கடந்த பல நூற்றாண்டுகளாகத் தமிழ் இலக்கியம் பல்வேறு வகையான இலக்கியங்களைப் படைத்து வந்துள்ளது. காதல், போர், கொடை, இயற்கை, கலை, கல்வி, நாட்டுப்புறவியல் எனப் பல்வேறு கருப்பொருள்களில் படைப்புகள் அமைந்திருக்கின்றன. தமிழ் இலக்கிய வரலாற்று ஆசிரியர்கள் எழுத்து வடிவில் இயற்றப்பட்ட தமிழ் இலக்கியங்களைப் பண்டைத் தமிழ்ச் சங்க இலக்கியங்கள், காப்பிய இலக்கியங்கள், அற இலக்கியங்கள், சமய இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், உரைநடை இலக்கியங்கள் என்று வகைப்படுத்தியுள்ளனர். இவ்வகைப்பாட்டில் ஒன்றான சமய இலக்கியங்களுக்கும் தமிழ்மொழியின் வளர்ச்சியில் பெரும் பங்கு உண்டு. சைவ சமயநெறி இலக்கியங்களுள் திருநாவுக்கரசர் (அப்பர்), திருஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி நாயனார், மாணிக்கவாசகர் ஆகியோர் சைவ சமயத்திற்கும் அதன்வழித் தமிழுக்கும் அளித்துள்ள கொடைகள் அளப்பரியவை. இவர்கள் நால்வரும் சமயக் குரவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். குரவர் என்னும் சொல்லுக்கு நன்னெறியுள்ளவர், அறிவுறுத்துவோர், ஆசிரியர் என்பது பொருளாகும்.
பக்தி இலக்கியங்கள்
தமிழ் இலக்கிய வரலாற்றினைப் பக்தி இலக்கியங்களை விடுத்துப் பார்க்க முடியாது; பார்த்தால் அது முழுமை பெறாது. சைவ இலக்கியத்தைப் பொறுத்தமட்டில், திருமுறை என்று அழைக்கப்படும் நூல்வகை மிக முக்கியமானது. பழங்காலத்தில் பற்பல திருமுறைகள் எழுதப்பட்டிருந்தும், எஞ்சியிருப்பவை பன்னிரு திருமுறைகள் மட்டுமே. அவற்றுள், அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோரின் பக்திப் பாடல்கள் தேவாரம் என்றும் மாணிக்கவாசகரின் பக்திப் பாடல்கள் திருவாசகம், திருக்கோவையார் என்றும் தொகுக்கப்பட்டுள்ளன. பன்னிரு திருமுறைகள் என்னும் தொகுப்பில் திருஞானசம்பந்தரின் பாடல்கள் முதல் மூன்று திருமுறைகளாகவும் திருநாவுக்கரசரின் பாடல்கள் அடுத்த மூன்று திருமுறைகளாகவும் சுந்தரரின் பாடல்கள் ஏழாம் திருமுறையாகவும் தொகுக்கப்பட்டுள்ளன. மாணிக்கவாசகரின் திருவாசகமும் திருக்கோவையாரும் எட்டாம் திருமுறையாகத் தொகுக்கப்பெற்றுள்ளன.
திருமுறை
திருமுறை என்பதில் வரும் ‘திரு’ என்னும் சொல்லுக்கு, ‘இன்பம் வந்தாலும் துன்பம் வந்தாலும் இரண்டையும் ஒப்பக் கருதும் மனச் செம்மை’ என்பார் பேராசிரியர் வெள்ளைவாரணன்[1]. இத்தகு தன்மையுடைய பெரியோர்களைக் “கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்” என்று போற்றுகிறார் சேக்கிழார்[2]. இந்தத் தெளிவினைத் ‘திருநின்ற செம்மை’ எனவும் இந்த நெறியைத் திருநெறி எனவும் வழங்குவர் பெரியோர். ‘திரு’ என்பதைப் பெறத்தக்க செல்வம் என்றும் அது சிவபரம்பொருளே என்றும் கூறுவர். ‘முறை’ என்னும் சொல் நூல் என்னும் பொருள் கொண்டதாகும். ‘முறைப்பட இயற்றப்பெற்றமையின் முறையென்பது நூற்குப் பெயராயிற்று’,[1] என்றும் கூறப்படுகிறது. “முக்காற் கேட்பின் முறையறிந் துரைக்கும்” என்னும் பழஞ்சூத்திரத்திலும் ‘முறை’யென்பது ‘நூல்’ என்னும் பொருளிலேயே வழங்குகிறது என்று கூறுவர். இதன் மூலம் திருமுறை என்பது நிலையாய செல்வத்தை மக்கள் எளிதாக அடைதற்கு வழிகாட்டும் நூல் என்பது தெரியவருகிறது. “இறைவனைக் கவிதைக்குரிய நிறைபொருளாகக் கொண்டு அருளியல் நிலையில் பாடப்பெற்ற பக்திப் பனுவல்களே தேவாரத் திருப்பாடல்கள்” என்று கூறுகிறார் தவத்திரு அ. வே. சாந்திகுமார சுவாமிகள்[3].
“தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் – கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவாசகம் என்று உணர்” (ஔவையார் – நல்வழி – 40)
என்னும் ஔவையின் வாக்கு, திருமுறை கூறும் கருத்துகளின் சிறப்பை உணர்த்துபவையாக உள்ளது.
திருவள்ளுவர் தம் திருக்குறளில் தாம் கூறவிரும்பிய ஒவ்வொரு பொருள் குறித்தும் பத்துப் பத்துக் குறள்களின்வழி விளக்கியதைப் போன்று, தேவார ஆசிரியர்களும் பத்துப் பாடல்களைக் கொண்டது ஒரு திருப்பதிகம் என்றே கணித்துக் கருதியுள்ளனர். தேவாரப் பாடல்கள் சமயம் என்பதோடு இலக்கியமாகவும் இசை குறித்து அறிய உதவும் வரலாற்று ஆவணமாகவும் மிளிர்வதைப் படிப்போர் உணர்வர். சிவனடியார்கள் சிலர் தங்களுக்குத் தெரிந்த தேவாரத் திருப்பதிகங்களை ஓதக்கேட்டு மெய்சிலிர்த்த மன்னர் ராஜராஜ சோழன், தேவாரத் திருப்பதிகங்கள் அனைத்தையும் தேடித் தொகுக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அவை எங்கும் தேடிக் காணக் கிடைக்காத மன்னர் வருந்தினார்.
இதற்கிடையே, திருநாரையூரில் பொள்ளாப் பிள்ளையார்க்குப் பூசனை செய்து வந்த ஆதி சைவக் குடும்பத்தில் தோன்றிய நம்பியாண்டார் நம்பிக்கு அவருடைய பெற்றோர் சிவாகமங்களையும் தமிழ் இலக்கண இலக்கியங்களையும் கற்பித்திருந்தனர். ராஜராஜ சோழனுக்குக் கிடைக்காத திருமுறைகள் நம்பிக்கு அவர் வணங்கும் பிள்ளையாரின் அருளால் பாட முடிந்ததாக ஒரு பாரம்பரிய தொன்மக் கதை ஒன்று உண்டு. அதனைக் கேள்விப்பட்ட மன்னர் ராஜராஜன், பொள்ளாப் பிள்ளையாரை வழிபடச் சென்றார். அப்போது, நம்பியாண்டார் நம்பியிடம் சமயக்குரவர் மூவர் அருளிச்செய்த தேவாரத் திருமுறைகளை விளக்கம்பெறச் செய்யவேண்டும் என்று வேண்டிக்கொண்டார்.
பொள்ளாப்பிள்ளையாரின் அருளால் தேவாரப் பாடல்கள் இருக்குமிடத்தை அறிந்த நம்பியாண்டார் நம்பி மன்னருடன் இன்று சிதம்பரம் என்று பரவலாக அறியப்படும் தில்லை நகருக்குச் சென்று பூட்டிய அறைக்குள் இருந்த தேவாரத் திருப்பதிகங்களைக் கண்டார். அவை கறையான் புற்றால் மூடப்பட்டுப் பெரிதும் சிதைந்திருந்தன. சிதைந்தவை போக எஞ்சியிருந்தவைகளைத் தொகுத்துத் தரும்படி மன்னன் நம்பியாண்டார் நம்பியை வேண்டிக்கொண்டார். இவ்வாறு திருமுறைகளைக் கண்டெடுத்துத் தொகுத்ததால் ‘திருமுறைகண்ட சோழன்’ என்னும் சிறப்பினையும் ராஜராஜன் பெற்றார். மேற்கண்ட செய்திகளைத் திருமுறை கண்ட புராணம் நமக்குத் தெரிவிக்கிறது. பல்வேறு தரவுகளையும் ஒப்புநோக்கிய வெள்ளைவாரணன், நம்பியாண்டார் நம்பியின் காலத்தைப் பொ.ஊ. (பொது ஊழி) 9-ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து பொ.ஊ. 10-ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை இருக்கலாம் என்று தம் பன்னிரு திருமுறை வரலாற்றில்[1] வரையறுக்கிறார்.
பொதுவாகத் தமிழ் இலக்கியத்தின் அருமையையும் பெருமையையும் அறிந்துகொள்ளவும் அவற்றை அனுபவித்து உணரவும் விரும்புவோர் அனைவருக்கும் திருமுறைப் பயிற்சி அவசியம் என்று கூறலாம். பொருட்செறிவு, சொல்நயம், பொருள்நயம், நடையழகு மிக்கவையாகத் திருமுறைப் பாடல்கள் அமைந்துள்ளன என்பதை அவற்றைக் கற்போர் உணர்வர். சமயப்பற்று அன்றி இலக்கியப் பற்று உடையவர்களும் திருமுறைப் பாடல்களைப் பயின்றால் அகன்ற அறிவோடு ஒழுங்குபடுத்தப்பட்ட வாழ்க்கையையும் பெறலாம்[4] என்பது பலரது கருத்தாகும்.
பொ.ஊ. 6-ஆம் நூற்றாண்டு முதல் பொ.ஊ. 9-ஆம் நூற்றாண்டு வரையில் தமிழகத்தில் பக்தி இயக்கம் முழுவீச்சில் இருந்தது. அக்காலகட்டத்தில் தமிழர்களது வாழ்க்கை; அவர்கள் எப்படிப்பட்ட குறிக்கோள்களுடன் வாழ்ந்து வந்தார்கள்; அவர்கள் எப்படிப்பட்ட நாகரிகப் பண்புமிக்கவர்களாக இருந்தார்கள் என்று அறிய விரும்புகின்றவர்களுக்குத் திருமுறை உறுதுணையாக இருக்கும். தமிழ்நாட்டின் மன்னர்கள், அவர்களின் ஆட்சிமுறை, மக்கள், புலவர்கள், சமயங்கள் முதலியவை பற்றியெல்லாம் அறிய விரும்பும் ஆசிரியர்கள், மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் அனைவருக்கும் திருமுறை சிறந்த கருவூலமாக இருக்கும்[4].
திருமுறைத் திருப்பதிகங்களின் எண்ணிக்கையைப் பார்க்கும்போது, “திருஞானசம்பந்தர் 1600 பதிகங்களும் திருநாவுக்கரசர் 4,900 பதிகங்களும் சுந்தரர் 3,800 பதிகங்களும் பாடியருளினார்களெனவும் அம்மூவரும் அருளிச்செய்த திருப்பதிகங்களின் தொகை 10,300 எனவும் அவற்றின் பாடல்தொகை 1,03,000 எனவும் கூறுதல் ஏற்புடையதாகும்” என்று கூறுகிறார் வெள்ளைவாரணன்[1].
தேவாரம்
‘தே’ என்பது தெய்வம் என்பதைக் குறிக்கும் ஓரெழுத்து ஒருமொழி ஆகும். ‘வாரம்’ என்பது இசையின் கூறுபாடாகிய நடையினைக் குறிப்பதாகும். தேவாரம் என்பதைச் சிலர், தேவ+ஆரம் எனவும் தே+ஆரம் எனவும் பிரித்து இறைவனுக்குரிய மாலையாவது என்றும் வேறு சிலர் தே+வாரம் எனப் பிரித்துத் தெய்வத்தினிடம் அன்பை விளைவிப்பது என்றும் பொருள் கூறுவர்.
திருநாவுக்கரசர்
இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் மருள் நீக்கியார். இவர், தருமசேனர், வாகீசர், ஆளுடைய அரசு, உழவாரத் தொண்டர், தாண்டகவேந்தர், அப்பர் என்றெல்லாம் போற்றப்படுகிறார். இளமையில் சைவ சமயத்தை விட்டுச் சமண சமயத்தில் சேர்ந்து சமண நூல்களைக் கற்றுச் சமண சமயத்தவரானார். தருமசேனர் என்னும் பட்டப் பெயரைப் பெற்று நெடுங்காலம் சமண குருவாகவும் இருந்தார். இவருடைய தமக்கையார் திலகவதியாரோ தம்பி சமண சமயத்தில் சேர்ந்ததை எண்ணி மிகவும் வருந்தினார்; இறைவனிடம் முறையிட்டார். தருமசேனருக்குக் கடுமையான சூலை நோய் (வயிற்று வலி) ஏற்பட்டது. சமண மடத்தில் செய்யப்பட்ட சிகிச்சைகள் அவருக்குப் பலனளிக்கவில்லை. சூலை நோயால் பெரிதும் துன்புற்றபோது தமக்கையாரிடம் வந்துசேர்ந்தார். தமக்கை திலகவதியார் இறைவனிடம் வேண்டினார். மருணீக்கியாரும், “கூற்றாயினவாறு விலக்ககிலீர்…” என்னும் முதல் பதிகத்தைக் கண்ணீர் மல்கப் பாடினார். வயிற்றுவலியும் தீர்ந்தது. இவரது கவித்துவமும் இறைப்பற்றும் இவருக்கு இறைவனைப் போற்றிப் பாடுகின்ற நாவுக்கு அரசர் என்னும் பொருள்தரும்” என்னும் பெயரைப் பெற்றுத் தந்தது.
இந்தச் செய்தியினைப் பாடலிபுத்திரத்தில் இருந்த (இன்றைய கடலூரின் ஒரு பகுதி) சமணர்கள் அறிந்தனர். தங்களுக்குக் குருவாக விளங்கியவர் வேறு சமயத்திற்கு மாறிவிட்டார் என்பது தங்கள் மதத்தின் மதிப்பினைக் குறைத்துவிடும் என்று உணர்ந்த சமணர்கள், தங்கள் பல்லவ மன்னன் மகேந்திரவர்மனிடம் சென்று சமண சமயத்தை இழிவாகப் பேசியதாகத் திரித்துக் கூறினர். இவர்களின் முறையீட்டைக் கேட்ட மன்னர், தருமசேனரை அழைத்து வருமாறு ஆணையிட்டார்.
அருள்கொண்ட உணர்வின்றி நெறிகோடி அறிவென்று
மருள்கொண்ட மன்னவனும் மந்திரிகள் தமைநோக்கித்
தெருள்கொண்டோர் இவர்சொன்ன தீயோனைச் செறுவதற்குப்
பொருள்கொண்டு விடாதென்பால் கொடுவாரும் எனப்புகன்றான்.
(பெரியபுராணம், திருநாவுக்கரசு நாயனார் புராணம், 90)
மன்னரின் உத்தரவை நிறைவேற்றுவதற்காகக் காவலர்களுடன் சென்ற மந்திரிகள், “மன்னர் அழைத்து வருமாறு கூறினார்” என்று கூறினர். துறவியான தான் பல்லவ மன்னரின் கட்டளைக்குப் பணிய வேண்டிய அவசியமில்லை என்று கூறி,
நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்
நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்
இன்பமே யெந்நாளுந் துன்ப மில்லை
தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான
சங்கரன்நற் சங்கவெண் குழையோர் காதிற்
கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்
கொய்ம்மலர்ச்சே வடிஇணையே குறுகி னோமே. (6:98:1)
என்னும் பாடலுடன் தொடங்கும் பதிகத்தைப் பாடினார். (இது அரசனின் ஆணைக்கு மறுமாற்றமாக அமைவதால் இது, “மறுமாற்றத் திருத்தாண்டகம்”, என்னும் பெயருடன் வழங்கப்படுகிறது.) தாண்டகம் என்னும் இப்பாவகையைப் பாடுவதில் பெருந்திறமை பெற்றவர் என்பதால் இவர் “தாண்டக வேந்தர்” என்றழைக்கப்பட்டார். பின்னர்த் திருஞானசம்பந்தரால் “அப்பரே” என்றழைக்கப்பட்டதால் ‘அப்பர்’ என்னும் பெயருக்கும் பெருமைக்கும் உரியவரானார்.
மன்னன் சமணர்களின் முறையீட்டால் திருநாவுக்கரசரைப் பலவிதங்களில் துன்புறுத்தினான். சுண்ணாம்புக் காளவாய்க்குள் சிறைவைத்தான். கடுமையான வெப்பமும் சுண்ணாம்பின் காரநெடியும் உயிருக்கு ஆபத்தான ஒன்று. ஆனால், ஏழு நாள்களுக்குப் பின்னும் இறைவன் அருளால் உயிரோடு வெளிவந்தார். இப்படிப்பட்ட நீற்றறைக்குள் (சுண்ணாம்புக் காளவாயில்) இருந்த அனுபவம் குறித்துப் பாடிய பாடல்தான் மிகவும் புகழ்பெற்ற பாடலான,
“மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே” (5:90:1)
என்பதாகும்.
”என் கடன் பணி செய்து கிடப்பதே” என்று கூறியதோடு தலங்கள் தோறும் உழவாரப் பணி மேற்கொண்டு உழவாரத் தொண்டர் என்று தொண்டுக்கு எடுத்துக்காட்டாய் விளங்கிய திருநாவுக்கரசரின் வரலாறு பெரிய புராணத்தில் 429 பாடல்களில் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.
பழந்தமிழ் இலக்கியங்களுள், முத்தமிழ் என்று தமிழைக் குறிப்பிட்டவர்களுள் ஒருவர் திருநாவுக்கரசராவார். “மூலநோய் தீர்க்கும் முதல்வன் கண்டாய், முத்தமிழும் நான்மறையும் ஆனான் கண்டாய்” (6:23:9) என்பது அவர் கூற்று. முத்தமிழில் ஒன்றான இசைத்தமிழ் வழக்கொழிந்து போய்க்கொண்டிருந்த காலத்தில் பல பண்களை மீட்டெடுக்க உதவியது தேவார காலமே எனலாம். திருநாவுக்கரசர் தேவாரத்தில் கீழ்க்காணும் பத்து வகையான பண்கள் காணப்படுகின்றன.
1. கொல்லி
2. காந்தாரம்
3. பியந்தைக்காந்தாரம்
4. சாதாரி
5. காந்தார பஞ்சமம்
6. பழந்தக்கராகம்
7. பழம் பஞ்சுரம்
8. இந்தளம்
9. சீகாமரம்
10. குறிஞ்சி
“மக்கள் மத்தியில் பக்தி இயக்கத்தை எடுத்துச் செல்லும் முயற்சியிலே நால்வருக்கும் புராணக் கதைகள் மிகவும் பயன்படும் மூலவளங்களாக அமைந்தன” என்று கூறுவார் கலாநிதி நா சுப்பிரமணியன்[5] குறிப்பாக இராவணனை அடக்கிய கதை, காலனை உதைத்த செய்தி, திருமால் பிரமன் ஆகியோர் அடிமுடி தேடி அறியாது தோற்ற வரலாறு, தக்சனது வேள்வியை அழித்தது முதலிய தொன்மச் செய்திகள் அடங்கும்.
தொன்மம் என்பது பழமையைக் குறிப்பது. இலக்கியங்களில் பழமையான கருத்துகளைப் பயன்படுத்துவது அல்லது எடுத்தாள்வதைத் தொன்மங்கள் என்று கூறுவர். இலக்கியங்களைப் பற்றி ஆராய்வோர் இதனைத் தொன்மவியல் என்று கூறுகின்றனர். தொல்காப்பியர் தொன்மங்கள் குறித்துக் கூறும்போது “தொன்மைதானே உரையொடு புணர்ந்த பழைமைமேற்றே” என்பார். உலகில் பிற மொழிகளிலும் கடவுள்பற்றிய செய்திகள் தொன்மச் செய்திகளைத் தாங்கி வருவதைக் காணலாம். பொதுவாகச் சமயம் சார்ந்த செய்திகளுள் தொன்மம் மிகுதியாகக் காணப்படுவது இயல்பு. சான்று காட்ட இயலாத பழமையான செய்திகளே தொன்மம் எனப்படுகின்றன. சமயக் குரவர்கள் தாங்கள் கேட்ட தொன்மக் கதைகள் பலவற்றையும் தம் தேவாரப் பாடல்களில் பதிவுசெய்துள்ளனர். எடுத்துக்காட்டாக, திருவாரூர்ப் போற்றித் திருத்தாண்டகத்தில் பதினைந்து தொன்மக் கதைகளை அப்பரடிகள் எடுத்துக்காட்டியுள்ளார்[6].
“வங்கமலி கடல் நஞ்சமுண்டாய் போற்றி” (பாடல் – 6:32:2)
“நஞ்சுடைய கண்டனே போற்றி போற்றி” (பாடல் – 6:32:5)
“குரைகழலாற் கூற்றுதைத்தகோவே போற்றி” (பாடல் – 6:32:7)
“ஆலமர நீழலறஞ் சொன்னாய் போற்றி” (பாடல் – 6:32:2)
“தெள்ளுநீர்க் கங்கைச் சடையாய்ப் போற்றி” (பாடல் – 6:32:8)
“மலையான் மடந்தை மணாளா போற்றி” (பாடல் – 6:32:3)
“பிரமன் சிரமரிந்த பெரியோய் போற்றி” (பாடல் – 6:32:10)
“திருமாலுக்கு ஆழி யளித்தாய் போற்றி (பாடல் – 6:32:9)
“கொல்புலித் தோலாடைக் குழகா போற்றி” (பாடல் – 6:32:2)
திருநாவுக்கரசர் ஆயிரக்கணக்கான மைல்கள் பயணம் மேற்கொண்டு கோவில்கள்தோறும் உழவாரப் பணி செய்தபோது, அவ்வவ்வூர்களின் இயற்கைச் சூழல்களை வர்ணிப்பதைக் காணலாம். அவ்வியற்கைச் சூழல்களில் இறைவனைத் தரிசிப்பதையும் காணமுடிகிறது. இதன்மூலம் அன்றைய சமூகத்தையும் சமூகச் சூழலையும் மக்களின் வாழ்க்கை முறைகளையும் எளிதில் அறியமுடிகிறது. மக்களைக் கவர்வதற்கென்று அன்றே திருஞானசம்பந்தராலும் திருநாவுக்கரசராலும் மேற்கொள்ளப்பட்ட உத்திமுறைகளுள் சில இசைச்சார்பு, இயற்கை வருணனை, முன்னோர் புகழ் போற்றல், சமூகத்தைத் தழுவிச் செல்லும் பாங்கு என்பனவாகும்[5]. தமிழோடு இசை பாடுவதைத் தம் வாழ்நாள் பணியாகக் கொண்டிருந்தவர் திருநாவுக்கரசர். இதனை,
“சலம்பூவொடு தூபம் மறந்தறியேன் தமிழோடிசை பாடல் மறந்தறியேன்
நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன் உன்னாமம்என் னாவில் மறந்தறியேன்
உலந்தார்தலை யிற்பலி கொண்டுழல்வாய் உடலுள்ளுறு சூலை தவிர்த்தருளாய்
அலந்தேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.” (4:1:6)
என்னும் பாடல் உணர்த்துவதைக் காணலாம்.
சங்க இலக்கியங்கள் உவமைகளால் சிறப்புற்றிருப்பதைப் பலரும் அறிவர். சில பாடல்களை எழுதியவரின் பெயர் தெரியாதபோது, அப்பாடலில் உள்ள உவமையால் பெயர்பெற்றவர்களையும் பார்க்கிறோம். தொல்காப்பியத்தில் உவமைக்காகவே, ‘உவமஇயல்’ என்று ஓர் இயல் அமைக்கப்பட்டுள்ளது. எளிய உவமைகள் மிகச்சிறந்த பொருளை விளங்கவைக்க உதவுகின்றன. இதனைத் திருநாவுக்கரசர் தேவாரத்திலும் காணமுடிகிறது. சமணத்திலிருந்து சைவத்திற்கு மாறியது குறித்துக் கூறும்போது இவர் சிறந்த உவமைகளைக் கையாளுவதைக் காணமுடிகிறது.
கனியிருக்கக் காய்கவர்ந்த கள்வ னேனே (4:1:1)
முயல்விட்டுக் காக்கைப்பின் போன வாறே (4:1:2)
அறமிருக்க மறம் விலைக்குக் கொண்டவாறே (4:1:3)
இருட்டறையில் மலடுகறந் தெய்த்தவாறே (4:1:6)
கரும்பிருக்க இரும்பு கடித்தெய்த்தவாறே (4:5:10)
விளக்கிருக்க மின்மினித்தீக் காய்ந்தவாறே (4:5:7)
இப்படிப்பட்ட உவமைகளின் மூலம் திருநாவுக்கரசருடைய தேவாரப் பாடல்கள் சமயம் என்பதற்கும் மேலாகச் சிறந்த இலக்கியத் தன்மை பெற்று மிளிர்கின்றன.
திருநாவுக்கரசர் தம் தேவாரப் பாடல்களில் பிற நாயன்மார்களையும் குறிப்பிட்டிருக்கிறார். இதன் மூலம் முன்னோரையும் மற்றவர்களையும் போற்றும் இவருடைய தன்மையை அறியமுடிகிறது. மேலும், இவை தமிழ் இலக்கிய வரலாற்றுக்கும் பெருந்துணைபுரிவதாக உள்ளன. இவ்வகையில் சாக்கிய நாயனார், சண்டீச நாயனார், கண்ணப்ப நாயனார், அமர்நீதி நாயனார் போன்றவர்கள் குறித்துக் கூறியுள்ளதை எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.
“கல்லினா லெறிந்து கஞ்சி தாமுணுஞ் சாக்கி யனார்
நெல்லினார் சோறு ணாமே நீள்விசும் பாள வைத்தார்
எல்லியாங் கெரிகையேந்தி யெழிறிகழ் நட்டமாடிக்
கொல்லியாம் பண்ணுகந்தார் குறுக்கை வீரட்டனாரே” (4:49:6)
“ஆமலி பாலு நெய்யு மாட்டியர்ச் சனைகள் செய்து
பூமலி கொன்றை சூட்டப் பொறாததன் றாதை தாளைக்
கூர்மழு வொன்றா லோச்சக் குளிர்சடைக் கொன்றை மாலைத்
தாமநற் சண்டிக் கீந்தார் சாய்க்காடு மேவி னாரே” (4:65:6)
“குவப்பெருந் தடக்கை வேடன் கொடுஞ்சிலை யிறைச்சிப் பாரம்
துவர்ப்பெருஞ் செருப்பா னீக்கித் தூயவாய்க் கலச மாட்ட
உவப்பெருங் குருதி சோர வொருகணை யிடந்தங் கப்பத்
தவப்பெருந் தேவு செய்தார் சாய்க்காடு மேவி னாரே” (4:65:8)
தமிழ் மக்களின் விழிப்புணர்வு இன்மையால் செல்லரித்துப் போன பாடல்கள் போக எஞ்சிய பாடல்களே இன்றுள்ளவையாகும். இவர்தம் தேவாரப் பாடல்களும் வரலாறும் திருக்கோவில் வழிபாடு, தொண்டு என்பதையும் தாண்டி மனிதநேயத்தினை வலியுறுத்துவனவாக உள்ளன. பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தி எண்பத்தொரு வயதுவரை வாழ்ந்த திருநாவுக்கரசருடைய வரலாற்றைத் தெளிவாக அறிய சேக்கிழாரின் பெரிய புராணம் பெரிதும் துணைபுரிகிறது.
திருஞானசம்பந்தர்
“நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன்” (7:62:8) என்று சுந்தரரால் போற்றப்பட்ட பெருமைக்குரியவர் திருஞானசம்பந்தர். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் ஆளுடையபிள்ளை என்பதாகும். இவர் மூன்று வயது குழந்தையாக இருந்தபோது ஒருநாள் இவருடைய தந்தையார், தோணியப்பர் ஆலயக் குளக்கரையில் அமரவைத்துவிட்டுக் குளிக்கச் சென்றதாகவும் நீருக்குள் மூழ்கிய தந்தை நெடுநேரமாகியும் வராததை அறிந்த குழந்தை அழ, உமாதேவியார் தம் கையால் அமுதப்பாலைக் குழந்தைக்குக் கொடுக்க, குளித்துவிட்டுவந்த தந்தையார் குழந்தையின் வாயில் பால் ஒழுகுவதைப் பார்க்கிறார். பால் யார் கொடுத்தது என்று தந்தையார் வினவ, பிள்ளையோ திருத்தல ஈசர் தோணியப்பரைக் காட்டி, “தோடுடைய செவியன்” என்னும் முதற் பதிகத்தைப் பாடியருளினார். அதோடு ஞானப்பால் உண்டதால் ஞானசம்பந்தர் என்றும் அழைக்கப்படலானார்.
இளம்பருவத்திலேயே தமக்குக் கிடைத்த அருள் ஞானத்தால் தேவாரப் பதிகங்களைப் பாடியதால் அப்பதிகங்களில் சைவத் தத்துவக் கருத்துகளும் இடம்பெற்றுள்ளன. தேவாரம் பாடியவர்களுள் திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் பொ.ஊ. 7-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஒரே காலகட்டத்தில் வாழ்ந்தவர்கள். சேக்கிழார் இயற்றிய பெரிய புராணத்தில் இவரைப் பற்றிய பாடல்களே அதிகமான இடத்தைப் பிடித்துள்ளன. இவருடைய வரலாறு பெரிய புராணத்தில் 4286 பாடல்களில் விவரிக்கப்பட்டுள்ளது[5].
திருஞானசம்பந்தர் முறையான இசைப்பயிற்சியுடனும் சந்தம் என்னும் ஒலிக்கோலச் சிறப்புடனும் கட்டளை அமைப்புடனும் பாடும் திறன்கொண்டவராக விளங்கினார் என்று இவரைப் பற்றிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன[5]. தம்மைத் தமிழ் ஞானசம்பந்தர் என்னும் பெருமிதத்துடன் கூறிக்கொள்ளும் தன்மையையும் தமிழ்ப் பற்றினையும் இவரிடத்துக் காணமுடிகிறது.
`ஞானத்துயர் சம்பந்தன்
நலங்கொள் தமிழ்’ (1:14:11)
`எந்தையடி வந்தணுகு
சந்தமொடு செந்தமிழ்’ (3:68:11)
`பாரின்மலி கின்றபுகழ் நின்றதமிழ் ஞானசம் பந்தனுரைசெய்
சீரின்மலி செந்தமிழ்கள்’ (3:75:11)
`முத்தமிழ் விரகனே
நானுரைத்த செந்தமிழ் பத்துமே’ (3:115:11)
திருஞானசம்பந்தர் பல்வேறு வகையான யாப்பு வடிவங்களைக் கையாண்டிருக்கின்றார். தமிழ்மொழியைப் பல்வேறு வகையிலும் தம்மால் கையாளமுடியும் என்பதை நிரூபிப்பதைப் போன்று பதினான்கு வகையான யாப்பு மற்றும் அமைப்பு முறைகளைக் கையாண்டுள்ளார்[5].
இயமகம், மாலைமாற்று, திருவிராகம், நாலடிமேல் வைப்பு, ஈரடி மேல் வைப்பு, திருவிருக்குக்குறள், ஏகபாதம், எழுகூற்றிருக்கை முதலிய யாப்பு மற்றும் அமைப்பு வேறுபாடுகளை இவருடைய பதிகங்களில் காணமுடிகின்றன. மேலும், திருஞானசம்பந்தர் பாடிய பாடல்களை முதல் மூன்று திருமுறையாக வகுத்தவர்கள் பண் அடிப்படையில் அவற்றைப் பின்வருமாறு 22 பண்களில் வகுத்துள்ளனர். இக்காலத்திலும் அப்பாடல்கள் அவற்றுக்குரிய பின்வரும் பண்களிலேயே பாடப்படுகின்றன. இவருடைய திருவீழிமிழலைப் பதிகத்தில் பண், பண்ணிசை, பண்மூலம் எழும் பல்வேறு ஓசை அதன்வழிவரும் சுவைபற்றியெல்லாம் குறிப்பிடுவதைக் காணமுடிகிறது. இவற்றை,
“பண்ணும்பத மேழும்பல வோசைத்தமி ழவையும்
உண்ணின்றதொர் சுவையும்முறு தாளத்தொலி பலவும்
மண்ணும்புன லுயிரும்வரு காற்றுஞ்சுடர் மூன்றும்
விண்ணும்முழு தானானிடம் வீழிம்மிழ லையே.” (1:11:4)
என்றும்,
1. நட்டபாடை
2. தக்கராகம்
3. பழந்தக்க ராகம்
4. தக்கேசி
5. குறிஞ்சி
6. வியாழக் குறிஞ்சி
7. மேகராகக் குறிஞ்சி யாழ்முரி
8. இந்தளம்
9. சீகாமரம்
10. காந்தாரம்
11. பியந்தைக் காந்தாரம்
12. நட்டராகம்
13. செவ்வழி
14. காந்தார பஞ்சமம்
15. கொல்லி
16. கொல்லிக் கௌவாணம்
17. கௌசிகம்
18. பஞ்சமம்
19. சாதாரி
20. பழம் பஞ்சுரம்
21. புறநீர்மை
22. அந்தாளிக் குறிஞ்சி
என்றும் இடம்பெற்றிருப்பதைக் காணமுடிகிறது.
தமிழில் பின்னாளில் உருவான ‘சித்திர கவித்துவம்’ எனப்படும் புலமைக்கும் இவரே முன்னோடி என்று கூறுவர். இசையோடு பாடுவதில் வல்லவராகத் திகழ்ந்த இவருடைய சந்தப் புலமையே பின்னாளில் அருணகிரி நாதரின் சந்த இசைப்புலமைக்கு முன்னோடியாக அமைந்துள்ளது[5]. “சம்பந்தர் பாடல்களில் பல சித்திரக்கவிகள் காணப்படுகின்றன. இவை தேவார காலத்தில் சித்திரகவிகளின் செல்வாக்கைக் காட்டுவனவாக அமைந்துள்ளன”[7] என்று மாதவி கூறுகிறார். மாலையின் அமைப்புடன் அமையும் சித்திரக்கவியையே மாலைமாற்று என்றும் குறிப்பிடுகின்றனர். பழந்தமிழ் இலக்கியங்களில் இதற்கான விதையோ சிறுகூறோ அமையவில்லை என்று கூறப்படுகிறது[7].
இப்பாடல்களை முதலிலிருந்து படித்தாலும் அல்லது இறுதியிலிருந்து படித்தாலும் பாடலின் சொற்களோ பொருளோ மாற்றமின்றி இருக்கும். சித்திரக்கவி என்னும் பகுப்பைச் சேர்ந்த இம்மாலைமாற்று குறித்துத் தண்டியலங்காரத்திலும் கூறப்பட்டுள்ளது. மூன்றாம் திருமுறையில் உள்ள 117 சீகாழிப் பதிகத்தில் அமைந்துள்ள பாடல்களைக் காண்க.
யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா. (3:117:1)
யாகாயாழீ காயாகா தாயாராரா தாயாயா
யாயாதாரா ராயாதா காயாகாழீ யாகாயா. (3:117:2)
நீவாவாயா காயாழீ காவாவானோ வாராமே
மேராவானோ வாவாகா ழீயாகாயா வாவாநீ .(3:117:4)
இவருடைய பாடல்கள் இயற்கை வருணனைகளை அதிகம் கொண்டவை. ஒவ்வொரு பாடலிலும் ஈரடிகள் இயற்கைச் சூழலை வருணிப்பதையும் ஈரடிகள் இறைவனைப் பற்றிப் பேசுவதையும் காணமுடிகிறது. சில பாடல்களில் மூன்றாவது அடியிலும் வருணனைகள் தொடர்வதைக் காணலாம்.
“பீலிம்மயில் பெடையோடுறை பொழில்சூழ்கழை முத்தம்
சூலிம்மணி தரைமேனிறை சொரியும்விரி சாரல்
ஆலிம்மழை தவழும்பொழி லண்ணாமலை யண்ணல்
காலன்வலி தொலைசேவடி தொழுவாரன புகழே.” (1:10:3)
திருஞானசம்பந்தரின் இவ்வாறான இயற்கை ஈடுபாட்டுக்குக் காரணம் அவருடைய இளமைப்பருவமே என்பர். பொதுவாக, தாம் வசிக்கும் சூழலை யாரேனும் புகழ்ந்து கூறக் கேட்டால் அதனை அப்பகுதியிலுள்ளோர் விரும்பி ரசிப்பர்; விரும்பிக் கேட்பர். இது இயல்பு. சம்பந்தர் பல்வேறு ஊர்களுக்கும் பயணம் செய்தவர். அதனால், பல்வேறு ஊர்களைப் பற்றியும் அவ்வூரின் சூழல் குறித்தும் நன்கறிந்தவர்.
திருஞானசம்பந்தர் பாடல்களிலும் திருநாவுக்கரசரைப் போன்றே முன்னோர்களைப் போற்றும்; முன்னோர்களின் புகழ்பாடும் தன்மையைக் காணமுடிகிறது. இதன் மூலம் கற்போரும் பிற்காலத்தில் ஆய்வுநோக்கில் இலக்கியங்களை அணுகுவோரும் வரலாற்றுச் சான்றுகளாக இவற்றை நோக்குவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் தன்மையில் இவருடைய பாடல்கள் அமைந்துள்ளன. இவ்வகையில் சண்டீசர், கண்ணப்பர், கோச்செங்கட்சோழர், நமிநந்தியடிகள், அமர்நீதி நாயனார் போன்ற நாயன்மார்களைப் போற்றும் தன்மையைக் காணமுடிகிறது.
“வந்தமண லால்இலிங்கம் மண்ணியின்கட் பாலாட்டும்
சிந்தைசெய்வோன் றன்கருமந் தேர்ந்துசிதைப் பான்வருமத்
தந்தைதனைச் சாடுதலுஞ் சண்டீச னென்றருளிக்
கொந்தணவு மலர்கொடுத்தான் கோளிலியெம் பெருமானே.” (1:62:4)
“நிலந்த ணீரோ டனல்கால் விசும்பி னீர்மையான்
சிலந்தி செங்கட் சோழனாகச் செய்தானூர்
அலந்த வடியா னற்றைக் கன்றோர் காசெய்திப்
புலர்ந்த காலை மாலை போற்றும் புத்தூரே.” (2:63:7)
பக்தி இயக்கம் என்பது ஓர் இயக்கம் மட்டுமல்லாமல் அது அன்று சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினரையும் அரவணைத்துச் செல்லும் தன்மையிலும் பேரியக்கமாகவும் இருந்ததைக் காணமுடிகிறது. பஞ்சம் நிலவியபோது அடியவர்களுக்குத் திருவமுது செய்வித்த தன்மையையும் பார்க்கமுடிகிறது.
சுந்தரர்
சமயக் குரவர்கள் நால்வருள் ஏனைய சிவனடியார்களின் பெருமையை உலகமறியச் செய்த பெருமை சுந்தரருக்கே உரியதாகும். சுந்தரருக்குப் பெற்றோர் இட்ட பெயர் நம்பியாரூரர் என்பதாகும். இதனைச் சுருக்கி ஆரூரன் என்று அழைக்கப்பட்டார். இவருடைய அழகினைக் கண்டு சிவபெருமான் சுந்தரர் என்று அழைத்தமையால் அப்பெயரே நிலைபெற்றது.
ஆரூரரின் தந்தை சடையனார் மகனுக்குத் திருமணம் செய்ய எண்ணினார். திருமண நாளும் வந்தது. ஆரூரர் திருமணப்பந்தலுள் மணத்தவிசில் அமர்ந்தார். அவரைத் தடுத்தாட்கொள்ளும் பொருட்டு முதிய வேதியராய் வந்த இறைவன், திருமணக்கூடத்துக்குள் நுழைந்து, ஆரூரை நோக்கி ‘உனக்கும் எனக்கும் ஒரு வழக்கு உள்ளது. அதனை முடித்தபின் திருமணத்தைச் செய்ய முயலுக’ என்றார். மேலும், ‘இந் நாவலூரன் எனக்கு வழிவழி அடிமை’ என்று கூற அனைவரும் திடுக்கிட்டனர். ஆதாரமாக ஓலையைக் காட்ட ‘அந்தணர்கள் அடிமையாதல் என்பது இவ்வுலகில் எங்கும் கேட்டதில்லை. நீ பித்தனோ?’ என்றார் நம்பியாரூரர். அதோடு அந்த ஓலையையும் கிழித்தெறிந்தார். வழக்குத் திருவெண்ணெய் நல்லூர் அவைக்குச் சென்றது. அங்கே மூலவோலையைக் காட்டி இறைவன் சுந்தரரைத் தடுத்தாட்கொண்டார். சுந்தரரும் அடிமை என்பதை ஒப்புக்கொண்டு உம் இல்லம் இவ்வூரில் எங்குள்ளது என்று கேட்டு அவருடன் சென்றார். திருவெண்ணெய் நல்லூரிலுள்ள திருவருட்டுறை என்னும் திருக்கோயிலுட் புகுந்து இறைவன் மறைந்தார். திகைத்து நின்ற நம்பியாரூரர், ‘மறைந்தது என்கொலோ’ என்றழைத்தார். ‘நம்மிடம் நீ வன்மை பேசியதால் வன்றொண்டர் என்ற பெயரைப் பெற்றாய். அன்பினாலே சிறந்தது அர்ச்சனைப் பாடல்களே ஆகும். செந்தமிழால் பாடிப் போற்றுக’ என்னும் ஒலிகேட்க, ‘எத்தகைய சொற்களால் பாடுவேன்’ என்று ஆரூரர் கூற, “நீ என்னைப் பித்தன் என்றழைத்தமையால் பித்தன் என்றே பாடுக” என்னும் ஒலி கேட்க சுந்தரர்,
பித்தாபிறை சூடீபெரு மானேயரு ளாளா
எத்தான்மற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னை
வைத்தாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
அத்தாஉனக் காளாய்இனி அல்லேனென லாமே. (7:001:1)
என்று தொடங்கும் பதிகத்தைப் பாடியருளினார்.
சுந்தரர் அருளிய ‘திருத்தொண்டத் தொகை’யில் தில்லைவாழ் அந்தணர் முதலான 72 நாயன்மார்களைப் போற்றிப் பாடியுள்ளார். இதனை ஆதாரமாகக் கொண்டுதான் நம்பியாண்டார் நம்பிகள் திருத்தொண்டார் திருவந்தாதியை இயற்றினார். இவை இரண்டையும் ஆதாரமாகக் கொண்டுதான் சுந்தரரைக் காப்பியத் தலைவராகக் கொண்டு சேக்கிழார் திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராண நூலை இயற்றியருளினார்.
பெரிய புராணத்தை இயற்றிய சேக்கிழாரைப் பெருமைப்படுத்தும் விதமாக மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை சேக்கிழார் பிள்ளைத்தமிழை இயற்றினார். இப்பிள்ளைத்தமிழ் நூலில் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை காப்புப் பருவத்தைப் பாடுவதற்கும் உதவியாக இருந்தது சுந்தரரின் திருத்தொண்டத் தொகையே ஆகும். இதன் மூலம் சுந்தரரின் படைப்புகள் தமிழில் பல்வேறு நூல்கள் தோன்றுவதற்குக் காரணமாக இருந்துள்ளதைக் காணமுடிகிறது.
சுந்தரர் திருப்பாடல்களில் இலக்கிய நலங்கள் பொன்னின் ஒளிபோல், பூவின் நறுமணம்போல், தேனின் தீஞ்சுவைபோல் இயற்கையாக அமைந்திருக்கும் என்று கூறுகிறார், தவத்திரு அ. வே. சாந்திகுமார சுவாமிகள்[3]. தாம் கண்ட இயற்கைக் காட்சிகளை இறைக்காட்சியுடன் உவமித்துப் பாடும் தன்மையினைச் சுந்தரருடைய பாடல்களில் காணலாம்.
“அந்தி வானமும் மேனியோ சொலும்” (7:36:4)
“செக்கர்வான் அந்தி அன்னானை” (7:38:8)
சுந்தரர் தம் பாடல்களில் முதலில் இறைவனையும் அடுத்து அவன் கோவில் கொண்டிருக்கும் இடத்தின் இயற்கை வளத்தையும் இணைத்தே பாடுகிறார்.
“குரும்பைமுலை மலர்க்குழலி கொண்ட தவங்கண்டு
குறிப்பினொடுஞ் சென்றவள்தன் குணத்தினை நன்கறிந்து
விரும்புவரம் கொடுத்து அவளை வேட்டருளிச் செய்த
விண்ணவர்கோன் கண்ணுதலோன் மேவிய ஊர் வினவில்
அரும்பருகே சுருப்பருவ அறுபதம் பண்பாட
அணிமயில்கள் நடமாடும் அணிபொழில்சூழ் அயலின்
கரும்பருகே கருங்குவளை கண்வளரும் கழனிக்
கமலங்கள் முகமலரும் கலயநல்லூர் காணே” (7:16:1)
இறைவனின் பெருமைகளைக் கூறி அவன் குடிகொண்டிருக்கும் ஊர் யாது எனக் கேட்டால், இயற்கைப் பொலிவுமிக்க திருக்கலயநல்லூர் ஆகும் எனக் கூறி, பாடலின் பிற்பகுதியில் அவ்வூர் இயற்கைச் சிறப்பினைப் பாடும் தன்மையைக் காணமுடிகிறது.
‘தேவர் தலைவனும், கண்ணையுடைய நெற்றியை உடையவனும் ஆகிய இறைவனது ஊர் யாது?’ என்று கேட்டால் `சுரும்பு’ என்னும் ஆண் வண்டுகள் இசைகூட்ட, அதற்கேற்ப ஏனைய பெண் வண்டுகள் பண்களைப்பாட, அதற்கொத்தாற்போல் அழகிய மயில்கள் நடனம் ஆடுகின்ற அரங்காகிய அழகிய சோலையைச் சூழ்ந்த அயலிடத்தில், கரும்பின் அருகே கரிய குவளை மலர் கண்ணுறங்குகின்ற வயல்களில் தாமரைகள் முகமலரும் திருக்கலயநல்லூரே என்று அறிக’ என்றவாறு இயற்கை வருணனை அமைந்துள்ளதைக் காணலாம்.
“நீள நின்று தொழுமின் நித்தலும் நீதியால்
ஆளும் நம்ம வினைகள் அல்கி அழிந்திடத்
தோளும் எட்டும் உடைய மாமணிச் சோதியான்
காளகண்டன் உறையும் தண்கழுக் குன்றமே.” (7:81:3)
இப்பாடல் தாம் பெற்ற இன்பம் மீதூர அவ்வின்பத்தினைப் பெற மற்றவர்களையும் இறைவனிடம் ஆற்றுப்படுத்தும் வகையில் ஆற்றுப்படை என்னும் சிற்றிலக்கிய அமைப்பில் இப்பாடல் திகழ்கிறது. சுந்தரர் பாடல்களில் அவர் சொற்களைத் தேர்ந்தெடுத்து, ஓசை ஒழுங்குடன் செவ்விய நடையில் பாடலியற்றும் தன்மையைக் காணமுடிகிறது.
“காய்ந்தவன் காய்ந்தவன் கண்ணழ
லாலன்று காமனைப்
பாய்ந்தவன் பாய்ந்தவன் பாதத்தி
னாலன்று கூற்றத்தை
ஆய்ந்தவன் ஆய்ந்தவன் ஆமாத்
தூர்எம் மடிகளார்
ஏய்ந்தவன் ஏய்ந்தவன் எம்பி
ராட்டியைப் பாகமே” (7:45:3)
“வாயாடி மாமறை ஓதிஓர்
வேதிய னாகிவந்து
தீயாடி யார்சினக் கேழலின்
பின்சென்றோர் வேடுவனாய்
வேயாடி யார்வெண்ணெய் நல்லூரில்
வைத்தெனை ஆளுங்கொண்ட
நாயாடி யார்க்கிடம் ஆவது
நந்திரு நாவலூரே” (7:17:8)
இப்பாடலில் நாயாடியார்; நா ஆடியார் என்பது தலைமையை ஆள்பவர் என்றும் இதில் ந+ய, என்பது ‘நமசிவாய’ என்னும் திருவைந்தெழுத்தில் உள்ள ந என்னும் மலத்தோடு நின்ற ‘ய’ என்னும் உயிரை ஆடியார், ஆட்கொண்டார் என்றும் நாயாடியார் என்பதற்குப் பேராசிரியர் வை. இரத்தினசபாபதி தத்துவப் பொருள் விளக்கம் தருகிறார்[6]. நாய்+ஆடியார் என்பது ஆளாகக் கொண்ட என்னுடைய நாய்த்தன்மையை – இழிவுத் தன்மையை அழித்தார் என்று பொருள்படும் வண்ணமாகவும் இது அமைந்துள்ளது.
சுந்தரர் தம் பாடல்களில் சொல் நயம் தோன்றப் பாடியுள்ளதோடு புதிய சொல்லாட்சிகளையும் அமைத்துக்கொண்டுள்ளதைக் காணமுடிகிறது. மனத்திட்பம் இல்லாதவர்களைச் சாதாரணமாக ஓட்டை நெஞ்சினர் என்று கூறுவதைக் காணலாம். ஆனால், சுந்தரரோ ‘மோழைமையாம் முட்டை மனத்தீர்’ (7:7:8) என்று மொழிகிறார். பாசமற்றவர் என்பதைப் பாசற்றவர் (7:50:7) என்றும் நஞ்சுண்டது பேதையர் செயல் என்பதை, ‘நஞ்சினை உண்டிட்ட பேதைப் பெருமான்’ (7:94:6) என்றும் சொல்வித்தகம் செய்வதையும் காணமுடிகிறது.
தமிழ் இரட்டை வழக்கு மொழி என்பர். இரட்டை வழக்கு என்பது ஒரே சமயத்தில் இரண்டு வகையான மொழி வழக்குகள் பயன்பாட்டில் இருப்பதைக் குறிப்பிடுவதாகும். எழுதத் தெரியாதவர்கள்கூடக் கையாளுவது பேச்சுமொழிதான். அதனால்தான் தமிழ் வாழும் மொழியாக இருக்க வேண்டுமானால், தமிழ் புழக்கத்தில் இருக்கவேண்டுமானால் தமிழில் பேசவேண்டும் என்று கூறுகிறோம். அதற்குப் பேச்சுத்தமிழ் வடிவத்தை அறிந்திருக்கவேண்டும். பேச்சுத்தமிழுக்கு ஏற்றவாறு சில சொற்கள் வேறுபடுவதையும் காணலாம். பேச்சுத்தமிழுக்கென்று உள்ள சொற்களை எழுத்துவழக்குக்கு மாற்றித்தான் எழுத்துத்தமிழில் கையாளுவது பெருவழக்காக உள்ளது. சுந்தரர் அன்றே தம் பாடல்களில் அதற்கான அமைதிகெடாமல் பேச்சுத்தமிழ்ச் சொற்களைக் கையாண்டிருக்கிறார். நானாவிதம் (82:1), இசுக்கு (49:3), பஞ்சதுட்டன் (34:5) என்பன போன்ற பேச்சுவழக்குச் சொற்களையும் காணமுடிகின்றன. இன்றைக்குப் பேச்சுவழக்கில், ‘கலாய்த்தல்,’ என்னும் சொல் கேலி, கிண்டல், லந்து, கட்டையைக் கொடுத்தல் எனப் பலவகைகளில் கையாளப்படுகிறது.
“நெண்டிக்கொண் டேயுங்க லாய்ப்பேன்
நிச்சய மேஇது திண்ணம்
மிண்டர்க்கு மிண்டலாற் பேசேன்
மெய்ப்பொரு ளன்றி யுணரேன்
பண்டங் கிலங்கையர் கோனைப்
பருவரைக் கீழடர்த் திட்ட
அண்டன் இருப்பதும் ஆரூர் அவர்
எம்மையும் ஆள்வரோ கேளீர்” (7:73:8)
என்னும் மேற்கண்ட இப்பாடலில், ‘கலாய்த்தல்’ (7:73:8) என்னும் இப்பேச்சுவழக்குச் சொல்லை அன்றே தம் பாடலில் உண்மைபற்றி ‘வாதிடுதல்’ என்னும் பொருளில் பயன்படுத்தி இருப்பதைக் காணமுடிகிறது.
மெய்ப்பாடுகள் எண்வகை என்பர். நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்று எண்வகைப்படுத்துவார் தொல்காப்பியர் (தொல். 1197). இவற்றுள் முதலிடம் பெறும் நகைச்சுவையினைச் சுந்தரர் பாடல்களில் மிகுதியாகக் காணலாம்.
“கங்கை யாளேல் வாய்தி றவாள்
கணப தியேல் வயிறு தாரி
அங்கை வேலோன் குமரன் பிள்ளை
தேவி யார்கோற் றட்டி யாளார்” (7:5:2)
பாடுவது இறைவனைப் பற்றியாக இருப்பினும், அந்த இறை பக்தியிலும் தமிழை இணைத்துப் பாடும் திறத்தினைக் காணமுடிகிறது. இதன் மூலம், ‘பக்தி’ எனினும் அது மொழியை விட்டுவிலகி நிற்கவில்லை என்பதைக் காணமுடிகிறது.
“செந்த மிழ்த்திறம் வல்லி ரோசெங்கண்
அரவம் முன்கையில் ஆடவே
வந்து நிற்குமி தென்கொ லோபலி
மாற்ற மாட்டோ மிடகிலோம்
பைந்தண் மாமலர் உந்து சோலைகள்
கந்த நாறுபைஞ் ஞீலியீர்
அந்தி வானமும் மேனி யோசொலும்
ஆர ணீய விடங்கரே” (7:36:4)
மாணிக்கவாசகர்
முன் கூறியதைப் போன்று, திருவாசகத்தை இயற்றியவர் மாணிக்கவாசகர்.
“வான்கலந்த மாணிக்கவாசக! நின் வாசகத்தை
நான்கலந்து பாடுங்கால், நற்கருப்பஞ்சற்றினிலே
தேன்கலந்து, பால்கலந்து, செழுங்கனித் தீஞ்சுவை கலந்து,என்
ஊன்கலந்து, உயிர்கலந்து, உவட்டாமல் இனிப்பதுவே!”
என்னும் இராமலிங்க அடிகளின் கூற்றும் ‘திருவாசகத்திற்கு உருகார் ஒருவாசகத்திற்கும் உருகார்’ என்னும் பழஞ்சொல்லின் சிறப்பும் மாணிக்கவாசகரின் திருவாசகத்தின் தன்மையையும் சிறப்பையும் எடுத்தியம்புவனவாகும். மேனாட்டு அறிஞர் ஜி.யு. போப்பைச் சமயம் என்னும் தடையையும் கடந்து கற்கச் செய்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டும் என்னும் ஆவலையும் தூண்டுவதற்குக் காரணமாக அமைந்தது திருவாசகத்தின் மேன்மையாகும்.
இவருடைய காலம் எது என்பதில் அறிஞர்கள் பலரும் மாறுபட்ட கருத்துகளைக் கொண்டுள்ளனர். சிலர் பொ.ஊ 3-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவராகலாம் என்கின்றனர். இந்தக் கருத்தினை முன்வைப்பவர்களுள் மறைமலையடிகள் முக்கியமானவர். சீனிவாச பிள்ளை, வெள்ளை வாரணன் போன்றோர் பொ.ஊ. 8-ஆம், 9-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்திருக்கலாம் என்னும் கருத்தை முன்வைப்பவர்களாக உள்ளனர்[5].
இவர் 63 நாயன்மார்களுள் ஒருவராக இல்லை. மேலும், சுந்தரரின் திருந்தொண்டர் தொகையிலும் இடம்பெறவில்லை. இதனால் மாணிக்கவாசகர், சுந்தரர் காலத்துக்குப் பிற்பட்டவராகப் பொ.ஊ. 9-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவராக இருக்கவேண்டும் என்பது பொதுவான முடிவு. இவருடைய இயற்பெயர் வாதவூரர் என்பதாகும். வாழ்ந்த காலமும் முப்பத்திரண்டு ஆண்டுகள் மட்டுமே என்றும் கூறப்படுகிறது.
மாணிக்கவாசகர் அரிமர்த்தன பாண்டிய மன்னனின் அமைச்சர். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் வாதவூரர் என்பதாகும். ஒருசமயம் மன்னன் அரிமர்த்தன பாண்டியன் நல்ல குதிரைகள் வாங்கி வரும்படி அமைச்சராக இருந்த வாதவூரரைப் பணித்து, அதற்குத் தேவையான பொன்னையும் கொடுத்தனுப்பினான். படைவீரர்களுடன் புறப்பட்ட அமைச்சர் திருப்பெருந்துறை வழியாகச் செல்கிறார். திருப்பெருந்துறையில் குருந்த மரத்தடியில் இறைவன் குருவாக எழுந்தருளியிருந்தார். “அமைச்சர் தோரணையுடன் வந்த திருவாதவூரருக்கு இந்தக் குருவின் காட்சி ஒரே விநாடியில் முழு மாற்றத்தைத் தந்துவிடுகிறது,”[9] என்று கூறுகிறார் அ. ச. ஞானசம்பந்தன். திருவாதவூரர் விரைந்து அருகில் சென்று குருநாதரின் திருவடியில் வீழ்ந்து வணங்கினார். வணங்கிய மாத்திரத்தில் குருநாதரின் திருவடி தீட்சை பெற்று ஞானத்தின் திருவுருவாகவே மாறிவிட்டார். வாதவூரர் குருநாதரின் முன் பாடிய தோத்திரங்கள் இனிமையாகவும் அருள் விளக்கத்துடனும் இருந்ததால் வாதவூரருக்குக் குருநாதர் மாணிக்கவாசகன் என்னும் பெயரைச் சூட்டியருளினார். அன்று முதல் திருவாதவாதவூரர் மாணிக்கவாசகர் என்றழைக்கப்பட்டார்.
குதிரை வாங்கக் கொண்டுவந்த பொருளை எல்லாம் கோவில் திருப்பணியில் செலவழித்தார். பின்னர், குருநாதரின் கட்டளைப்படி உத்தரகோசமங்கை சென்று அங்குக் குருநாரைக் காணாது வருந்தி நீத்தல் விண்ணப்பம் என்னும் தோத்திரம் செய்தார். பின்னர்ச் சோழநாட்டின் திருவிடைமருதூர் வந்தடைந்து இறைவன் அருள்நலத்தை நுகர்ந்து திருவாரூர் அடைந்து திருப்புலம்பல் என்னும் பதிகத்தை அருளினார். சீர்காழியை அடைந்து தோணியப்பரைத் தரிசித்துப் பிடித்தபத்து என்னும் பதிகத்தைப் பாடினார். திருவண்ணாமலை போன்ற பல தலங்களுக்கும் செல்லும்போது, செல்லும் இடங்களில் மக்கள் வாழ்வியலோடு வழக்கத்தில் இருந்த நாட்டுப்புறப் பாடல்களுக்கேற்பத் தம் பக்திப் பாடல்களுக்கு வடிவம் கொடுத்தார்; திருவெம்பாவை பாடினார். திருவண்ணாமலையில் பெண்கள் அம்மானையாடும் காட்சியைக் கண்டு அவர்கள் பாடுவதாக வைத்துத் திருவம்மானையையும் அருளினார். காஞ்சிபுரம், திருக்கழுகுன்றம் போன்ற தலங்களைத் தரிசித்துத் தில்லையை (சிதம்பரம்) வந்தடைந்தார்.
சிதம்பரத்தில் இப்படியாக இருந்து வரும் நாளில் அந்தணர் ஒருவர் அவரிடம் வந்து தான் பாண்டிய நாட்டைச் சேர்ந்தவர் என்றும் பல தருணங்களிலும் அவர் பாடிய பாடல்களை முறையாகப் பாடும்படியும் கூற மாணிக்கவாசகரும் தாம் பாடிய திருவாசகப் பாடல்கள் அனைத்தையும் பாடி முடித்தார். காலையில் இறைவனுக்குப் பூசை செய்ய வந்த அந்தணர் வாயிற்படியில் நூல் ஒன்று இருப்பதைக் கண்டு பிரித்துப் பார்த்தார். “திருவாதவூரர் பாடத் திருச்சிற்றம்பலமுடையான் எழுதியது” என்று கைச்சாத்து இடப்பட்டிருந்ததைக் கண்டு உடல் சிலிர்த்து வாதவூரரைக் கண்டு வணங்கினார். வாதவூரரும் இறைவன் திருவருளை எண்ணி வியந்தார். நூலின் பொருளை அந்தணர் மாணிக்கவாசகரிடம் கேட்க மாணிக்கவாசகரோ ‘நூலின் பொருள் அவனே’ என்று இறைவனைச் சுட்டிக்காட்டி மறைந்தார்.
“பாவை பாடிய வாயால் கோவை பாடுக” என்று இறைவன் கேட்டுக்கொண்டதாகவும் அவ்வேண்டுகோளை ஏற்றுத் திருக்கோவையார் என்னும் நூலை அருளிச் செய்தார் என்றும் செவிவழிக்கதைகள் கூறுகின்றன. “இறையனுபவப் பிழியலாகிய திருவாசகத்தைப் பாடிய பின் மாணிக்கவாசகர் திருக்கோவையாரைப் பாடியிருத்தல் இயலாத காரியம்”[9] என்று அ. ச. ஞானசம்பந்தன் கூறுகிறார். இதுவும் எண்ணிப்பார்க்கத் தக்கதாகவே உள்ளது.
மாணிக்கவாசகர் பாடிய நூல்களான திருவாசகமும் திருக்கோவையாரும் எட்டாம் திருமுறையாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இவருடைய திருவெம்பாவையில் தம்மை இவர் ஒரு பெண்ணாகப் பாவித்துப் பாடியுள்ளார்.
மாணிக்கவாசகர் இயற்றிய திருவெம்பாவை, மார்கழி மாதத்தில் விடியற்காலையில் இளம்பெண்கள் ஒருவரை ஒருவர் எழுப்பி, கூட்டமாய்க் கூடிக் குளத்தில் நீராடி, பாவை வைத்து வழிபாடு நடத்திப் பாவை விரதம் அனுசரிப்பதைக் கூறுகிறது. பாவை நோன்பு குறித்துச் சங்க இலக்கியங்களும் பேசுகின்றன. இதனைத் ‘தைந்நீராடல்’ என்று பழந்தமிழில் அழைத்தனர். பரிபாடலில், ‘தாயருகா நின்று தவத்தைந் நீராடுதல் நீயுரைத்தி வையை நதி’ என்று நல்லந்துவனார் வைகை ஆற்றின் சிறப்பினைக் கூறுகிறார். இப்பாவை நோன்பானது மழை பெய்து நாடு நலம் பெறவும் திருமணம் நன்முறையில் நடைபெறவும் பெண்களால் கடைப்பிடிக்கப்படும் ஒன்றாகும் என்பது பழங்கால வழக்கமாகும்.
திருப்பாவை, திருவம்மானை என்னும் அவருடைய பாடல்கள் அவரை ஒரு மகாகவிஞனாக இனங்காட்டுகின்றன என்று கூறுகிறார் கலாநிதி சுப்பிரமணியன்[5]. வைகறையின் காட்சியைப் படிப்படியாக உதயத்தின் ஒளி பரவுவதை அவர் படம்பிடித்துக்காட்டும் பாங்கினை,
“கோழி சிலம்பச் சிலம்பும் குருகெங்கும்
ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்கெங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ
வாழியீ தென்ன உறக்கமோ வாய்திறவாய்
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைபங் காளனையே பாடேலோர் எம்பாவாய்.” (திருவெம்பாவை பாடல் 8)
“கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணார் ஒளி மழுங்கித் தாரகைகள் தாமகல” (திருவெம்பாவை பாடல் 18)
என்னும் பாடல்களில் காண்கிறோம்.
பொய்கைகளில் நீராடும் பெண்களின் அசைவுகளையும் ஒலிக் கோலத்தோடு தருவதைப் பின்வரும் பாடல் படம்பிடித்துக் காட்டுவதைப் பார்க்கலாம்.
“காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாமாடச்
சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடிச்
சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி அந்தமா மாபாடிப்
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்”
(திருப்பாவை பாடல் 14)
மேற்கண்ட மாணிக்கவாசகரின் திருப்பாவைப் பாடலைப் படித்துவிட்டுப் ‘பெரிய இடத்துப் பெண்,’ திரைப்படத்தில் வரும் கண்ணதாசனின் பின்வரும் வரிகளைத் திரையிசையில் கேட்போர் இன்றைய கவிஞர்களிடம் மாணிக்கவாசகரின் பாடல்கள் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை அறியலாம்.
“கட்டோடு குழலாட ஆட-ஆட
கண்ணென்ற மீனாட ஆட-ஆட
கொத்தோடு நகையாட ஆட-ஆட
கொண்டாடும் மயிலே நீ ஆடு!” (கட்டோடு)
(கவியரசு கண்ணதாசன் – பெரிய இடத்துப்பெண்)
மாணிக்கவாசகரின் பக்தி அனுபவத்தின் உச்சத்திற்கான எடுத்துக்காட்டுத்தான் பின்வரும் பாடலாகும். இறைநம்பிக்கைகொண்ட எச்சமயத்தவரும் ஒப்பக்கூடிய அனுபவத்தையே மாணிக்கவாசகர் தம் அனுபவமாகக் கூறுகிறார். ஜி. யு போப் போன்ற அந்நிய சமயத்தவரும் திருவாசகத்தை மொழிபெயர்த்துச் சுவைப்பதற்கு இவ்வாறான பாடல்களே காரணமாக இருந்திருக்கும்.
தந்ததுன் றன்னைக் கொண்டதென் றன்னைச்
சங்கரா ஆர்கொலோ சதுரர்
அந்தமொன் றில்லா ஆனந்தம் பெற்றேன்
யாதுநீ பெற்றதொன் றென்பால்
சிந்தையே கோயில் கொண்டஎம் பெருமான்
திருப்பெருந் துறையுறை சிவனே
எந்தையே ஈசா உடலிடங் கொண்டாய்
யான்இதற் கிலன்ஓர்கைம் மாறே (8:22:10)
மாணிக்கவாசகரின் பாடல்கள் இன்றைய கவிஞர்களிடமும் திரையிசையிலும் ஏற்படுத்தியுள்ள தாக்கத்திற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகளைக் கூறலாம். அவ்வகையில், மேலும் ஓர் எடுத்துக்காட்டாக, மேற்கண்ட மாணிக்கவாசகரின் பாடலைப் படித்துவிட்டுப் ‘படகோட்டி’ என்னும் படத்தில் பின்வரும் வாலியின் புகழ்பெற்ற பாடலைப் பாருங்கள்.
“என்னை எடுத்து… தன்னைக் கொடுத்து… போனவன் போனாண்டி
தன்னைக் கொடுத்து என்னை அடைய வந்தாலும் வருவாண்டி
ஹோ… ஹோய்….போனவன் போனாண்டி”
(கவிஞர் வாலி – படகோட்டி)
மாணிக்கவாசகரின் நாட்டுப்புறப் பாடல் வடிவங்களையும் தம் இறையனுபவத்தையும் இறையுணர்வையும் வெளிப்படுத்துவதற்குரிய கருவியாகக் கையாண்டுள்ளார். திருவம்மானை, திருவெம்பாவை, திருப்பொற்சுண்ணம், திருக்கோத்தும்பி, திருத்தெள்ளேணம், திருச்சாழல், திருப்பூவல்லி, திருவுந்தியார், திருத்தோணக்கம், திருப்பொன்னூசல், திருப்பள்ளியெழுச்சி போன்ற இலக்கிய வடிவங்களை இதற்கு எடுத்துக்காட்டுகளாகக் கூறலாம். அவருக்குப் பிறகு சிற்றிலக்கியக்கியங்களில் ஏற்பட்ட வளர்ச்சிக்கும் பெருக்கத்திற்கும் இவருடைய பாடல்களும் பாடல் வடிவங்களும் பெரும்பங்காற்றியுள்ளன.
சரியை, கிரியை, யோகம், ஞானம்
பிறவியை நீக்கிப் பிறவாப் பேரின்ப நிலையை அடைவதற்கான மார்க்கங்களாக (வழிகளாக) சைவ சமயம் சரியை, கிரியை, யோகம், ஞானம் என நான்கு வழிகளைப் போதிக்கிறது. இந்நான்கு முறைகளில் இறைவனை அடையலாம் என்பதால் இந்த நான்கு வழிகளும், ‘சைவ நாற்பாதங்கள்’ என்று கூறப்படுகின்றன. சரியை என்பது தொண்டின் மூலம் இறைவனை அடைவதாகும். திருக்கோவிலைக் கூட்டுதல், மெழுகுதல், கழுவுதல், உழவாரப் பணி செய்தல், சிவனடியார்களைக் கண்டால் வணங்கி அவர்களுக்குச் சேவை செய்தல் போன்றவை அத்தொண்டுகளில் அடங்கும். திருநாவுக்கரசர் இந்நெறி நின்றவர் ஆவார்.
நாற்பாதங்களில் இரண்டாவதாகக் கூறப்படுவது கிரியை ஆகும். இது, குருவின் மூலமாக மந்திர தந்திரங்களை அறிந்து தீட்சைகளைப் பெற்றோர் மந்திரங்களை ஓதி அகத்தும் புறத்தும் ஆகம விதிப்படி மேற்கொள்ளும் வழிபாட்டு முறை ஆகும். நால்வருள் திருஞானசம்பந்தர் இந்நெறி நின்றவர் ஆவார்.
மூன்றாவதாகிய யோகநெறி என்பது சரியை, கிரியை ஆகிய நெறிகளைவிட மேலான நெறி என்று சாத்திர நூல்கள் கூறுகின்றன. அட்டாங்க யோகங்களில் பயிற்சி பெற்றோர் அனுசரிக்கக்கூடிய நெறி இதுவாகும். இதனை யோகியரிடம் பயின்ற திடசித்தமுடையவர்களே அனுட்டித்து ஈடேற முடியும் என்பர். சுந்தரமூர்த்தி நாயனார் யோக நெறி நின்றே இறைவனை வழிபாடு செய்தவர் ஆவார். இதனைத் தோழமைநெறி என்றும் கூறுவர்.
ஞான நெறியில் நின்று இறைவனை வழிபட்டவர் மாணிக்கவாசகர் ஆவார். ஞானம் என்பதற்கு அறிவு என்பது பொருள். இதனைச் சிவஞானம் என்றும் கூறுவர். இந்நெறி, எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவனை அறிவால் வழிபடுதல் ஆகும். குறிப்பாக, ஞானநூல்களின்வழி இறைவனாகிய மெய்ப்பொருளை அறிவது என்று கூறலாம்.
சமயக் குரவர் நால்வர்
சமயக் குரவர்கள் நால்வரும் நால்வகை மார்க்கங்களைக் கடைப்பிடித்தனர் என்று அவர்களது வாழ்க்கை வரலாறு நமக்கு உணர்த்துகிறது. திருநாவுக்கரசர், தாச மார்க்கத்தையும் (அடிமை உறவு); சம்பந்தர் சற்புத்திர மார்க்கத்தையும் (பிள்ளை உறவு); சுந்தரர் சகமார்க்கத்தையும் (நட்புறவு); மாணிக்கவாசகர் சன்மார்க்கத்தையும் (குரு-சீடன் உறவு) கடைப்பிடித்து நற்கதி அடைந்தனர். பதிகம் பாடப்பட்ட சிதம்பர நடராஜ ஆலயத்தில், ததிருநாவுக்கரசர் வலது கோபுர வாசல் வழியாக நுழைந்தார் என்றும் (அடிமை உறவு காரணமாக) சம்பந்தர் முன்கோபுர வாசல்வழியாக நுழைந்தார் என்றும் (பிள்ளை உறவு காரணமாக) சுந்தரர் பின்கோபுர வாசல் வழியாக நுழைந்தார் என்றும் (நட்புறவு காரணமாக) மாணிக்கவாசகர் இடது கோபுரவாசல்வழியாக நுழைந்தார் என்றும் (சீடர் உறவு காரணமாக) ஆய்வாளர் நடராஜன் குறிப்பிட்டுள்ளார்[10].
சிங்கப்பூரில் திருமுறையின்வழித் தமிழ்மொழி வளர்ச்சி
சிங்கப்பூரில் தமிழ்மொழியின் வளர்ச்சியில் திருமுறை, திருமுறை மாநாட்டின் பங்கு குறிப்பிடத்தக்க ஒன்றாகும். திருமுறையில் மாணவர்களின் ஈடுபாட்டை அதிகரிக்கச் செய்யும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த 1981-ஆம் ஆண்டுமுதல் ஆண்டுதோறும் திருமுறை மாநாடு மூன்றுநாள் நிகழ்வாக நடத்தப்பட்டு வருகிறது. இதற்காகச் சிறந்த பேச்சாளர்கள் அடையாளம் காணப்பட்டு இந்தியா, இலங்கை, மலேசியா போன்ற வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்டு மிகச்சிறப்பாக நடத்தப்படுகிறது.
சிங்கையில் திருமுறை வாழவேண்டுமென்றால் அது இளையர்களிடம் கொண்டு சேர்க்கப்படவேண்டும் என்னும் நோக்கில் 1983-ஆம் ஆண்டுமுதல் மாநாட்டின் முக்கிய அங்கமாகத் திருமுறை ஓதும் போட்டியும் 1987-ஆம் ஆண்டுமுதல் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, திருவேடப்போட்டி, வண்ணம் தீட்டும் போட்டி எனப் பல்வேறு போட்டிகளுக்கும் ஏற்பாடு செய்து நடத்தப்படுகின்றன. மாணவர்களுக்குத் திருமுறையைப் பண்ணோடு பாடக் கற்றுக்கொடுக்கவேண்டும் என்னும் நோக்கில் சிங்கைக் கோவில்களில் திருமுறை வகுப்புகள் நடத்தப்படுகின்றன. தற்சமயம் சிங்கப்பூரில் 7 கோவில்களில் ஓதுவார்கள் நியமிக்கப்பட்டுத் திருமுறைகளை இசையோடு பாடுவதோடு மாணவர்களுக்குத் திருமுறைக் கல்வியும் வழங்கப்படுகிறது. தற்போது 16 கோவில்களில் பெரியவர்கள் சிறுவர்கள் எனத் திருமுறை பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 600-ஆக உள்ளது (2021) என்று கூறுகிறது சிங்கப்பூர்த் திருமுறை மாநாட்டு மலர்[11]. இதற்குக் காரணம் ஆண்டுதோறும் நடைபெறும் திருமுறைப் போட்டிகளே ஆகும். தற்போது திருமுறை மாநாட்டில் 38 போட்டிகள் நடத்தப்படுகின்றன. போட்டிக்காகப் பதிவுசெய்துகொள்பவர்களின் எண்ணிக்கை 1000க்கும் மேல் உள்ளது. சுமார் 750க்கும் மேற்பட்டவர்கள் போட்டிகளில் கலந்துகொள்கிறார்கள். கடந்த 2010-ஆம் ஆண்டுமுதல் 2020ஆம் ஆண்டு வரையில் போட்டியில் கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கை 7600 என்றும் குறிப்பிடுகிறது அண்மையில் 40-ஆம் ஆண்டின் நிறைவாக வெளியிடப்பட்டது திருமுறை மாநாட்டு இதழ். இதன்மூலம் நம் பண்பாடு, நாகரிகம், மொழி அனைத்தும் பேணிக்காக்கப்படுகின்றன.
திருமுறை மாநாட்டின்போது ஒவ்வோர் ஆண்டும் கையேடுகள், ஒலித்தட்டுகள், ஒளிக்காட்சிகள், நூல்கள் எனத் திருமுறை வெளியீடுகளை வெளிக்கொணர்வதும் வழக்கமாக உள்ளது. எடுத்துக்காட்டாக, பன்னிரு திருமுறைப் பாடல்கள், பாடல்களுக்கான விளக்கவுரைகள், திருமுறைப் பொழிப்புரை, குரலிசை, காரைக்கால் அம்மையார் பாடல்கள், திருவாசகப் பாடல்கள் போன்றவை ஒலிநாடாக்களாக வெளியீடு கண்டுள்ளன. மேலும், அ.கி. வரதராசனின் தயாரிப்பில் பித்தா பிறைசூடி, திருநீலகண்டர், திலகவதியார், ஒரு நம்பி அப்பூதி, நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தர், கண்ணப்ப நாயனார் போன்ற தலைப்புகளில் நாயன்மார்களின் வரலாறுகள் வாழ்நாள் முழுதும் மறக்கா வண்ணம் பெரியபுராணத்தை அடியொற்றி இசை, நாட்டிய நாடகங்களாகத் தத்ரூபமாக நடிக்கப்பட்டு அவை இணையத்தளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
முடிவுரை
அன்று தொட்டு இன்று வரை தமிழின் வளர்ச்சி என்று பார்க்கும்போது அதனைச் சமய இலக்கியங்களை ஒதுக்கிவிட்டுப் பார்க்க முடியாது. தமிழ்மொழியைப் பொறுத்தவரை எந்தச் சமயத்தைச் சார்ந்த இலக்கியங்களாயினும் அவை சமயம் என்பதையும் கடந்து தமிழின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பதையே இலக்கிய வரலாறு நமக்கு உணர்த்துகிறது. திருமுறைகள் சைவத்தின் வளர்ச்சியையும் வாழ்வையும் அதன் அடிநாதமாகக் கொண்டிருப்பினும், இறையின் மாண்பைக் கூறுவதை நோக்கமாகக் கொண்டிருப்பினும் புதிய புதிய இலக்கிய மலர்ச்சிக்கும் வழிவகை செய்துள்ளன.25 அவ்வகையில் சமயக் குரவர்களாகிய திருநாவுக்கரசர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோரின் தேவாரம், திருவாசகம், திருக்கோவையார் என ஒவ்வொன்றும் தமிழின் வளர்ச்சியிலும் வரலாற்றிலும் மிக முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன. அதோடு, பிற்காலத்தில் பல்வேறுவகையான சிற்றிலக்கியங்களின் தோற்றத்திற்கும் வழிவகை செய்துள்ளதைக் காணமுடிகிறது.
துணைநூல்கள்
[1] வெள்ளைவாரணன், க. (1972). பன்னிரு திருமுறை வரலாறு. (முதற்பகுதி). அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.
[2] பெரியபுராணம், முதற் காண்டம், திருமலைச் சருக்கம் திருக்கூட்டச் சிறப்பு 8-ம் செய்யுள்.
[3] தவத்திரு சாந்திகுமார சுவாமிகள், அ.வே. இந்திய இலக்கியச் சிற்பிகள், சுந்தரமூர்த்தி சுவாமிகள். சாகித்திய அகாதெமி.
[4] சுப்பிரமணியம், வே. (1972). பன்னிரு திருமுறை வரலாறு. (முதற் பகுதி). அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.
[5] கலாநிதி சுப்பிரமணியன், நா. (2002), நால்வர் வாழ்வும் வாக்கும். கலைஞன் பதிப்பகம் (முதற்பதிப்பு).
[6] சிவசங்கர், சு. அப்பர் காட்டும் தொன்மக் கதைகள். https://www.facebook.com/FansClubElango/posts/430434550407769/
[7] மாதவி, ஆ. (1996). திருமுறைகளில் இறைமாண்பு, சிற்றிலக்கிய நோக்கில், சுமதி பதிப்பகம்.
[8] டாக்டர் இரத்தினசபாபதி, வை. (1986), சுந்தரர் ஓர் ஆய்வு (முதற்பகுதி). அவ்வை அச்சுக்கூடம்.
[9] ஞானசம்பந்தன், அ. ச. திருவாசகம் சில சிந்தனைகள் நான்கு அகவல்கள் 1. கங்கை புத்தக நிலையம் (முதற்பதிப்பு).
[10] நடராஜர், எஸ். (1982). நால்வர் காட்டிய வழி. சென்னை: பிரதிபா பிரசுரம்.
[11] சிங்கப்பூர்த் திருமுறை மாநாடு (மாநாட்டு மலர்), நாற்பதாண்டுப் பணிகள்: ஒரு பார்வை (திருநெறிய தமிழ்ப் பணி).