சாத்தியமாவதில்லை. அதேநேரத்தில், அகன்றதொரு உலக வாழ்வைக் காட்டும் படைப்புகளை உருவாக்குவதில் புதிய குடிமக்கள் முயற்சி செய்கின்றனர். அதிகரித்த இலக்கியப் படைப்புகளும் இலக்கிய நிகழ்வுகளும் தமிழ் அடையாளம் பெற்றுத்தரக்கூடிய அங்கீகாரத்தைச் சமூகத்திற்கு உணர்த்தியது. இம்முயற்சிகள் குடியேறிய சமூகத்திடையே கூட்டுத் தற்காப்பு உணர்வை ஏற்படுத்தியது. மற்றொருபுறம் அரசியல், பொருளாதார, கலாசார வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு உயர்வுபெறும் வர்க்க உணர்வும் தொழில்படுகிறது. அடையாள நலனும் வர்க்க நலனும் இரண்டறக்கலந்த இந்த இயக்கத்தின் முக்கியத்துவம் உணரப்பட்டுள்ளது.
புதியவர்களின் தாக்கத்தால், உள்ளூர் இளையரிடம் தமிழ்ப் பண்பாட்டு அடையாளத்தில் ஈடுபட வேண்டிய விழிப்புணர்வு ஏற்பட்டது என்று கூறலாம். இலக்கியத்தில் ஆர்வமுள்ள பண்பாட்டு அடையாளமாகவும் ஆதாரமாகவும் தமிழ் மொழி முன்னிலைப்படுத்தப் படுவதன் மூலம் தமிழ் மொழி, இலக்கியம் மீதான ஆர்வம் கிளர்ந்துள்ளதால் இளம் தலைமுறையினர் இலக்கிய நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். மொழி சார்ந்த நிகழ்வுகளையும் நிதியாதரவுக்கான வாய்ப்புகளையும் தேசிய நூலக வாரியம், தேசிய கலைகள் மன்றம், வளர்தமிழ் இயக்கம் போன்ற அரசாங்க அமைப்புகள் அதிகளவில் ஏற்படுத்தியிருப்பதும் முக்கியப் பங்கை ஆற்றியுள்ளன.
மூலம்
- ஊர் திரும்பியவர், வேர் ஊன்றியவர்: தென்கிழக்காசியாவிலும் சிங்கப்பூரிலும் தமிழர், அருண் மகிழ்நன், நளினா கோபால் (தொகுப்பாசிரியர்கள்), இந்திய மரபுடைமை நிலையம்-கொள்கை ஆய்வுக் கழகம் இணைவெளியீடு, 2021
- தி சிராங்கூன் டைம்ஸ், ஏப்ரல் 2022
சிங்கப்பூரில் சாதி
தமிழ், சீன (ஹொக்கியன் – Hokkien) இனக்கலப்புள்ள மூதாதையரைக்கொண்ட சிங்கப்பூரரான முனைவர் ஜான் சாலமன் (John Solomon), தற்போது மெல்பர்ன் பல்கலைக்கழகத்தின் டிரினிட்டி (Trinity) கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார். அதற்குமுன் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசியராக (2016-2022) பணியாற்றினார். இளநிலைப் பட்டத்தையும் முனைவர் பட்டத்தையும் ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் (New South Wales) பல்கலைக்கழகத்தில் பெற்றார். புலம்பெயர்தல், காலனியாக்கத்தின் பண்பாட்டுத் தாக்கம், இனம் என்னும் கருத்தாக்கம் ஆகியவை குறித்து ஆய்வுகளை மேற்கொண்டுவருகிறார். தேசிய, இன அடையாளங்கள் மீதும் குறிப்பாக அவை எவ்வாறு கட்டமைத்துப் பராமரிக்கப்படுகின்றன என்பதிலும் அவற்றின் வரலாற்றுப் பின்புலங்களின்மீதும் ஆய்வு ஆர்வமிக்கவர். சிங்கப்பூரில் தீண்டாமை குறித்தும் சாதி குறித்தும் ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ இதழில் வெளியான அவரது நேர்காணலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகள் உங்கள் சிந்தனைக்கு விருந்தாக…
சிங்கப்பூரில் சாதி மறைந்துவிட்டதா?
சமுதாய வேற்றுமை, உயர்வுதாழ்வு கற்பித்தல் என்கிற அளவில் சாதி பொதுவெளியில் கிட்டத்தட்ட இங்கு மறைந்துவிட்டது. குடும்பத்தின் தேர்வுகளில் இன்னும் சாதி இருக்கிறதா என்பதைத் தற்காலச் சமுதாயத்தை ஆராயும் ஆய்வாளர்கள்தாம் சொல்லவேண்டும். எனக்குத் தெரிந்தவரை சில குடும்பங்கள், குழுக்கள் அவர்களது சாதிகளைக் குறித்து அறிந்திருக்கின்றனர். அவர்களும் அதைப் பண்பாட்டு வேறுபாட்டுக்கான காரணமாகத்தான் பார்க்கின்றனரேயொழிய உயர்வுதாழ்வு என்ற ரீதியில் அல்ல. மேலும் சிலர் சாதியை இனக்குழு அடையாளமாகக் குறிப்பிடுகின்றனர். அதுவும் இந்தியாவில் இருக்கும் உறவுக்குழுக்களோடு அடையாளப்படுத்திக் கொள்ளத்தானேயொழிய மேல்கீழ் பார்ப்பதற்கன்று. எழுபதுகளில் சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட சமூகவியல் ஆய்வுகளில் அப்போதே பலரும் சாதியைவிடப் பொருளாதார நிலையும் தொழில் நிமித்தமான பதவிகளும்தான் தங்கள் பிள்ளைகளின் கணவன் அல்லது மனைவி தேர்வுக்கு முக்கியமானவைகளாக இருக்கும் என்று தெரிவித்திருந்தனர்.
‘உயர்ந்த’ சாதியினருக்குப் பொதுவாக அவர்களின் சாதிப்பின்புலத்தைக் குறித்து அறிந்திருக்க வாய்ப்புகள் அதிகம். ஆனால் அதிலும்கூட பிராமணர் போன்ற உயர்சாதிகளிடையே இங்குத் தங்கள் சாதி குறித்த ஒருவித சங்கடமான உணர்வே நிலவுகிறது என்று சில ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதற்குக் காரணம் சமூகநீதி, ஏற்றத்தாழ்வு கற்பித்தல், பிறப்பின் அடிப்படையில் சலுகைகளை அனுபவித்தல் ஆகியவற்றுடன் சாதி பிணைந்திருப்பதே. சிலருக்குத் தங்கள் சாதி தெரிந்திருந்தாலும் பல சிங்கப்பூர் இந்தியர்களுக்குத் தம் சாதி குறித்து அறவே ஏதும் தெரியாது. அவர்களின் பெற்றோரோ மூதாதையரோ சாதி அடையாளம் தங்களோடு போகட்டும் என்று கருதிக் கவனமாகச் செயல்பட்டதன் காரணமாகத்தான் இது நடந்திருக்க முடியும். சிங்கப்பூரின் தற்காலச் சமுதாயத்தில் சாதியின் முக்கியத்துவம் எவ்வளவு குறைவாக உள்ளது என்பதையும் இது உணர்த்துகிறது.
உலக அளவில் வேறு பண்பாடுகளில் சாதி அமைப்பு உண்டா?
ஆசியப் பண்பாடுகளைக் கணக்கிற்கொண்டு பார்க்கும்போது, ஜப்பானியரின் பிறப்பின் அடிப்படையிலான ஓர் அமைப்பு இந்திய சாதியமைப்புக்கு நெருக்கமாக வருகிறது. அங்கிருந்த ‘புராகுமின்’ (Burakumin) மக்களின் அனுபவங்களை இங்குள்ள தீண்டப்படாதவர்களின் பாடுகளுக்கு இணைவைக்கலாம். நானறிந்தவரை சீன, மலாய் இனத்தினரிடையே சாதியமைப்புகள் ஏதுமில்லை. முக்கியமான பல சீனப் பேரரசர்கள் எளிமையான விவசாயிகளாக இருந்தவர்கள். அதேவேளையில் இவ்விரண்டு இனங்களிலும் வர்க்கம் ஒரு முக்கியமான விஷயமாக இருந்துள்ளது. காலனி ஆதிக்கக் காலத்தில் சீனர்களும் மலாய்க்காரர்களும் இந்தியரின் சாதியமைப்பை ஆர்வத்தின் காரணமாகக் கவனித்தனர் என்றாலும் அது இன்னொரு சமூகத்தின் வழக்கம் என்று புரிந்துகொண்டுவிட்டனர்.
பிற புலம்பெயர்ந்த இந்தியச் சமூகங்களோடு ஒப்பிடும்போது சிங்கப்பூரில் சாதி எவ்வாறு எதிர்கொள்ளப்பட்டுள்ளது?
பொருளாதார முன்னேற்றம் கண்டுவிட்ட மேலை நாடுகளுக்குச் அண்மைக் காலங்களில் புலம்பெயர்ந்தவர்களிடையே சாதி அடையாளமும் ஏற்றத்தாழ்வு கற்பித்தலும் அழுத்தமாக உள்ளது. இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் சக இந்தியரிடமிருந்து தலித்துகள் ஒதுக்குதலை எதிர்கொள்கின்றனர். பழமையான புலம்பெயர் சமூகங்களில் ஒன்றான சிங்கப்பூர் இந்திய சமூகம் பல்வேறு காலகட்டங்களில் இங்குக் குடியேறியதன் காரணமாகச் சாதி குறித்த மனப்பான்மை அடிப்படையிலேயே மாறியிருக்கிறது. சிங்கப்பூர்ச் சமுதாயத்தின் மைய நீரோட்டத்தில் இணைவது உட்பட பல காரணிகளால் பாதிக்கப்பட்ட இன்றைய சிங்கப்பூர் இந்திய சமூகம் கிட்டத்தட்ட சாதி அமைப்பை இங்கு நிராகரித்துவிட்டது.
‘சாதியைப் பண்பாடாக்குவது’ தவிர்க்கவியலாத ஒன்றா?
இல்லை. சாதியைப் பாதுகாப்பது உலகமயமாக்கச் சூழலின் தவிர்க்கப்படவியலாத விளைவாகவோ பண்பாட்டுக்கூறுகள் தேய்ந்து காணாமற்போய்விடும் என்கிற அச்சத்தால் உந்தப்பட்டோ நடப்பதாக நான் நினைக்கவில்லை. ஏதாவது ஒரு குழு அல்லது சமூகம் அதிகாரத்தையோ சலுகைகளையோ தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள வழியிருந்தால் அதை நியாயப்படுத்தவும் தொடர்ந்து பாதுகாத்துக்கொள்ளவும் கருத்தியல் ரீதியாகவும் அமைப்பு ரீதியிலும் பண்பாட்டுக்கூறுகளாக ஆக்குவதன் வழியாகவும் முயல்கிறது. உலகமயமாக்கத்துக்கு முன்னரே சாதி ஓர் உடும்புப்பிடியான சமூக நிறுவனமாக இருந்ததைக் காணமுடிகிறது. ஆகவே காலசூழ்நிலைகளுக்கு ஏற்றபடி பல்வேறு வடிவங்களில் தன்னைத் தகவமைத்துக்கொண்டு காத்துக்கொள்ளக்கூடிய வல்லமையுள்ளதாகச் சாதி இருக்கிறது. ‘சாதியைப் பண்பாடாக்குதல்’ அல்லது ‘சாதி ஓர் இன அடையாளம் மட்டுமே’ போன்ற சொல்லாடல்கள் பல நேரங்களில் சாதியின் தகவமைத்துக்கொள்ளும் திறனைப் புலப்படுத்துவதாக இருப்பதாகவே நினைக்கிறேன்.
மூலம்
தி சிராங்கூன் டைம்ஸ், டிசம்பர் 2019 https://www.nlb.gov.sg/main/article-detail?cmsuuid=6046f6d0-7c49-493f-9626-e7b14697dd5e
சிங்கப்பூரில் நீங்கள் எந்த வகை இந்தியர்?
உலகளாவியப் புலம்பெயர்தல் நம் சமகால வாழ்க்கையின் ஒரு பகுதியாக ஆகிவிட்டது. அதுவும் மக்கள்தொகை சரியாமல் பேணிக்கொள்ளத் தேவையான கருவளவிகிதம் இல்லாத சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்குப் பிற நாடுகளிலிருந்து புலம்பெயர்ந்து மக்கள் வருவது தவிர்க்கவியலாத ஒன்றாகிவிட்டது. புதிய சூழலில் தன்னைப் பொருத்திக்கொள்வதில் புலம்பெயர்ந்தோர் பல சவால்களை எதிர்கொள்கின்றனர். மேலும், புதியமண்ணில் அவர்கள் வேர்விடத் தொடங்கும்போது அங்குள்ள சமுதாயத்துடன் ஒருங்கிணைவது அடுத்தகட்டச் சவால். இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்குப் புலம்பெயர்தல் கணிசமாக அதிகரித்தக் கடந்த கால்நூற்றாண்டில், உள்ளூர் இந்தியர்-புலம்பெயர் இந்தியர் ஒருங்கிணைவும் அவ்வாறு பல சவால்களைத் தொடர்ந்து எதிர்கொண்டது, இப்போதும் எதிர்கொள்கிறது. இந்த ஒருங்கிணைவு தொடர்பான சிக்கல்களையும் உராய்வுகளையும் ஆராய்ந்துள்ள முனைவர் லாவண்யா கதிரவேலு, தி சிராங்கூன் டைம்ஸ் இதழில் (மார்ச் 2021) ஒரு நேர்காணல் அளித்துள்ளார். அதிலிருந்து சில பகுதிகளைச் சுருக்கி இங்கே தந்துள்ளோம் – உங்கள் சிந்தனைக்கு விருந்தாக…
ஒருங்கிணைவை எப்படி வரையறுப்பது?
ஒரு சமுதாயத்தின் பொதுவான வழமைகள், விழுமியங்கள், அமைவுகள் (structures) ஆகியவற்றோடு தனிமனிதர்கள் அல்லது சமூகங்கள் எந்த அளவுக்குப் பொருந்திப் போகின்றனர் என்பதையே சமுதாய ஒருங்கிணைவுக்கு ஒரு பொது வரையறை எனலாம். நடைமுறையில் ஒருங்கிணைவை அளக்கும் அளவீடுகள் என்றால், புலம்பெயர்ந்த ஒருவர் புதிய மண்ணின் மொழியைக் கற்பது, கல்வி பெறுவது, ஊழியரணியுடன் ஒன்றிணைவது ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இவை ஒருங்கிணைவுக்கு உரமூட்டும் வழிகளாக உள்ளன. மேலும், வழிபாட்டுத் தலங்கள், சமூகக் குழுக்கள் உள்ளிட்ட உள்ளூர் அமைப்புகளின் வழியாகச் சமுதாயத்தில் நட்புறவு, தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்வதும் ஒருங்கிணைவுக்கான வழிகளே.
சிங்கப்பூரில் ஒருங்கிணைவு எப்படி உள்ளது?
பிற நாடுகளோடு ஒப்பிடும்போது சிங்கப்பூரில் புலம்பெயர்ந்தோர் ஒருங்கிணைவு மிக நன்றாக உள்ளது என நினைக்கிறேன். ஒருங்கிணைதல் தொடர்பிலான வன்முறைச் சம்பவங்கள் ஏதுமில்லை என்பதோடு அன்றாட வாழ்க்கைப் பயணமும் சுமூகமாகவே நீடிக்கிறது. இந்த சுமூகமான பயணம் எப்போதுமே இப்படித்தான் இருக்கும் என்று அலட்சியமாக இருந்துவிடக்கூடாது என்பதே சிங்கப்பூருக்கான சவால். மேலும், ஒருங்கிணைவு விஷயத்தைப் பொறுத்தவரை, மேம்போக்காகத் தென்படுவனவற்றை மட்டுமின்றி அதனடியில் மறைந்திருக்கும் உரசல்களைக் கண்டறிவதும் அதற்கான தீர்வுகளை நாடுவதும்கூடச் சவாலானதுதான். ஒரே தாய்மண்ணைக் கொண்டவர்கள் என்பதோ ஒரே இனம் என்பதோ புலம்பெயர்தலின்போது அவர்களுக்குள் ஒருங்கிணைவை எளிமையாக உண்டாக்கிவிடும் என்று அனுமானிப்பது பிரச்சனைக்குரியது. என்னுடைய ஆய்வின் அடிப்படையிலும் சரி, பிற ஆய்வாளர்களின் முடிவுகளின்படியும் சரி இக்கருத்து தொடர்ந்து உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஒரு நாட்டிலுள்ள சமூகங்களுக்கிடையே நல்ல ஒருங்கிணைவு இல்லை என்றால், ‘இது நமக்கான நாடு’ என்னும் பிணைப்பும் விசுவாசமும் சில குழுவினரிடையே குறைவாக உணரப்படுகிறது என்று பொருள். அத்தகைய சூழல் ஒருமைப்பாட்டுடன்கூடிய தேசத்தை உருவாக்கும் முயற்சிக்குக் குந்தகம் விளைவிக்கலாம். இவ்விஷயத்தில் இந்தியச் சமூகத்திற்குள்ளேயே குறிப்பிடத்தக்க அளவில் இறுக்கம் இருப்பதையும் அதனால் உரசல்கள் நிகழ்ந்துள்ளதையும் ‘Navigating Differences – Integration in Singapore’ என்னும் நூலிலுள்ள எனது இயலில் விவாதித்துள்ளேன். அதில் சிங்கப்பூரில் நிகழ்ந்த சம்பவங்களையே எடுத்துக்காட்டுகளாவும் அளித்துள்ளேன். ஆர்வமுள்ளவர்கள் வாசித்துப் பார்க்கலாம்.
ஒருங்கிணைவு தொடக்ககாலச் சிக்கலா? நிரந்தரப் பிரச்சனையா?
உள்ளூர் இந்தியர்-புலம்பெயர் இந்தியர் ஒருங்கிணைவு, சிங்கப்பூரில் முதல் தலைமுறை புலம்பெயர்ந்தோர் மட்டுமே எதிர்கொள்ளும் ஒரு பிரச்சனை எனச் சிலர் கருதுகின்றனர். அப்படியில்லை. புலம்பெயர்ந்தோரில் முதல் தலைமுறையினர் அனைவருக்கும் அதிநிச்சயமாக இங்கே ஒருங்கிணைவுச் சிக்கல் உள்ளது என அனுமானிக்கக் கூடாது. சிலர் மற்றவர்களைவிட விரைவாக உள்ளூர் இந்தியச் சமூகத்துடன் ஒருங்கிணைந்துவிடுகின்றனர். ஆகவே பொதுமைப்படுத்துவதில் கவனம் தேவை. புலம்பெயர்ந்தோருக்கு, புதிய மண்ணின் சமுதாயத்துடன், இரண்டாம் தலைமுறையில் தொடங்கி அடுத்தடுத்த தலைமுறைகளில் மேம்பட்ட ஒருங்கிணைவு நிகழ்வதைப் புலம்பெயர்வு குறித்த பெரும்பாலான ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. இருப்பினும் இதற்கு விதிவிலக்குகளும் உண்டு. குறிப்பாக இனம், வர்க்கப் பாகுபாடு ஆகியவற்றின் அடிப்படையில் அமைவு ரீதியான கட்டுப்பாடுகளைக் கொண்ட சமுதாயங்களில் புலம்பெயர்ந்தோர் பல தலைமுறைகளாக மையப்போக்குடன் ஒன்றிணைய இயலாமலேயே நீடிக்கின்றனர். ஒரே இன மக்களிடையே உள்ள பண்பாட்டு வேறுபாடுகள் அவர்களுக்குள் சில எல்லைக்கோடுகளை வரைந்துகொள்வதற்கும் மேல்கீழ் பார்ப்பதற்கும் வழிசெய்கின்றன. சமூக-பொருளாதார நிலை, மதம், மொழி, பிறந்தநாடு ஆகியவையும் பிரிவினைகளை உருவாக்குகின்றன. சிங்கப்பூரின் சீன சமூகத்திலும் இது உண்டு. மேலும், சிங்கப்பூரிலேயே பிறந்து வளர்ந்த இந்தியச் சமூகத்தினரிடையே பிரிவினைகளோ மேல்கீழ் பார்ப்பதோ கிடையாது என்று நாம் அனுமானித்துக்கொள்ளவும் கூடாது.
இந்தியாவைக் குறித்த உள்ளூர்ப் பார்வையின் தாக்கம்
உள்ளூர் இந்தியர் உள்ளிட்ட சில சிங்கப்பூரர்களுக்கு, இந்தியா மோசமான சுகாதாரச் சூழலும், பாலின சமத்துவமின்மையும், உற்பத்தித் திறன் குறைபாடுகளும் கொண்ட ஒரு ‘மூன்றாம் உலக’ நாடு என்னும் எண்ணமுண்டு. அத்தகைய எண்ணம் அங்கிருந்து சிங்கப்பூருக்குப் புலம்பெயரும் இந்தியரைக் குறித்து ‘இவர்கள் இப்படித்தான்’ (stereotypes) என்னும் கண்ணோட்டத்தை அவர்கள் உருவாக்கிக்கொள்ள வழிவகுக்கிறது. இவ்விரு குழுவினரிடையே சமுதாய அளவிலான உறவுகள், தொடர்புகள் மேம்படுவதையும் அக்கண்ணோட்டம் பாதிக்கிறது. மொழி, மதம், உணவு போன்ற பல விஷயங்கள் பல சமயங்களில் சிங்கப்பூர் இந்தியருக்கும் புலம்பெயர் இந்தியருக்கும் பொதுவானவை. மேலும் இந்தியச் சமூகத்திற்குள் பண்பாட்டு மேம்பாடு, இந்நாட்டுக்குப் பங்களிக்கும் வேட்கை ஆகியவற்றையும் பொது அம்சங்களாகக் குறிப்பிடலாம். இருப்பினும் வேறுபட்ட பின்புலங்களைக்கொண்ட பல நாடுகளிலிருந்து வருவோர் பல்வேறு வேறுபாடுகளோடுதான் வருவர் என்ற அனுமானத்தோடு தொடங்குவதே சரியானவழி என நினைக்கிறேன். பிறகு அந்த வேறுபாடுகளைத்தாண்டி அவர்களோடு ஒருங்கிணைந்து வாழ்வதற்கான வழிகளை நாம் கண்டறியவேண்டும்.
தகுதிக்கு முன்னுரிமை அளிப்பது ஒருங்கிணைவை பாதிக்குமா?
தகுதிக்கு முன்னுரிமை (meritocracy) என்னும் அடிப்படியில் நிகழும் புலம்பெயர்வு சமுதாய ஒருங்கிணைவை எவ்வாறு பாதிக்கிறது என்பதைக் குறித்து நான் ஆராயவில்லை. ஆனால் சிங்கப்பூரும் ஏனைய பல நாடுகளையும்போலவே மேலான தொழில்திறன் உள்ளவர்களைக் குடியேற அனுமதிக்கிறது. அவர்களின் மதிப்பைச் சிங்கப்பூர் உணர்ந்திருக்கிறது. ஆகவே தகுதியடிப்படையிலான சேர்க்கை என்பதைத் திறமைசாலிகளைக் கைப்பற்றுவதில் உலக நாடுகளுக்கிடையிலான போட்டி எனலாம். ஆங்கிலம் பேசும் திறன் சமுதாய ஒருங்கிணைவில் முக்கியமானதாகக் கருதப்படுவதைக் கணக்கெடுப்புகள் காட்டுகின்றன. அதைப்போலவே சிங்கப்பூரின் தனித்துவத்துடன் பேசப்படும் ஆங்கிலமான சிங்கிலீஷைப் பயன்படுத்துவதும் சிங்கப்பூரர் என்ற அடையாளத்தை வலுப்படுத்தும் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. ஆகவே சரியான வகையில் அல்லது போதிய அளவில் சிங்கிலீஷ் பயன்படுத்த இயலாவிட்டால் “சிங்கப்பூரர்தன்மை” இல்லாதவர் என ஒருவர் கருதப்படலாம். இருப்பினும், சிங்கிலீஷிலும் பல வகைகள் இருக்கின்றன என்பதை மொழியியலாளர்கள் எடுத்துக்காட்டியுள்ளனர். ஆகவே ஒரேயொரு தரப்படுத்தப்பட்ட சிங்கிலீஷ் பயன்பாட்டை எதிர்பார்ப்பதும் பிரச்சனைக்குரியதே.
இனக் கண்ணோட்டமும் தொடர்பு கோட்பாடும்
ஒருங்கிணைவை உண்டாக்குவதில் பல காரணிகள் ஒருசேரப் பங்காற்றுகின்றன. மேலும் ஒருங்கிணைவு என்பது நீண்டகால அளவில் தொடர்ந்த முயற்சிகளைக் கோரும் ஒன்று. அரசுக்கொள்கை என்னும் நிலையில் பார்த்தால், சிங்கப்பூரில் பல்வேறு இனங்களை வகைப்படுத்தும் முறைமையை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய காலம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன். முன்னொரு காலத்தில் இருந்த அதே அர்த்தத்தில் இன்று அந்த இன வகைப்படுத்தல்கள் பார்க்கப்படுவதில்லை. உங்களிடமிருந்து இனம், மொழி, மதம் போன்ற பல்வேறு விதங்களில் வேறுபடும் மக்களோடு உங்கள் அன்றாடத் தொடர்புகள் எந்த அளவுக்கு அதிகரிக்கிறதோ அந்த அளவுக்குக் அவர்களைக் குறித்த எதிர்மறை எண்ணங்கள் குறையும். இதுவே ‘தொடர்பு கோட்பாடு’ (Contact Theory). பல இனங்கள் கலந்து வசிப்பதைத் திட்டமிட்டும் கட்டாயமாகவும் உறுதிப்படுத்தும் நமது வீடமைப்புப் பேட்டைகளில் இக்கோட்பாடு குறிப்பிடத்தக்க அளவுக்குச் செயல்பட்டுள்ளதாகவே தெரிகிறது. உள்ளூர் மக்களுக்கும் புலம்பெயர்ந்தோருக்கும் இடையே அன்றாட ஊடாட்டங்களுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கவும் ஊக்குவிக்கவும் முனைந்தால் ஒருங்கிணைவு மேம்பாட்டில் சாதகமான தாக்கத்தை விளைவிக்கலாம்.
பண்டையத் தமிழரின் புத்தாண்டு தையா, சித்திரையா, ஆவணியா?
வாதத்துவக்கம்
சில ஆண்டுகளுக்கு முன்பு, சித்திரை முதல் நாளன்று சமூக ஊடகத்தளமொன்றில் நான் தமிழ்ப் புத்தாண்டையொட்டிய ஒரு வாதத்தில் சிக்கிக் கொண்டேன். சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு கிடையாது, இது இந்துக்களின் புத்தாண்டு என்று சிலர் சாதித்தனர். நானோ சமணர்களும் பௌத்தர்களும் இதனைக் கொண்டாடும் பொழுது (Balbir 2020) எந்த வகையில் இதனை இந்துக்களின் புத்தாண்டு எனக் கூறமுடியும் என வாதிட்டேன். அதோடு இந்து என்கின்ற அடையாளம் அண்மையில் தோன்றிய அடையாளமாகும். இது தமிழ்ச் சொல் கூட கிடையாது. இருந்தாலும் தை முதல் நாளே தமிழர்களின் புத்தாண்டு என்னும் திண்ணமான நம்பிக்கை சிலாிடம் நிலவி வருகின்றது. இதற்கு ஆதாரமாகத் “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்னும் பழமொழியைச் சுட்டிக்காட்டுவர். அதோடும் பொங்கலுக்குத்தான் பழைய பொருட்களைக் கழித்துக்கட்டும் வழக்கமும் வெள்ளையடிப்பதும் உண்டு. இது நியாயமான வாதம்தான் – ஆனால் இந்த வாதம் மட்டும் போதுமா?
வேளாண்குடியினரைப் பொறுத்தவரையில் பொங்கல்தான் முதன்மை பெற்ற விழா என்று கூறலாம். ஜாதிமத வேறுபாடுகளையும் கடந்து சமூக விழாவாக பொங்கல் விளங்குகிறது. ஆனால் பொங்கல் தமிழர்களின் புத்தாண்டாகுமா? இந்த வாதத்திற்கான ஆதாரங்கள் என்ன? பொங்கலையொட்டிக் கல்வெட்டுச் சாசனங்கள், இலக்கியக் குறிப்புகள் அல்லது அகழ்வாராய்ச்சி தரும் செய்திகள் ஏதேனும் உண்டா? புத்தாண்டையொட்டிய இந்தச் சர்ச்சை எப்பொழுது துவங்கியது?
பெயரும் பொருளும்
ஒருவரது அடையாளத்தின் முக்கியக் குறியீடு அவரது பெயரேயாகும். இருப்பினும், அதன்பின் உள்ள பொருளை அறிய முனைவதில்லை. பல்லினக் கலாச்சாரங்களைக் கொண்ட சமூகத்தில் வாழ்ந்தாலும், பிற இனத்தினர் பெயரிடும் வழக்கங்களை நாம் அறிந்திருக்கவில்லை என்றே கூறவேண்டும். தொடக்கமாக, இந்தியச் சமூகத்தின் பெயர் வைக்கும் பழக்கங்கள் குறித்து அறிவோம். இந்தியப் பெயர்கள் குறித்த ஓர் அறிமுகப் பயணத்தைச் சிங்கப்பூர் தேசிய நூலகத்தின் மூத்த நூலகர் மலர்விழி இளங்கோவன் நமக்கு வழங்குகிறார்.
[This article was first published in the Singapore Libraries Bulletin by the Library Association of Singapore in October 2021, and reproduced here with permission.]
பெயர்கள் பலவிதம்!
ஒருவர்தம் பெயர் அவர்தம் அடையாளத்தைக் குறிப்பதில் மிகமுக்கிய இடம்பெற்றுள்ளது. இருப்பினும், பெயரில் அடங்கியுள்ள பல்வேறு சிறப்பம்சங்களை நாம் பெரும்பாலும் அறிந்திருப்பதில்லை. அதோடு, பல்லினப் பண்பாட்டுச் சூழலில் வாழ்ந்தாலும், நாம் பெரும்பாலும் பெயர்களில் புதைந்துள்ள வழக்காறுகளை உணர்ந்து வைத்திருப்பதுமில்லை. நமது இந்தியச் சமூகத்தின் தனிநபர் பெயர்களில் உள்ள வழக்காறுகளைத் தெரிந்துகொள்வதற்கான அறிமுகம் இது. தேசிய நூலக வாரியத்தின் மூத்த நூலகரான மலர்விழி இளங்கோவன், இந்தியப் பெயர்கள் குறித்த ஓர் அறிமுகப் பயணத்திற்கு நம்மை அழைத்துச் செல்லவிருக்கிறார்.
இக்கட்டுரை, சிங்கப்பூர் நூலக மன்றத்தால் (Library Association of Singapore) சிங்கப்பூர் நூலகங்களுக்கான இதழில் (Singapore Libraries Bulletin) முதன்முதலாக அக்டோபர் 2021-இல் வெளியிடப்பட்டது. இங்கு மறுபதிப்புச் செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பேசாதிருந்து பேசிய பேச்சுத்தமிழ்: சிங்கப்பூர்த் தமிழ்க்கல்வியும் ஷிஃப்மனும்
எழுத்துத் தமிழ், பேச்சுத்தமிழ் என இரண்டு வகையிலும் தமிழ் புழங்கப்படுகிறது. அது ஓர் இரட்டை வழக்கு (diglossic) மொழி என்பது பலரும் அறிந்ததே. இருப்பினும், சிங்கப்பூர்த் தமிழ்க்கல்வியில், சிலகாலத்துக்கு முன்வரை, பேச்சுத்தமிழுக்குப் பாடத்திட்டத்தில் இடமே இல்லாமலிருந்தது. கல்வியாளர்கள் பலர் அதனை ஒதுக்கி வைத்தனர். ஆனால், இன்று தமிழ்க் கல்வியில் பேச்சுத்தமிழுக்குத் தக்கதோர் இடம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் பெரும் மாற்றத்திற்குக் காரணகர்த்தாவாக இருந்தவர்களுள் மிக முக்கியமானவர் அமெரிக்கப் பேராசிரியர் ஹாரல்டு எஃப் ஷிஃப்மன் (Harold F Schiffman). அவர் டிசம்பர் 2022இல் காலமானதையொட்டி, இணைப் பேராசிரியர் சீதா லட்சுமி, தி சிராங்கூன் டைம்ஸ் இதழில் (ஜனவரி 2023) ஒரு நீண்ட கட்டுரை எழுதியிருக்கிறார். அக்கட்டுரையின் சில பகுதிகளைச் சுருக்கி இங்கே தந்துள்ளோம் – உங்கள் சிந்தனைக்கு விருந்தாக.
பேச்சுத்தமிழ் எதற்கு?
சிங்கப்பூரின் பள்ளிகளில் தமிழ் வகுப்புகளில் எழுத்துத்தமிழே பெரும்பாலும் கற்பித்தல் ஊடகமாகவும் தொடர்புமொழியாகவும் ஆசிரியர்–மாணவரிடையே இடைவினையாடல் (Interactive) மொழியாகவும் இருந்தது. மாணவர்கள் வகுப்பின்முன் படைக்கும்போதும் பேச்சுப் போட்டிகள், விவாதப் போட்டிகள் போன்றவற்றிலும் எழுத்துத்தமிழே இடம்பெற்றது. இன்றும் இத்தகைய போக்கு உண்டு. இவர்களது வாழ்வில் பேச்சுத்தமிழ் என்பது கால முழுதும் பேசாத்தமிழாகவே ஆகிப்போனது. ஆனால், எழுத்துத்தமிழ் மட்டுமே ஒரு தொடர்புமொழியாகத் தமிழரிடையே நீடிப்பது சாத்தியமா?
பிறந்தது முதல் கேட்டும், எழுத்தை அறியும் முன்பே பேசவும் செய்த பேச்சுமொழியை எழுத்துமொழிக்காகத் தாரைவார்க்க இயலாது என்கிற கருத்துடைய அமெரிக்கப் பேராசிரியர் ஹாரல்டு எஃப் ஷிஃப்மனுக்குச் சிங்கப்பூரின் தமிழ்ச் சூழல் பெரும் வியப்பைத் தந்தது. அதனை அவர் ஆராயத் தொடங்கினார். அவர் கேட்டுக்கொண்ட கேள்விகள்: பன்மொழித்துவச் சமூகத்தில் ஒரு சிறுபான்மைச் சமூகம் அதன் மொழியை எவ்வாறு காத்துக்கொள்வது? பராமரிப்பது? அதன் சவால்கள் எவையெவை? அச்சவால்களைச் சமாளிக்கும் வழிமுறைகள் எவையெவை?
தரமான பேச்சுத்தமிழ்
இரட்டை வழக்கு என்பது தமிழில் மட்டுமின்றி அரபி, சுவிஸ் ஜெர்மன், வங்காளம், ஹிந்தி, மங்கோலியம், பர்மியம் போன்ற பல்வேறு மொழிகளில் இடம்பெற்றுள்ளது. தமிழில் பேச்சுமொழியைக் கொச்சைமொழி என்று மொழியியலாளர்கள் பலர் எண்ணிய காலத்தில், பேச்சுமொழி வகைகளுக்குள்ளேயே தரமான பேச்சுத்தமிழும் இருக்கிறது என்றும் அது ஏற்கெனவே புழக்கத்தில் இருக்கிறது என்றும் மொழியியல் அறிஞர் ஷிஃப்மன் ஆதாரங்களுடன் வாதிட்டார். இல்லங்களிலும் கல்விக்கூடங்களிலும் வெளியிலும் தரமான பேச்சுமொழி எவ்வாறு புழங்கப்படுகிறது, மேடை நாடகங்களிலும் திரைப்படங்களிலும் அம்மொழிநடை எவ்வாறு உள்ளது, நூல்களிலும் படைப்பிலக்கியங்களிலும் எவ்வாறு அமைந்துள்ளது, பேச்சுமொழியும் எழுத்துமொழியும் அச்சு ஊடகங்களில் எவ்வாறு இடம்பெற்றுள்ளன என்று விரிவாக ஆராய்ந்து, தரமான பேச்சுத்தமிழ் என்று ஒருவகை உள்ளதைக் கேள்விக்கிடமின்றி நிறுவினார். பேச்சுத்தமிழில் பேசும்போது, தமிழர் உரையாடல்கள் இயல்பாகவும் நயம்படவும் சுவைபடவும் அமைவதைக் கண்ணுற்ற ஷிஃப்மன், உலகத்தரம் வாய்ந்த ஆய்விதழ்களில் கட்டுரைகளை எழுதி, இந்த வகைக்குக் கூடுதல் அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தார் எனலாம்.
சிங்கப்பூரில் ஷிஃப்மன்
பேராசிரியர் ஷிஃப்மன் அனைத்துலகக் கல்வியாளர் மன்றத்தின் ஃபுல்பிரைட் (Fulbright) ஆய்வுக் கல்விமானாக 1994இல் சிங்கப்பூர், மலேசியா வந்தபோது, அவர் சிங்கப்பூரில் தமிழ் வகுப்பறைகளுக்குச் சென்று பாடங்களைப் பார்த்துள்ளார். ஆசிரியர்கள் சிலர் தம்மையறியாமல் ஆங்காங்கு தரமான பேச்சுத்தமிழைப் பயன்படுத்திய நிலையையும் பார்த்திருக்கிறார். கல்வி அமைச்சில் அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினார். சமூக அளவில் தமிழ்மொழியின் பயன்பாடு எவ்வாறு இருக்கிறது என்றும் அறிந்திருக்கிறார். இவ்வாறு மலேசியாவிலும் தமிழகத்திலும் களஆய்வு மேற்கொண்டு தரவுகளைச் சேகரித்து ஆராய்ந்திருக்கிறார்.
ஆசிரியரை மையமாகக்கொண்ட அன்றைய கல்வி முறையுடன் ஒப்பிடும்போது மாணவரை மையமாகக் கொண்ட இன்றைய கல்விமுறையில் பேச்சுத்தமிழ் இயல்பாக இடம்பெற்று வருகிறது. மாணவர்களைத் தமிழில் பேசவிடுவது கற்பித்தலின் முக்கிய நோக்கமாக இருக்கவேண்டும் என்றார் ஷிஃப்மன்.
தமிழ்க் கல்வியில் பல ஆய்வுத் திட்டங்களுக்கு ஷிஃப்மன் ஆலோசகராக இருந்துள்ளார். தேசியக் கல்விக்கழகத்தில் 2003-2004 காலப் பகுதியில் ஆசிரியவியல், பயிற்சி குறித்த ஆய்வு மையத்தில் தமிழுக்கு மதிப்புக்கூட்டல், கல்வியில் வளம்சேர்த்தல், தமிழைத் தொடர்ந்து வாழும் மொழியாக வைத்திருத்தல் போன்ற நோக்கங்களை முன்வைத்துத் தமிழ்த் துறையின் விரிவுரையாளர்களுடன் ஷிஃப்மன் பல உரையாடல்களை நடத்தி வழிகாட்டியுள்ளார்.
சிண்டா மறுஆய்வுக்குழுவின் அறிக்கையில் (1996) தரமான பேச்சுத்தமிழின் பயன்பாடு குறித்து அக்குழுவின் தலைவரும் கல்வியாளரும் சமூகக் கவனிப்பாளருமான அருண் மகிழ்நன் பரிந்துரைத்தது குறிப்பிடத்தக்கது. மேலும், 2005இல் தமிழ்க் கல்வி தொடர்பான இன்னொரு மறுஆய்வு அறிக்கையும் படித்தவரும் பாமரரும் அன்றாடம் பேசும் பேச்சுத்தமிழ் தமிழ் வகுப்பில் இடம்பெறப் பரிந்துரைத்ததோடு குறிப்பாக அது தரமான பேச்சுத்தமிழாக அமைவது அவசியம் என்றும் வலியுறுத்தியது.
பள்ளிகளில் பேச்சுத்தமிழ்
தரம் வாய்ந்த பேச்சுத்தமிழ், 2008க்கான தொடக்கநிலைத் தமிழ்மொழிப் பாடத்திட்டத்தில் வலியுறுத்தப்பட்டதிலிருந்து, எழுத்துத்தமிழில் ஒரு பாடத்தை வாசிக்க வேண்டியிருந்தாலும் அப்பாடத்தைப் பற்றிய உரையாடல்கள், மாணவரிடையே கலந்துரையாடல்கள் ஆகியன தரமான பேச்சுத்தமிழில் அமைந்தன. இதன் தாக்கம் இன்று தமிழ் வகுப்பறைகளிலும் பள்ளிகளுக்கு வெளியே சமூகத்திலும் பிரதிபலிப்பதைக் காணலாம். மாணவர்கள் தரமான பேச்சுத்தமிழை வீட்டிலும் வீட்டில் பேசாவிட்டாலும் குறைந்தது வகுப்பறையிலாவது பேசுவதற்கும் வாய்ப்புவசதிகள் இன்று நமக்கு உள்ளன.
சிங்கப்பூரின் இல்லங்களில், தமிழ்மொழிப் புழக்கத்தைக் கைவிடல் கடந்த கால்நூற்றாண்டில் அதிகமாக இருந்தாலும் தமிழ் வகுப்பறைகளில் தமிழ் பேசப்படுவதும் பேச்சுத்தமிழில் பாடங்கள் இடம்பெறுவதும் தமிழைத் தொடர்ந்து தக்கவைப்பதற்கு உதவியிருப்பது ஆதாரங்களுடன் மெய்ப்பிக்கப்பட்டு வருகின்றது. ஒரு மாற்றத்தை, மேம்பாட்டைச் சமூகத்திற்குள் கொண்டுவருவதற்குக் கல்வித்துறையும் வகுப்பறையும் ஏற்ற இடங்களே என்பது மீண்டுமொருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் இட்ட பாதை
சிங்கப்பூரில் நடைமுறைப்படுத்தப்பட்ட தரமான பேச்சுத்தமிழ் இன்று புலம்பெயர்ந்து வாழும் பிற தமிழ்ச் சமூகங்களிலும் செயல்வடிவம் பெற்றுவருகிறது. திரைப்பட, மேடை நாடக வசனங்களை எந்நாட்டில் வாழும் தமிழ்ச் சிறாராலும் புரிந்துகொள்ளமுடிகிறது எனில், அதுவே தரமான பேச்சுத்தமிழின் வெற்றி. இங்கிலாந்தில் பேச்சுத்தமிழிலேயே கட்டுரை எழுதும் போட்டியைச் சிலர் நடத்துகிறார்கள். தங்களுக்குத் தேவையான பேச்சுத்தமிழ்தான் மூச்சுத்தமிழ் என்று புலம்பெயர்ந்த தமிழர் கூறுகின்றனர். தரமான பேச்சுத்தமிழின் வீரியம் தமிழ் பேசும் மாணவர்களுக்குப் பேசுவதில் உற்சாகத்தையும் பிடிப்பையும் கொண்டுவருவதைக் கண்டு இன்று மொழியியலாளர்கள் பலரும் உற்சாகம் தெரிவிக்கின்றனர். அவ்வகையில் சிங்கப்பூர் பிற நாடுகளுக்கு முன்னோடியாக அமைந்துள்ளது.
பேராசிரியர் ஷிஃப்மனுக்கு நன்றி!
“… my suggestion that spontaneity and creativity will not come in Tamil unless it is used…” தன்னியல்பாகப் பேசப்படும் தரமான பேச்சுத்தமிழே தமிழை வாழும் மொழியாக்கும் என நாம் உணர வழிவகுத்த, அண்மையில் மறைந்த, பேராசிரியர் ஷிஃப்மனுக்கு நமது நன்றிக் கடப்பாட்டைக் காணிக்கை ஆக்குவோம்!
மூலம்: https://serangoontimes.com/january-2023-article/
துர்கா பூஜையின் வரலாறு
துர்காதேவி, அசுர குல அரசன் மகிஷாசுரனை வதம்செய்வதைக் கொண்டாடுவதே துர்கா பூஜை என்று அழைக்கப்படுகிறது. நிலஞ்சானா குப்தா வழிநடத்திய இவ்விணையக் கருத்தரங்கில், சிங்கப்பூரில் துர்கை வழிபாட்டைச் சார்ந்த பல்வேறு வழக்கங்களைப்பற்றியும் துர்கா பூஜை பண்டிகையைப்பற்றியும் நாளடைவில் ஏற்பட்டுள்ள அதன் உருமாற்றத்தைப்பற்றியும் விளக்கப்பட்டுள்ளன. இப்பண்டிகைக்கும் சமூகத்தின் வழக்கமான நவராத்திரி, சரஸ்வதி போன்ற பூஜைகளுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை அறியலாம்.
series
Story of Durga Puja
Durga Puja celebrates the victory of the goddess Durgaover the demon king Mahishasura. This webinar by Nilanjana Gupta offers insights about the various practices associated with the worship of Durga in Singapore as well as the observance of the festival and its transformation over the years. Please note the similarities and differences between the Tamil community practice of Navarathri and Saraswathi Puja.
நினைவுமலர்
தமிழ்மொழியில் ‘நினைவுமலர்‘ எனப்படுவது நினைவுகளைக் கொண்ட நூலை அல்லது நினைவுகளைக் கொண்ட மலர்க்கொத்தைக் குறிக்கிறது. இது மறைந்தவர்களுக்கான ஓர் அஞ்சலி. நினைவுமலர்களை வெளியிடுவது இலங்கைத் தமிழர் சமூகத்தில் பல்லாண்டுக்கால வழக்கமாயினும், மற்றத் தமிழ்ச் சமூகங்களில் அதிகம் கடைப்பிடிக்கப்படாத ஒன்றே. இக்கட்டுரையில், இவ்வழக்கத்தைப் பற்றிய சுவாரசியமான அம்சங்களைக் காண்பீர். (இலங்கைத்) தமிழர் சமூகத்தைச் சேர்ந்த சிறந்த அறிஞரால் எழுதப்பட்டுள்ளது. முனைவர் அருண் பாலா மெய்யியல் துறையில் தேர்ச்சிபெற்று, சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்திலும் டொராண்டோ பல்கலைக்கழகத்திலும் கற்பித்துள்ளார். முனைவர் பாலா, நாகரீகங்களின் உரையாடலைக் குறித்த தலைப்பில் பல கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். நம் பண்பாட்டின் பல்வேறு அம்சங்களைப் பார்வையாளர்களுக்கு எடுத்துரைக்கும் நோக்கத்தில் ‘சிந்தனைக்கு விருந்து’ என்னும் அங்கம் இடம்பெற்றுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளைப் படித்து மகிழ்வீர்கள் என நம்புகிறோம்.
இக்கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை முனைவர் அருண் பாலாவுடன் arun.bala@yahoo.com மின்னஞ்சல் மூலம் பகிர்ந்துகொள்ள வரவேற்கிறோம்.
Ninaivumalar in Tamil refers to a Book of Memories or Bouquet of Memories. It is a tribute to the departed. The publication of Ninaivumalars is a long tradition among the Ceylon (Sri Lankan) Tamil Community but uncommon among other Tamils. In this essay, you will find some fascinating aspects of this special tradition. It is written by a leading scholar from the community. Dr Arun Bala is a philosopher by training and has taught at the National University of Singapore and University of Toronto. Dr Bala has published extensively on dialogue of civilisations. Hope you enjoy this offering in our series Food For Thought which is designed to bring different aspects of culture to our audience.
You’re welcome to share your comments and feedback with the author at arun.bala@yahoo.com

