அமுதசுரபி | அமுதசுரபியிலிருந்து எடுக்கப்படும் உணவு எடுக்க எடுக்கப் பெருகிக்கொண்டே போகும் சிறப்புடையது. |
அறம் | அறம் என்னும் சொல்லை அறு + அம் என்று பிரிப்பார்கள். தவிர்க்கப்பட வேண்டியவற்றை வாழ்க்கையிலிருந்து அறுக்கப்படுவதை அறம் என்போம். அறு என்னும் சொல்லுக்கு அறுத்துச் செல்,வழியை உண்டாக்கு,துண்டி,வேறுபடுத்துஎன்று பல விளக்கங்கள் உள்ளன.உண்டாக்கு,உருவாக்குஎன்னும் பொருள்களிலும் அச்சொல் வழங்கப்படுகிறது. எனவே,அறு என்னும் சொல்லே அறம் என்னும் சொல்லாகத் திரிகிறது. |
ஆடு புலி ஆட்டம் | முக்கோண வடிவும் அதற்கிடையில் நீள் சதுர வடிவும் வரையப்பட்டு ஆடு புலி ஆட்டம் விளையாட்டு விளையாடப்படுகிறது. அக்காலத்தில்,தரையில் இந்தக் கட்டங்களை வரைந்து விளையாடினார்கள். ஆடு புலி ஆட்டத்தின் பெயர் உணர்த்துவதைப் போல் 3 புலிகளும் 15 ஆடுகளும் இந்த விளையாட்டில் காய்களாக இருக்கும். இரண்டு அணிகளையும் வித்தியாசப்படுத்தும் வகையில் காய்கள் அமைய வேண்டும். இருவர் பங்குகொள்ளும் இவ்விளையாட்டில் ஒருவர்‘ஆடாகவும்’இன்னொருவர்‘புலியாகவும்’இருக்க வேண்டும். |
ஆன்மநேயம் | மனிதன் சகமனிதனிடம் காட்டும் அன்பை மனிதநேயத்திற்குள் அடக்கிவிடலாம். மனித உயிர்களுக்கும் அப்பால்,தாவரங்கள்,விலங்குகள்,பறவைகள் முதலியவற்றை உள்ளத்து அன்பினாலும் கருணையாலும் கண்ணுறுவதை ஆன்மநேயம் என்போம். |
இசைத்தமிழ் | வாய்ப்பாட்டு,கருவியிசை முதலியவற்றைக் கொண்டது இசைத்தமிழ் என்பதாகும். சங்ககாலத்தில் கூத்துக் கலையுடன் இசையும் பின்னிப்பிணைந்துள்ளது. இசை இல்லாமல் கூத்து இல்லை. அன்றைய தமிழகத்தில் வாழ்ந்த மக்கள் பாடி இன்புற்ற இசைப்பாடல்களுள் சிலவற்றைப் பரிபாடல்களிலும் சிலப்பதிகாரத்திலும் காணலாம். உள்ளத்தை ஈர்க்கும் பல பண்கள் சங்ககாலத்திற்கு முன்பே மக்கள் வழக்கில் இருந்தன. |
இயற்றமிழ் | இயற்றமிழ் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐவகை இலக்கணங்களைக் கொண்டமைந்தது. இயற்றமிழில் இலக்கணம், இலக்கியம், செய்யுள், உரை, உரைநடை, புராணம் ஆகிய அனைத்தும் அடங்கும். |
இரட்டைக் காப்பியங்கள் | இரட்டைக் காப்பியங்கள் என்பவை சிலப்பதிகாரம்,மணிமேகலை ஆகியன. சிலப்பதிகாரம் சமண மதச்சார்புடைய காப்பியமாகவும் மணிமேகலை பௌத்த மதச்சார்புடைய காப்பியமாகவும் விளங்குகின்றன. சிலப்பதிகாரம் இல்லறத்தைப் போற்றுவதாகவும் மணிமேகலை துறவறத்தை வலியுறுத்துவதாகவும் அமைகின்றன. |
இல்லறம் | ஓர் ஆணும் பெண்ணும் மலரும் மணமும்போல ஒன்றுபட்டு,ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு அன்பு வாழ்க்கை நடத்துவதே இல்லறம்.ஆண் பொருளீட்டுவதோடு நின்றுவிடாமல்,தனது வருமானத்தைத் தென்புலத்தார்,தெய்வம்,விருந்து,ஒக்கல் (இறந்த முன்னோர்,வழிபடும் தெய்வம்,விருந்தினர்,உறவினர்) ஆகியவர்களுக்கும் பகிர்ந்துகொடுக்க வேண்டும். பொருளீட்டும் கடமை ஆணுக்குரியதாக இருப்பினும்,பெண்டிர்க்கு அதனைப் பாதுகாக்கும் கடமை இருந்துள்ளது. |
இன்பம் | மனித உணர்ச்சிகளுள் இன்பம் துய்த்தல் முக்கியத்துவம் பெறுகிறது. மனிதன் வாழ்க்கையில் இன்பம் பெறுவதையே வாழ்க்கையின் நோக்கமாகக் கருதுகிறான். நல்லனவற்றில் ஈடுபட்டு இன்பம் துய்ப்பது நல்லது. இன்பத்தில் இருவகை உண்டு – ஒன்று சிற்றின்பம் (உலகியல்வழிப் பெறுவது),மற்றொன்று பேரின்பம் (திருவருள்வழிப் பெறுவது). |
உணவே மருந்து | வாழ்க்கை முழுவதும் உணவையே மருந்தாக்கிக்கொள்ள வேண்டும்.தமிழர்கள் உணவை வெறுமனே சுவைக்காக மட்டும் உண்ணாமல்,உடல்நலத்தைப் பேணிக் காக்கும்பொருட்டு அறுசுவைகொண்ட உணவை உண்டனர்.நோய் வந்தபின் மருந்தை நாடுவது வாழும் கலைக்குப் புறம்பானது. |
எண்ணெய்க் குளியல் | உடம்பின் தோல் வறட்சி அடையும்போது,அதன் ஆரோக்கியத் தன்மை குறைகிறது. அவ்வாறு குறையும் தருணத்தில்,உடலை நோய்கள் தாக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. வாதம் என்பது ஒருவகை இயக்கு சக்தியாகும். அது தோலில் மேலோங்கி இருப்பதோடு உடலின் தசை, மூட்டுகள், எலும்பு இவற்றின் பணியைப் பார்த்துக்கொள்ளும். அந்த வாதத்தைக் கட்டுப்படுத்த உதவுவது எண்ணெய்க் குளியலாகும். |
எழுத்து | மொழி தோன்றுவதற்குக் காரணமான ஒலிக்கூட்டமே எழுத்து.தமிழில் எழுத்து என்னும் குறியீடு,எழுப்பப்படுவது எனும் பொருள்படும்போது ஒலிவடிவத்தையும் எழுதப்படுவது எழுத்து எனும்போது வரிவடிவத்தையும் (script letter) குறிக்கும் ஒரே சொல்லாக இருப்பதும் ஒரு சிறப்பாகும். |
ஏறு தழுவுதல் | தமிழர்களின் மரபுவழி விளையாட்டுகளுள் ஒன்று ஏறு தழுவுதல் அல்லது மஞ்சு விரட்டு அல்லது ஜல்லிக்கட்டு எனப்படும். ஏறு என்பது காளை மாட்டைக் குறிப்பதாகும். ஆவேசம்கொண்டு ஓடும் காளையின் கொம்புகளைப் பிடித்து அடக்குவது இவ்விளையாட்டின் அடிப்படையாகும். |
|
ஐந்திணை | குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல்,பாலை ஆகியன ஐந்திணையாகும். |
கபடி | கபடி விளையாட்டில் ஒரு குழுவினர் களம் இறங்கியதும்,எதிரணியில் ஒருவர் மூச்சை அடக்கிப் பாடிக்கொண்டே எல்லைக் கோட்டினைத் தொட வர வேண்டும். கோட்டினைத் தொட்டுவிட்ட பின் வெளியேற வேண்டும். முடிந்தால் எதிரணி விளையாட்டாளர்களையும் தொட்டுவிட்டு வெளியேறலாம். குழுவினர் தம்மைத் தொட வரும் எதிரணி நபரைத் தமது எல்லைக்குள் வரும்போது லாவகமாகப் பிடிக்க வேண்டும். |
கரகம் | கரகம் என்பது புனித நீர் வைக்கும் கமண்டலத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது. செம்பில் நீர் அல்லது மணலை வைத்து,அதன்மேல் தேங்காய் வைத்து,அதற்கும் மேல் கிளி பொம்மையைச் செருகி,அந்தப் பகுதிச் சுற்றுப்புறச் சூழலுக்கு ஏற்றவாறும் கலாசாரத்திற்கு ஏற்றவாறும் ஒப்பனைசெய்து கரகம் அழகுபடுத்தப்படுகிறது. கரகாட்டக் கலையின் கரகமானது செம்பு,பித்தளை,வெள்ளி போன்ற உலோகப்பொருளாலான சிறிய பானை வடிவில் உருவாக்கப்பட்டுப் பயன்படுத்தப்படும். சிலப்பதிகாரம் குறிப்பிடும் குடக்கூத்திலிருந்தே கரகாட்டம் தோற்றம் பெற்றிருக்க வேண்டும். |
கழைக்கூத்து | கழைக்கூத்து தெருவில் நடத்தப்படும். இக்கூத்து ஆடுபவர்கள் கம்புகளிலும் கம்பியிலும் நடந்து வித்தை காட்டுவார்கள். |
காணும் பொங்கல் | தை மாதம் மூன்றாவது நாள்‘கன்னிப் பொங்கல்’என்றும்‘கன்றுப் பொங்கல்’என்றும் சொல்வார்கள். திருமணமாகாத பெண்களுக்கு உரியது‘கன்னிப் பொங்கல்’.திருமணமாகாத ஆண்களுக்கு உரியது‘கன்றுப் பொங்கல்’.உறவினர்களை எல்லாம் ஒன்றாக வைத்துக் காண்பதால்காணும் பொங்கல் என்றும் பெயர் பெற்றது. |
காது குத்துதல் | மனித உடலைக் காந்த அலை மண்டலம் இயக்குகிறது. அந்தக் காந்த மண்டலத்தைச் சீராகப் பாதுகாத்துக்கொள்ளத் தமிழ் முன்னோர்கள் காது குத்தும் சடங்கை வழக்காகக் கொண்டிருந்தனர். இளம்வயதிலே காது குத்துவதன் நோக்கம் உடலுக்கு ஆரோக்கியம் அளிப்பதற்காகும். |
கார்த்திகைத் திருநாள் | நாட்டுப்புற விளையாட்டுகள் மக்கள்தம் வாழ்க்கைச் சூழல்,உணர்வுநிலை,உறவுநிலை,கற்பனை,விழுமியங்கள் முதலிய பல்வேறு கூறுகளைக் காட்டவல்லன. நாட்டுப்புற விளையாட்டுகள் மக்களின் உடல் நலத்திற்கும் உள நலத்திற்கும் பெரும்பங்காற்றுகின்றன. அவை வெறும் பொழுதுபோக்கிற்கான நடவடிக்கைகள் மட்டுமே என்று கருதுவதற்கில்லை. மாறாக,சமூகத்தின் கட்டமைப்புக் கூறுகளைப் பிரதிபலிப்பவையாகவும் மனித ஆற்றலை வெளிப்படுத்துபவையாகவும் விளையாட்டுகள் விளங்குகின்றன. |
நாடகத்தமிழ் | நாடகக்கலை என்பது உலகத்தின் பொதுக்கலை. நாடகம் என்பது நாடு + அகம் எனப் பிரித்து,அகம் நாடும் கலை என்று பொருள் கொள்ளும்வகையில் இதனைத் தூய தமிழ்ச் சொல் என்பார்கள்,அறிஞர்கள். நடை,நடம்,நாட்டம்,நாடகம் எனச் சொன்முறை வளர்ந்ததாகவும் கூறுவார்கள். ஒவ்வொரு புலன் வழியாகவும் மனத்துள் புகுந்து இன்பமூட்டிச் சிந்தனையைத் தன்வயப்படுத்தும் தன்மை இக்கலைக்கு உள்ளது. |
நானிலம் | குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல் ஆகியன நானிலமாகும். |
நொண்டி விளையாட்டு | ஒற்றைக்காலில் குதித்து நடப்பது,ஓடுபவர்களை ஒற்றைக் காலிலேயே விரட்டித் தொடுவது,நொண்டி விளையாட்டு. வட்டம் அல்லது சதுரம் ஏதேனும் ஒன்றை வரைந்துகொண்டு அதன் குறிப்பிட்ட எல்லைக்குள் இவ்விளையாட்டை விளையாட வேண்டும். ஒருவர் நொண்டி அடித்துச் சென்று மற்றவரைத் தொடவேண்டும். நொண்டி அடித்துச் செல்பவரின் கால் வலித்தால் குறிப்பிட்ட எல்லைக்குள் போடப்பட்டிருக்கும் சிறு வட்டத்தினுள் நின்றுகொள்ளலாம். வட்டத்தைத் தவிர மற்றப் பகுதியில் காலை ஊன்றக்கூடாது. நொண்டி அடித்துச் செல்பவர் ஒருவரைத் தொட்டால், தொடப்பட்டவர் ஆட்டத்திலிருந்து வெளியேற வேண்டும். |
பண்பாடு | பண்பாடு என்பது பண்படுத்தல்,சீர்படுத்தல் அல்லது திருத்துதல் எனப் பொருள்படும். தமிழில்,பண்பாடு என்னும் சொல்லை ரசிகமணி டி. கே. சிதம்பரநாத முதலியார் உருவாக்கிப் பயன்படுத்தியதாகக் கூறுவார்கள்.“பண்பெனப் படுவது பாடறிந்து ஒழுகுதல்” எனச் சங்க இலக்கியமாகிய கலித்தொகை குறிப்பிடுகிறது. உலகத்தின் போக்கறிந்து அதன்படி நடப்பதே பண்பென அப்பாடல் உணர்த்துகிறது. இதனையே திருவள்ளுவர்“உலகத்தோடு ஒட்ட ஒழுகல்”என்று கூறுகிறார். |
பம்பர விளையாட்டு | பம்பர விளையாட்டில் கலந்துகொள்வோர் தங்களுக்கென ஒரு பம்பரமும்,அதனைச் சுற்றுவதற்குத் தேவையான சாட்டையினையும் வைத்திருத்தல் வேண்டும். வட்டமான அரங்கிற்குள் சிறு தட்டைக்குச்சியோ மாங்கொட்டையோ வைக்கப்பட்டிருக்கும். விளையாடுபவர் அதனைப் பம்பரத்தினால் குத்தி வெளியேற்ற வேண்டும். |
பல்லாங்குழி | பல்லாங்குழி பெண்களால் ஆடப்படும் விளையாட்டு. இது தரையில் அல்லது மரப்பலகையில் உள்ள 14 அல்லது 24 குழிகளுள் புளிய விதைகளை அல்லது சோழிகளை வைத்து விளையாடுவார்கள். ஒரு சமயத்தில் இருவர் விளையாடலாம். இது கணிதமுறைசார்ந்த விளையாட்டாகும். |
பாவைக்கூத்து | பாவைகளை (பொம்மைகளை) மரத்தாலும் தோலாலும் செய்து நூல்களைக் கட்டி,ஒரு திரைக்குப் பின்னாலிருந்து ஒருவர் ஆட்டியசைத்துக் கதைகளைக் கூறுவார். இதனைப் பாவைக்கூத்து என்பார்கள். |
பொங்கல் | பொங்கல் பண்டிகை என்பது உழவர் பண்டிகை. அது இயற்கைசார்ந்த பண்டிகை. வயல்களில் உழைக்கும் மக்கள் சூரியனுக்கும் மாடுகளுக்கும் நன்றிசொல்லும் கொண்டாட்டமாகும். தை மாதத்தின் முதல்நாள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. |
பொருள் | பொருள் என்பது செல்வத்தைக் குறிக்கும். அறத்தின்வழி ஈட்டப்படும் பொருள் மீண்டும் அறத்திற்கே பயன்பட வேண்டும். ஈட்டிய செல்வம் நிலையில்லாதது என்பதை உணர்ந்து,அது நம்மைவிட்டுக் கடந்துசெல்வதற்கு முன்,அதனை அறச்செயல்களுக்குப் பயன்படுத்திவிட வேண்டும். |
போகிப் பண்டிகை | பழைய பொருட்களைத் தீயிட்டு எரித்து, போகிப் பண்டிகையைக் கொண்டாடுவார்கள். மனிதன் உறவுகளைப் புதுப்பிக்கும் விதமாக, தன் மனத்தில் உள்ள வருத்தங்களையும் கோபங்களையும் நீக்கி உறவுகளை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது நோக்கம். |
மாட்டுப் பொங்கல் | உழவர்களின் உற்ற நண்பனாக விளங்கும் கால்நடைகளுக்கு நன்றிகூறும் நாளே மாட்டுப் பொங்கல். மாட்டுப் பொங்கலன்று மாடுகள் கட்டும் தொழுவத்தினையும் கால்நடைகளையும் குளிப்பாட்டிச் சுத்தஞ்செய்வார்கள். மாட்டின் கொம்புகளைச் சீவிவிடுவார்கள். கொம்புகள் பளபளப்பாகத் தெரியும் வகையில் வண்ணங்கள் பூசிவிடுவார்கள். கொம்பில் மணிகள், சலங்கைகள் அல்லது தோலாலான வார்ப்பட்டையில் சலங்கைகளைக் கட்டி அவற்றை மாடுகளுக்கு அணிவித்து அலங்கரிப்பார்கள். |
முக்கனிகள் | மா,பலா,வாழை ஆகியன முக்கனிகள் எனப்படும். தமிழர் வாழ்க்கையோடு முக்கனிகள் பின்னிப்பிணைந்தவை. வாழ்வியல்,சமூக தத்துவம்,மொழி,ஆரோக்கிய வாழ்வு,மருத்துவம் எனப் பல நிலைகளில் முக்கனிகளுக்குச் சிறப்புண்டு. |
முத்தமிழ் | மனக்கருத்தின் வெளிப்பாடே இயற்றமிழ்;வாய் ஒலியின் வெளிப்பாடே இசைத்தமிழ்;மெய்யின் (உடல்) வெளிப்பாடே நாடகத்தமிழ் என்று தமிழர்கள் வகைப்படுத்தியுள்ளனர். இவ்வாறு மூன்று உயிர்க் கூறுகளினாலும் அதன் இயல்பை வெளிப்படுத்தும் பாங்கினை முத்தமிழ் என்போம். |
மூவேந்தர்கள் | சேர,சோழ,பாண்டிய மன்னர்களைக் குறிக்கும். |
வடக்கிருத்தல் | வடக்குத் திசை நோக்கி அமர்ந்தவண்ணம் உண்ணாநோன்பிருந்து உயிர் துறப்பதே வடக்கிருத்தலாகும். |
வர்மக்கலை | வர்மக்கலை,வர்ம சூத்திரம் எனப்படும் தமிழ் மருத்துவ விஞ்ஞானத்தை அடிப்படையாக வைத்துத் தொடங்கப்பட்டு,பின்னர் ஒரு தற்காப்புக் கலையாக வளர்த்தெடுக்கப்பட்டது. தமிழர்கள் மனித உடல் குறித்தும் அதில் உள்ள நாடிகள் குறித்தும் (நரம்புகள்) தெளிவான அறிவைக்கொண்டிருந்தார்கள் என்பதற்கு இக்கலை எடுத்துக்காட்டாகும். வர்மக்கலை என்பது உடலின் முக்கிய நாடிகள் – நரம்புகள் அல்லது புள்ளிகளைப் பற்றிய அறிவை மையமாகக்கொண்ட ஒரு தற்காப்புக் கலையாகும். |
வலஞ்சுழித்தல் | வலஞ்சுழித்தல் தமிழரின் மரபு. தமிழ் உயிர் எழுத்துகள் பன்னிரண்டிலும்‘சுழி’இடம்பெற்றிருப்பதைக் காணமுடிகிறது. அண்டத்தில் உள்ள கோள்கள் அனைத்தும் இடமிருந்து வலமாகச் சுழல்கின்றன. அதுபோல்,நாமும் உலகத்தோடு ஒத்துவாழ வேண்டியதன் அவசியத்தை இது உணர்த்துகிறது. |
விருந்தோம்பல் | விருந்தோம்பல் என்பது இல்லம் தேடிவரும் எவரையும் இன்முகத்துடன் வரவேற்று அவர்களிடம் அன்பாகப் பேசி உபசரித்து உணவளிக்கும் உயரிய பண்பாகும். அக்காலத்தில் தலைவன் – தலைவி இருவரும் ஒன்றாகச் சேர்ந்து பிறர்க்கு விருந்தோம்பும் கடமையில் ஈடுபட்டனர். கணவன் வீட்டில் இல்லாவிட்டாலும்,அந்தப்பண்பினை மனைவி கடைப்பிடித்தாள். |
வீடுபேறு | வீடு என்பது அருள்நிலையில் கிட்டுவதாகும். இது உடல் அழிந்த பின்பு கிட்டும் பேரின்பமாகும். அறம்,பொருள்,இன்பம் ஆகியவற்றில் ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து நெறிப்பட வாழ்ந்தால்,வீடுபேறு கிட்டும். |