தமிழ் மரபுசார் வாழ்வில் காயும் கனியும் முக்கியத்துவம் பெறுகின்றன. இயற்கை, மனிதனுக்கு அளித்துள்ள நன்கொடைகளுள் ஒன்று கனிகள். அவை உடலுக்குத் தேவைப்படுகின்ற பல்வேறு சத்துகளை அளிக்கக்கூடியவை. அத்தகைய கனிகளுள் மூன்று தமிழர் வாழ்வில் முக்கியத்துவம் பெறுகின்றன. அவற்றை நாம் முக்கனிகள் என்போம். அவை மா, பலா, வாழை என்பன. முக்கனியின் சிறப்பினைத் தமிழ்ப் புலவர்கள் பலர் பாடியுள்ளனர். அதோடு, இக்கனிகள்பற்றிய தத்துவ விளக்கங்களும் மருத்துவ விளக்கங்களும் ஆங்காங்கே பாக்களில் காணப்படுகின்றன.
வெப்பமண்டல நாடான அன்றைய தமிழகத்தில் (சேர, சோழ, பாண்டிய நாடுகள்) மா, பலா, வாழை ஆகிய மரங்கள் அதிகம் வளர்ந்தன. அவை தரும் கனிகள், நம் உடலுக்கு நலத்தை அளிப்பதோடு நம் ஆயுளையும் நீடிக்க வைக்கின்றன [1]. இனி, தமிழர் வாழ்வில் முக்கனிகள் பெறும் சிறப்பினைச் சில எடுத்துக்காட்டுகளுடன் பார்ப்போம்.
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந்து அற்று (குறள் 100)
என்பது திருவள்ளுவரின் கூற்று. அவர் கனிகளை நல்வார்த்தைகளோடு ஒப்பிடுகிறார். இவ்வாறு கனியைச் சுட்டி மக்களுக்கு விழுமியங்களை உணர்த்துகிறார். அடுத்து, இராமலிங்க வள்ளலார் முக்கனிபற்றித் தம் பாடலில் குறிப்பிட்டுள்ளார்.
தனித்தனி முக்கனி பிழிந்து, வடித்து, ஒன்றாய்க் கூட்டி,
சர்க்கரையும் கற்கண்டின் பொடியும் மிகக் கலந்தே,
தனித்த நறும் தேன் பெய்து, பசும்பாலும் தெங்கின்
தனிப்பாலும் சேர்த்து, ஒரு தீம் பருப்பிடியும் விரவி,
இனித்த நறுநெய் அளைந்தே, இளஞ்சூட்டின் இறக்கி
எடுத்த சுவைக் கட்டியினும் இனித்திடும் தெள் அமுதே,
அனித்தம் அறத் திருப்பொதுவில் விளங்கும் நடத்து அரசே,
அடிமலர்க்கு என் சொல் அணியாம் அலங்கல் அணிந்து அருளே!
இதன் விளக்கம் பின்வருமாறு:
மா, பலா, வாழை என்னும் முக்கனிகளையும் தனித்தனியே சாறு பிழிந்து, வடிகட்டிச் சக்கைகளை நீக்கி, அவற்றை ஒன்றாகக் கலந்து, அந்தக் கலவையில் சர்க்கரையும் கற்கண்டுப் பொடியையும் நிறையச் சேர்த்து, அசுத்தம் இல்லாத நல்ல தேனை அதில் ஊற்றி, பசும்பாலும் தேங்காய்ப் பாலும் சேர்த்து, இடித்த பாசிப்பருப்பைப் போட்டுக் கிளறி, இனிப்பான, நல்ல நெய்யையும் சேர்த்துக் கொதிக்கவைத்து, இளம் சூட்டில் இறக்கி ஆறவிட்டுப் பின்னர் அதிலிருந்து ஒரு துண்டை எடுத்து வாயில் இட்டால் எப்படி இருக்கும்? நிலையில்லாத பிறவித் துயரம் அறுபடும்விதமாக அம்பலத்தில் ஆடும் நடராஜனே, உன்னுடைய பாத மலர்களை என் சொற்களால் அலங்கரிக்கிறேன், ஏற்றுக்கொண்டு அருள் செய்!
அடுத்து, பாவேந்தர் பாரதிதாசன் தமிழின் இனிமை குறித்து விளக்கும்போது…
‘கனியிடை ஏறிய சுளையும் – முற்றல்
களையிடை ஏறிய சாறும்’ என்று குறிப்பிடுகிறார். அதாவது, நன்கு பழுத்த பழத்தின் சுவையில் இனிமை இருக்கும். கரும்புச் சாற்றிலும் இனிமை இருக்கும். அத்தகு இனிப்புக்கு ஒப்பானது தமிழ் என்பார் கவிஞர்.
பின்வரும் சடங்குகளான
திருமணங்கள்
புதுமனை குடிபுகுவிழா
காதணிச் சடங்கு
பெயர்சூட்டுவிழா
குழந்தைப் பிறப்பின் 30வது நாள் சடங்கு
பூப்பெய்தும் பெண்களுக்கு நடத்தும் சடங்கு
முதலியவற்றின்போது தமிழ் இந்துக்கள் முக்கனிகளைப் பயன்படுத்துகின்றனர். மேலும், அவர்களின் ஆலய வழிபாடுகளில் முக்கனிகள் மங்கலப்பொருளாகப் பயன்படுகின்றன [1].
முக்கனியின் சிறப்பு
எத்தனையோ கனிகள் இருக்க, நம் முன்னோர் ஏன் மா, பலா, வாழை ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்தனர்?

இவ்வுலக மக்களைச் சைவ சித்தாந்திகள் மூவகைப்படுத்தினர். அறிவுடையோர், அறிவும் அறியாமையும் கலந்தே உடையோர், அறிவற்றோர் என்று பிரித்தனர். மலம் என்னும் சொல்லுக்கு அழுக்கு, மாசு அல்லது குற்றம் என்று பொருள். மும்மலம் என்பது ஆணவம், கன்மம், மாயை என்னும் மலங்களைக் குறிக்கும். நாம் அனைவருமே மும்மலத்தார்கள். மும்மலத்தாரிடம் ஆணவம், கன்மம், மாயை என மூன்றும் ஓங்கியிருக்கும் [1].
இருமலத்தாரிடம் ஆணவமும் கன்மமும் ஓங்கியிருக்கும், ஆனால் மாயையோ ஒடுங்கியிருக்கும். ஆயின், ஆணவம் சற்றே தலைதூக்கியிருக்கும். ஆணவம் இருப்போர்க்கு யான், எனது என்னும் செருக்கு வெளிப்படும். [1]
மும்மலங்களும் உடையவர், வாயைத் திறந்தால் கடுஞ்சொற்களே உதிரும்; எதற்கெடுத்தாலும் கோபப்படுவார். ஆசைகளுக்கு அளவே இருக்காது.
தன்னினும் வசதி உள்ளவர்களைக் கண்டால் பொறாமை பொங்கும்.
இருமலத்தாரிடம் கடுஞ்சொற்கள் இல்லை எனினும் தடித்த சொற்களையே வாய் மொழியும். எதற்கெடுத்தாலும் கோபப்படமாட்டார் எனினும் கோபம் வராமலும் இருக்காது. ஆசை அளவுடனே இருக்கும்.
பொறாமையோ ஒடுங்கியிருக்கும். ஒருமலத்தாரிடமோ கடுஞ்சொற்களோ தடித்த சொற்களோ இருப்பதில்லை. மாறாக, இன்சொற்களையே வாய் மொழியும். கோபம் அணுவளவும் இருக்காது. உலகியல் ஆசைகள் உள்ளத்தில் எழா; பொறாமையும் இருக்காது.
பலாவை மும்முலத்தார்க்கு உவமை காட்டினர். பழத்தின் மேலுள்ள தோல், முட்களால் நிறைந்திருக்கும். மும்முலத்தார் வாயைத் திறந்தால் தடித்த சொற்களும் கடுஞ்சொற்களுமே உதிரும். முள்ளைப் போன்று பிறர் உள்ளத்தைக் குத்தும். சுளையைப் பெறத் தோலை அகற்ற வேண்டும். அதற்குக் கூரிய கத்தி வேண்டும். அதே போன்று இவர்களிடமுள்ள சுளையாகிய நலங்களைப் பெற, அறிவாகிய கூரிய கத்தி வேண்டியிருக்கும். தோல் அகல உள்ளே சடை நிறைந்திருக்கும். இவர்களிடம் கோபமாகிய சடை நிறைந்திருக்கும். பிசினைப் போன்ற திடத்திரவமும் உடனிருக்கும். பிசின் கைகளில் ஒட்டாதிருக்க எண்ணெய் தேவை. இவர்களிடமும் ஆசையாகிய பிசின் இருக்கும். சுளையைச் சாப்பிடக் கொட்டையை அகற்றி உண்டாலே இனிக்கும்.
மாம்பழம் — பலாவின் மும்மலங்கள் இதனிடத்தே இல்லை. ஆயினும் கசக்கும் தோல் இருக்கும்; சக்கையும் இருக்கும். பல கொட்டைகள் இல்லையென்றாலும் ஒரே ஒரு கொட்டை பெரிதாக இருக்கும். எனினும் அதிகம் உண்டால் கெடுதி ஏற்படும் [1].
மாம்பழத்தை அளவோடு சாப்பிடுவதால் உடல் பலம் பெறுதல், ரத்தம் சுத்தமாதல், ரத்தம் விருத்தியாதல் ஆகியவை உண்டாகும். பலவிதமான பல் நோய்கள் குணமாகும். கண் சம்பந்தமான கோளாறுகளால் அவதிப்படுபவர்களும் குணமாவார்கள்.
வாழைக்கு மா, பலாவைப் போன்று கசக்கும் தோல் இல்லை; முட்களும் இல்லை; சடையும் சக்கையும் இல்லை; பிசினும் இல்லை; கொட்டையும் இல்லை; உரிப்பதும் எளிது. உட்கொண்டால் நலங்களை விளைவிக்குமேயன்றித் தீமை பயக்காது. மாறாக, வயிற்றுக்குள்ளே இருக்கும் மலத்தை அகற்றும். ஆதலால், நல்லோர்களை வாழைக்கு உவமையாக்கினர். இவர்களிடமிருந்து நலங்களைப் பெற எவர் துணையும் தேவையில்லை. அணுகினாலேயே போதும் நலம் கிட்டும் [1].
மாவைப் போன்று இருமலத்தாரே இவ்வுலகில் அதிகம் உள்ளதால் மாவை முதலிலும் பலாவைப் போன்ற மும்மலத்தாரே அடுத்து எண்ணிக்கையில் மிகுந்தவர் என்பதால் பலாவை இரண்டாவதாகவும் வாழையைப் போன்றோர் மிகக் குறைவாகவே காணப்படுவதால் வாழையை மூன்றாவது இடத்திலும் வைத்தனர் என்பர், சைவ சித்தாந்திகள்.
முக்கனிகளின் பயன்கள்
மாம்பழம்
பழத்தின் தன்மை
மாமரத்தில் காய்க்கும் மாங்காய் பழுத்த பின்னர் மாம்பழமாகிறது. மாமரங்களுள் தேமாமரம், புளிமாமரம் என இருவகை உண்டு. இன்சுவைக் கனிகளைத் தரும் மரங்கள் தேமாமரம் எனப்படும். புளிப்பான கனிகளைத் தருவன புளிமாமரம் என வழங்கப்படும்.
மருத்துவக் குணங்கள்
கண்பார்வைக்கு மாம்பழம் தேவைப்படுகிறது. மாலைக்கண் நோயை எதிர்க்கிறது. வைட்டமின் C அதிகம் உள்ளதால் நோய் எதிர்ப்புக்கும் பிள்ளைகள் உடல் தெம்புக்கும் எடைக்கும் சக்தி தருகிறது. மேலும், இருதயம் வலிமைபெறும்; பசியைத் தூண்டும்; கல்லீரல் குறைபாடுகள் விலகும்; முகத்தில் பொலிவு உண்டாகும்; புது ரத்த அணுக்கள் உற்பத்தியாகும்; உடல் வளர்ச்சிபெறும் [2].
தமிழர் விழாக்களின்போது அல்லது சுப நிகழ்ச்சிகளின்போது, தமிழர் இல்லங்களிலும் பொதுவிடங்களிலும் மாவிலைத் தோரணங்களை வாயிலில் கட்டித் தொங்கவிடுவார்கள். இவ்விழாக்களின்போது மக்கள் கூட்டம் கூடும். அவர்கள் வெளியிடும் கரியமிலவாயுவைத் தன்னுள் இழுத்து வைத்துக்கொள்ளும் சக்தி மாவிலைக்கு உண்டு.
மாவடு, மாங்காய் ஊறுகாய், மாங்காய்த்தொக்கு ஆகிய உணவுவகைகளைப் பெரும்பாலும் குழந்தைகள் விரும்பி உண்பார்கள். ‘மாதா ஊட்டாத சோற்றினை மாங்காய் ஊட்டும்’ என்னும் பழமொழி வழக்கில் இருப்பதே இதற்குச் சான்றாகும் [3].
தத்துவக் கருத்துகள்
பொதுவாக, மனித உடல் ஒன்பது வாசல்களைக் கொண்டது. அவை கண்கள் (2), காதுகள் (2), நாசித்துவாரங்கள் (2), வாய் (1), குதம் – குய்யம் (கண்டம்) (2) ஆகியன. இவ்வாசல்கள் அனைத்தும் மனிதனின் சிரசில் உள்ளன. எண்சாண் உடம்புக்குச் சிரசே பிரதானம் என்னும் தொடர்க்கேற்ப மனிதன் இந்த ஒன்பது வாசல்களையும் மாசில்லாமல் வைத்துக்கொள்வது அவசியம். இந்தக் கருவிக் கரணங்களை அடைத்து, மனிதன் மனத்தைக் கடக்க முடியும் என்று யோக நூல்கள் செப்புகின்றன. அவ்வாறு செய்வதால் மனிதன் தன் உடலைப் பேணிக் காக்கவும் கெடாமல் வைத்துக்கொள்ளவும் இயலும் என்பது தமிழ்ச் சித்தர்களின் அனுபவச் சிந்தனை. இக்காரணத்தால், நம் வீட்டுவாசலில் ஒன்பது மாவிலைகளை நாம் தொங்க விடுகிறோம். காய்ந்த மாவிலைகளின் சக்தி குறையாது. மாவிலைகள் காய்ந்து போனாலும் அவை அழுகிப் போவதில்லை. அதுபோல் மனிதன் தான் வாழும்போதே தன் உடலில் உள்ள வாசல்களை யோகநிலையில் அடைத்து, மனத்தைக் கடந்தால், வாழ்விலும் சாவிலும் உடம்பைக் கெடாமல் காத்துக்கொள்ள முடியும் என்பது மாவிலை உணர்த்தும் தத்துவமாகும்.
பலாப்பழம்
பழத்தின் தன்மை
ஈரப்பலா, வருக்கைப் பலா, குறும்பலா எனப் பலாவில் பலவகை உண்டு. இளங்காயைப் ‘பலா மூசு’ என்பார்கள். அதனைச் சமைத்து உண்பார்கள். பலாப்பழங்களில் வேர்ப்பலா மிகவும் சிறந்ததாகும். பலாப்பழத்தில் உள்ள சுளைகள் ஒவ்வொன்றிலும் கொட்டை இருக்கும். அக்கொட்டைகளை அவித்தோ காய்கறிகளுடன் சேர்த்துச் சமைத்தோ உண்ணலாம்.
மருத்துவக் குணங்கள்
பலாப்பழத்தில் வைட்டமின் ஏ ஊட்டச்சத்து அதிகம் இருப்பதால் இதைச் சாப்பிட்டால் உடல் வளர்ச்சி சீரடையும். இதற்குத் தொற்றுக்கிருமிகளை அழிக்கும் ஆற்றல் இருப்பதால் உடலில் தொற்றுநோய் தொற்றாது. பலாப்பழத்தில் இரும்புச் சத்து இருப்பதால் ரத்தசோகை (anaemia) வராமல் தடுப்பதோடு உடலில் ரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது. முதுமையைத் தள்ளிப்போட இப்பழம் உதவுகிறது. மலச்சிக்கலை நீக்க இது உதவுகிறது. பலாச்சுளைகளை நாட்டுச் சர்க்கரையோடு சேர்த்துச் சாப்பிட்டால் ஜீரணசக்தி அதிகரித்து நல்ல பசியை உண்டாக்கும். களைப்பைப் போக்கிவிடும்; இருமலைத் தணித்துவிடும்; நா வறட்சியையும் உடல் வறட்சியையும் போக்கிவிடும் என்பர் சித்த மருத்துவர்கள்.
பலாவின் வேறு சில நன்மைகள்:
நரம்புக்கு உறுதி அளிக்கும்
பற்களை வலுவாக்கும்
மூளைக்கு வளர்ச்சியுடன் பலத்தையும் அளிக்கும்
பலாப்பழம் ருசியாக இருந்தாலும் அளவோடு சாப்பிடுவது நன்று, ஏனெனில், வாதநோய், காசநோய், மூலநோய் உள்ளவர்கள் பலாப்பழத்தைச் சாப்பிட்டால் நோய் அதிகரிக்கும்; மலச்சிக்கல் அதிகரிக்கும் [3].
வாழைப்பழம்
பழத்தின் தன்மை
வாழைப்பழத்தில் பலவகைகள் உண்டு. ஒவ்வொரு வாழைப்பழத்திற்கும் வித்தியாசமான தன்மைகளுண்டு. அவை கீழ்க்கண்ட வகைகளாகும் என்கிறது தமிழ் மருத்துவ நூல்கள்:

மருத்துவக் குணங்கள்
வாழையின் அனைத்துப் பாகங்களும் பயன்படக்கூடியவை. இலை, பூ, காய், கனி, தண்டு, பட்டை, வேர், என எதை எடுத்துக்கொண்டாலும் அருமையாகப் பயன்படுகிறது. வாழை தன்னலமற்றது. பிறர் வாழத் தன்னை முழுமையாகத் தரக்கூடியது.
வாழையிலையில் உணவு உண்டால் உடலுக்கு நல்லது. உணவை உண்டுவிட்டு இலையைத் தூக்கி வீசினால், ஆடு மாடுகளுக்கு உணவாகப் பயன்படும். வாழைக்காய் பல்வேறு சுவை மிகுந்த பணியாரங்கள் செய்யப் பயன்படுகிறது. கனியோ குடலிலுள்ள மலத்தை அகற்றும் ஆற்றல் வாய்ந்தது. பல நோய்களுக்கு மலச்சிக்கல் காரணம் என்பார்கள், சித்த மருத்துவர்கள். அம்மலச்சிக்கல் வராமல் காப்பது இக்கனி.
வாழைப்பட்டைச் சாறு கொடிய பாம்பின் விஷத்தையும் நீக்கும் வல்லமை படைத்தது. அதன் தண்டு நார்ச்சத்து மிகுந்ததாம். சிறுநீரகத்தில் கற்கள் உருவாகா வண்ணம் காப்பது. முன்னே உருவாகிய கற்களையும் கரைக்கும் திறன் வாய்ந்தது. மெல்லிய நார்களோ பூத்தொடுக்க உதவும். வாழை ஒரே ஒருமுறைதான் குலை தள்ளும். தன்னைப் போன்ற வாரிசை உருவாக்கிவிட்டுத்தான் மடியும். நாம் நேரிய வாழ்க்கை வாழ்ந்தால் போதாதாம். நம்மைப்போன்றே நம் வாரிசையும் உருவாக்கிவிட்டுத்தான் மடிய வேண்டும் என்னும் குறிக்கோளை உணர்த்துகிறது, வாழை. எந்த நீரிலும் வளரக்கூடிய ஒரே மரம் வாழைதான். சாக்கடை நீரிலும் வளரும். கண்பார்வை குறைய ஆரம்பித்தோர்க்குத் தினசரி உணவில் செவ்வாழைப்பழம் வேளைக்கு ஒன்று விதம் இருப்பத்தொரு நாட்களுக்குக் கொடுத்து வந்தால் கண்பார்வை தெளிவடைய ஆரம்பிக்கும் என்று சித்த மருத்துவர்கள் நம்புகிறார்கள் [2].
தத்துவக் கருத்துகள்
உயிர்களை வாழவைக்கும் குணம் வாழைக்கு இருப்பதால் வாழை ஒரு காரணப்பெயர் ஆகும். பெரியவர்கள் பிறரை வாழ்த்துவதற்கு ‘வாழையடி வாழையெனப் பல்லாண்டுகள் வாழ்க’ என்னும் தொடரைப் பயன்படுத்துவது மரபு. “வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட மரபினில் யான் ஒருவன் அன்றோ” என்கிறார் வள்ளலார்.
குலை தள்ளுதலைத் தாறுபோடுதல் என்று கூறுவார்கள். திருமணம், திருவிழா போன்ற காலங்களில் குலையுடன்கூடிய வாழைமரத்தை வீட்டுவாசலில் கட்டிவைப்பது தமிழர் வழக்கமாகும்.
தமிழர் வாழ்க்கையோடு முக்கனிகள் பின்னிப்பிணைந்தவை. வாழ்வியல், சமூக தத்துவம், மொழி, ஆரோக்கிய வாழ்வு, மருத்துவம் எனப் பல நிலைகளில் முக்கனிகளுக்குச் சிறப்புண்டு. தமிழ் முன்னோர், முக்கனிகளின் தன்மைகளைக் கொண்டு மனிதர்களின் குணங்களை ஒப்பிட்டு விளக்கிய பாங்கு சிந்தனைக்குரியது.
துணைநூல்கள்
[1] தவத்திரு தேமொழியார் சாமிகள் (2010). முப்பொருள். சென்னை: சோதி உழைப்பகம்.
[2] பத்மப்ரியா, (2016). பழங்களின் மருத்துவ குணங்கள். Classic Publications.
[3] நடராசன், ஆர். (2014). மருந்தாகும் உணவுகள். சென்னை: உஷா பிரசுரம்.