தமிழ்ச் சான்றோர்: கோ சாரங்கபாணி

தோற்றமும் வரலாறும்

இன்று சிங்கப்பூரில் தமிழ் அதிகாரத்துவ மொழியாகக் கோலோச்சுவதற்கு முக்கியக் காரணம் தமிழவேள் கோ சாரங்கபாணியின் பெரும் முயற்சியும் செயல்திறனுமே ஆகும். இவர் சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் வாழும் தமிழர்களிடையே அரியதோர் இடத்தில் வீற்றிருப்பவர். அரை நூற்றாண்டுக் காலம் சிங்கப்பூரில் வாழ்ந்த இவர், இங்குக் குடியேறிய இந்திய மக்கள், குறிப்பாகத் தமிழர்கள் இந்நாட்டில் நிலையாகக் காலூன்றுவதற்குப் பெருந்துணையாக இருந்தார். கோ சாரங்கபாணியின் வாழ்க்கை வரலாற்றிலிருந்து சிங்கப்பூர் – மலேசியத் தமிழர் வரலாற்றைப் பிரித்துப்பார்க்க இயலாது.

மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் தோன்றிய சமூகத் தலைவர்களுள் தமிழவேள் கோ சாரங்கபாணி ஒரு தனிச் சிறப்புப் பெற்ற தலைவர். இவர்க்கு முன்போ பின்போ இவரைப் போன்ற ஒரு தலைவரைச் சமுதாயம் கண்டதில்லை. “சிங்கப்பூர்-மலேசிய இந்திய மக்களின் நூற்றைம்பது ஆண்டு வரலாற்றில் சாரங்கபாணி போன்று மக்களின் பல்துறை முன்னேற்றத்திற்காகச் சிந்தித்துச் செயலாற்றி, பெருமளவு வெற்றிகண்ட தலைவர்கள் இல்லை என்று கூறலாம்,” என்னும் திரு. வை. திருநாவுக்கரசுவின் கருத்து இங்கு எடுத்துக்காட்டத்தக்கது. இந்த நாட்டைப் பிழைக்க வந்த நாடாகக் கருதாமல், தமிழர் தம் சொந்த நாடாகக் கருதி வாழ வழிகாட்டியவர், கோ சாரங்கபாணி.

தமிழ்நாட்டில் திருவாரூரைச் சார்ந்த விஜயபுரத்தில், 1903ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 20ஆம் தேதி, திரு கோவிந்தசாமி – தாயாரம்மாள் தம்பதிகளின் அன்பு மகனாய்ச் சாரங்கபாணி பிறந்தார். சிறுவயதிலேயே கல்வியில் மிகுந்த அக்கறையும் விளையாட்டில் விருப்பமும் கட்டுரைகள், கதைகள் எழுதுவதில் ஆர்வமும் கொண்டிருந்தார். இருபதாம் வயதில், ‘சீர்திருத்தச் சிங்கம்’ தந்தை பெரியாரின் குடி அரசு பத்திரிகையைப் படித்து, சுயமரியாதைக் கொள்கையில் ஈடுபாடுகொண்ட காரணத்தால், இவருடைய சமுதாயப் புரட்சி இயக்கத்தில் தம்மை இணைத்துக்கொண்டார். கருப்புச் சட்டை அணிந்தார்; அதனால் பெற்றோரால் கடிந்துகொள்ளப்பட்டார்.

இவர் 1924ஆம் ஆண்டு மூவர் துணையோடு சிங்கப்பூரில் குடியேறியபோது, இவர்க்கு வயது 21. இளமையும் சுறுசுறுப்பும் நிறைந்த சாரங்கபாணி, தொடக்கத்தில் மார்க்கெட் ஸ்திரீட்டிலிருந்த தமிழ் முஸ்லிம் வணிகர் ஒருவரின் ஏற்றுமதி-இறக்குமதி வணிக நிறுவனத்தில் கணக்கராக வாழ்க்கையைத் தொடங்கினார். அப்போதே பொதுத் தொண்டில் ஆர்வம் காட்டத் தொடங்கினார். சிங்கப்பூர்த் தமிழ் மக்களின் அப்போதைய நிலைகண்டு வருந்தினார். கள்ளுக்கடைகளில் தமிழர் கூட்டம், கங்காணிகளின் கட்டுப்பாடு, குடியிருப்பு வீடு இல்லாமை, அன்றாடங் காய்ச்சிகளாகத் தமிழர்கள் வாழ்வதைக் கண்டு வெதும்பினார். தமிழ்ப் பிள்ளைகளுக்குத் தமிழ்ப் பள்ளிகள் உருவாக்கப் பாடுபட்டார். படிப்பறிவில்லாத தமிழர் சமுதாயத்தை எழுத்தறிவுள்ள சமுதாயமாக மாற்றினார். ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் உயிர் மூச்சாக விளங்கிய தந்தை பெரியாரின் சுயமரியாதைக் கொள்கையைப் பரப்பினார்.

இவருடைய பொதுவாழ்வு, 16.1.1929-இல் ‘முன்னேற்றம்’ என்னும் வார இதழில் துணையாசிரியராகப் பணியில் சேர்ந்ததிலிருந்து ஆரம்பமாகியது. தமிழர்களின் ஒற்றுமைத் திருநாளாம் தமிழர் திருநாளைக் கண்ட பெருமையும் இவர்க்கு உண்டு. இந்தத் தமிழர் திருநாள் விழா மலைநாட்டுத் தமிழ்ப் பெருமக்களைத் தட்டியெழுப்பி அவர்களிடையே மொழியுணர்வு, கலையுணர்வு, பண்பாட்டுணர்வு, ஒற்றுமையுணர்வு ஆகியவற்றை ஏற்படுத்தின என்பது முற்றிலும் உண்மை. இதுவே சிங்கப்பூரில் தமிழ்ச் சமூகம் இன்றைக்கு மதிப்புக்குரிய இடத்தை வகிப்பதற்குக் காரணமாகும்.

பண்பும் வாழ்க்கைத் துணைநலமும்

தலைமை ஏற்போர்க்குத் தோற்றப் பொலிவும் ஒரு தகுதியாகும். இவ்வகையில், கோ சாரங்கபாணி தனிச்சிறப்புப் பெற்றுத் திகழ்ந்தார். கவிஞர் ந. பழனிவேலு தமிழவேளின் தோற்றத்தை இங்ஙனம் படம்பிடித்துக்காட்டுகிறார்:

a12 p1.png

 கண்டவர்கள் அவர்வடிவை மறக்க மாட்டார்;

          கண்ணுக்கு விருந்தாகும் சிவந்த மேனி,

 பண்டையநம் தமிழன்முடி, வேட்டி, சட்டை

           பால் வெள்ளை வேறெதையும் உடுத்த மாட்டார்

 நன்றாகச் சிந்திக்கும் பரந்த நெற்றி,

             நாசியதும் நனிகூர்மை, அறிவுக் கண்கள்…

உயரமானவர், உருவத்தில் மட்டுமல்ல, எண்ணங்களாலும்தான்! இவர் மொழித் தொண்டினால் முத்தமிழ்க் காவலரானார்; கல்விப் பணியால் கல்விக் காவலரானார்; சமூகப் பணியால் சமுதாயத் தலைவரானார்; நாட்டுப் பணியால் மக்கள் தொண்டரானார். இவரை அழைக்க வேறெந்தப் பெயரும் வேண்டாம் என்பதால் தமிழ் மக்களிடையே ‘தமிழவேள்’ ஆனார்.

செல்வி லிம் பூன் நியோ என்னும் சீனப் பெண்மணியை 1937ஆம் ஆண்டு காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இனிதே 37 ஆண்டுகள் இல்லறம் நடத்தி, ஆறு பிள்ளைகள் பெற்று வாழ்ந்தனர். இவருடைய மனைவி பிற சமூகத்தைச் சேர்ந்தவராக இருப்பினும், கோ சாரங்கபாணியின் பணிகளுக்குப் பெரும் ஒத்துழைப்பைத் தந்து வந்தார்.

படைத்த சாதனைகள்

கோ சாரங்கபாணி 1929இல் தொடங்கப்பட்ட ‘முன்னேற்றம்’ என்னும் வார இதழின் துணையாசிரியராகிப் பின்னர் அதன் ஆசிரியரானார். இவர் 1930இல் ‘சீர்திருத்தம்’ என்னும் மாத இதழை நடத்தினார். ‘Indian Daily Mail’ என்னும் ஆங்கில நாளிதழை 1939ஆம் ஆண்டிலிருந்து 1956ஆம் ஆண்டுவரை நடத்தினார். இதற்கிடையே தமிழ்முரசு தொடங்கப்பெற்ற சிறிது காலத்தில் ‘Reform’ என்னும் ஆங்கில மாத இதழை வெளியிட்டார். ‘தேசத் தூதன்’ என்னும் மாலை நாளிதழையும் மலாயாத் தலைநகர் கோலாலம்பூரில் நடத்தினார்.

ஓர் இதழை வெற்றியுடன் நடத்துவது என்பது மிகச் சிரமமானது என்பதை அனுபவமிக்கவர்கள் நன்கறிவர். யானையைக் கட்டித் தீனி போடும் செயலுக்கு இதனை ஒப்பிடுவார்கள். கோ சாரங்கபாணி, இத்துறையில் பெரும் வெற்றிகண்டவர் என்பதை 1935ஆம் ஆண்டில் தொடங்கப்பெற்ற ‘தமிழ் முரசு’, இவர் மறைவுக்குப் பின்னும் தொடர்ந்து இன்றுவரை நடைபோட்டுக்கொண்டிருப்பதே தக்க சான்றாகும்.

இவர் வாழ்வளிக்கும் நாட்டைத் தாயகமாய் ஏற்கும் மனப்பான்மையை மக்களிடையே ஏற்படுத்தித் தந்தார். மலேசிய இந்தியர் காங்கிரசை அமைத்த (1946) ஜான் திவி முதல் துன் சம்பந்தன், டான்ஸ்ரீ வெ. மாணிக்கவாசகம் முதலான அரசியல் தலைவர்கள்வரை இவ்வகையில் பாடுபட்டோர் பலர். இருப்பினும், ஒரு செல்வாக்குமிக்க நாளிதழ் ஆசிரியர் என்னும் முறையிலும், சிங்கப்பூர், மலேசிய மக்கள் மதித்துப் போற்றிய மதிப்புமிக்க சமுதாயத் தலைவர் என்னும் முறையிலும் தமிழவேள் சாரங்கபாணிக்கு இதில் தனிமுத்திரையுண்டு. 

சமுதாயத்தில் கோ சாரங்கபாணியின் பங்கு 

தமிழவேள் சாரங்கபாணியின் சமூகத் தொண்டு குறிப்பிட்ட ஓர் எல்லையோடு நிற்கவில்லை. தொலைநோக்குச் சிந்தனையாளராய்த் திகழ்ந்து சமுதாயத்தின் எதிர்கால வாழ்வுக்கு வழிவகுத்தார். இவர்க்கு முன்மாரதிரியாக இருந்தவர் பெரியார் என்றழைக்கப்படும் ஈ வே ராமசாமி. கண்மூடிப் பழக்கங்களால் மண்மூடிப் போய்க்கொண்டிருந்த தமிழர் வாழ்வில் மறுமலர்ச்சி தோன்ற வித்திட்டார், பெரியார். தன்மதிப்பு (சுயமரியாதை) உணர்வு பெறல், சாதிப் பிரிவுகளை மறுத்து ஒதுக்குதல், கைம்பெண் மறுமணத்தை ஆதரித்தல், சிக்கனத்தோடு சீர்திருத்தத் திருமணங்களைப் பரவலாக நடத்துதல், முன்னேற்றத்தைத் தடுக்கும் சடங்கு சம்பிரதாயங்களிலிருந்து விடுபடுதல் முதலான இவர்தம் கொள்கைகளை ஏற்றுச் சிங்கை, மலாயா வாழ் (பின்னாளில் மலேசியா) தமிழரிடையே அவற்றைப் பரப்ப உறுதிபூண்டார், கோ சாரங்கபாணி. தமிழர் சீர்திருத்தச் சங்கம், அகில மலாயா தமிழர் சங்கம், தமிழ்க் கல்விக் கழகம், தமிழர் பிரதிநிதித்துவ சபை (பின்னாளில் தமிழர் பேரவை), தமிழ் இளைஞர் மணிமன்றம் போன்ற அமைப்புகள் இவர் தோற்றுவித்தவையே. தன்னுணர்வற்றுக் கிடந்த மக்களிடையே ‘தமிழ்முரசு’ மூலம் தம் கொள்கைகளை உறுதியோடு நின்று பரப்பினார்; போற்றத்தக்க அளவு வெற்றியும் கண்டார்.

கொள்கைப் பிடிப்பும் சமுதாய நலனும், எந்த நிலையிலும் தளராத உறுதிப்பாடும், பொருளை முதன்மைப்படுத்தாது அறமனமுங்கொண்டு நடத்தப்பெறும் இதழால் நிகழ்காலத்திற்கு மட்டுமின்றி எதிர்காலத்திற்கும் நன்மைகள் பெருகும் என்பதற்குத் ‘தமிழ் முரசு’ நாளிதழ் எடுத்து.

a12 p2.png


“மலேசியத்தமிழ் மக்களின் வாழ்க்கையில் நம்பிக்கையை விதைத்தவர்; தமிழ் தன் தகுதிக்கான இடத்தைப் பெறப் போராடியவர். திரைகடலோடித் திரவியம் தேடச் சென்ற தமிழ் மக்கள் அனாதைகள் அல்லர் என்று தமிழ் முரசுவழி ஒலித்தவர்” என்று தமிழக முன்னாள் முதல்வர் மு கருணாநிதி பாராட்டியுள்ளார். கோ சாரங்கபாணி நடத்திய ‘தமிழ் முரசு’ எங்ஙனம் சமுதாயத்திற்கு ஒரு காவல் அரணாய் விளங்கிற்று என்பதைக் கவிஞர்கள் கவிதைவழிப் படம்பிடித்துக் காட்டுகின்றனர். தமிழகப் புலவர் சுத்தானந்த பாரதியார்,

அலைக டந்து தமிழ் முரசும்

ஆர்ப்பது கேளீர்

மலைக டந்து அருவிபோன்ற

மகர யாழொலி – கேளீர்

மங்களக் குழல்!

என்று தமிழ் முரசைப் புகழ்ந்தார்.

கோ சாரங்கபாணி வாழ்ந்த காலம் தமிழுக்குப் பொற்காலம். அது வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு சகாப்தமுமாகும். இவர் வாழ்ந்த காலத்தில் சமய-சமூக ஒருமைப்பாட்டுக்கும்  பல்லினச் சமுதாய ஒருமைப்பாட்டுக்கும் சிறந்த வழிகாட்டியாக விளங்கினார். மொழிவழித் தமிழர்களை ஒன்றுபடுத்தத் தமிழர் திருநாளை அறிமுகப்படுத்திய பெருமைக்குரிய பெருந்தகையாளர், கோ சாரங்கபாணி.

தொழிலும் கல்வியிலும் தமிழர்கள் ஈடுபடவும் இந்திய சமூகம் முன்னேறவும் குறிப்பாகப் பல்லினச் சமூகத்தோடு இணைந்து முன்னேறவும் தமிழ்மொழி உயர்நிலை பெறவும் அடிப்படைப் பணிகளை முடுக்கி, அடித்தளம் அமைத்துக் கொடுத்த சிறப்புக்குரியவர், கோ சாரங்கபாணி. இவரின் வழிகாட்டல் சிறந்த அரசியல் நாகரிகத்தின் வழிகாட்டலாக அமைந்துள்ளது. கோ சாரங்கபாணி  பெண் விடுதலைக்கும் குரல் கொடுத்தார்; பெண்கள் பொது வாழ்வில் காலடி வைக்க வகைசெய்தார். ஏதிலிப் (அனாதை) பிணங்களை உரியமுறையில் அடக்கஞ்செய்ய முன்வந்தார். அனாதைகள் என்று எவரையும் ஒதுக்குதல் நாகரிகமற்ற, பண்பாடற்ற செயல் என்று இவர் கருதினார்[1].

கோ சாரங்கபாணி எத்தனையோ எதிர்ப்புகளைக் கண்டவர்; எதிர்ப்பிலேயே வளர்ந்தவர்; எதிர்ப்பைத் தாங்கக்கூடிய இதயத்தைப் பெற்றவர். ‘எதையும் தாங்கும் இதயம்’ என்னும் தொடர் இவர்க்கு மிகமிகப் பொருந்தும். எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சாமல், ‘தன் கடன் பணி செய்து கிடப்பதே’ என்னும் குறிக்கோளுடன் இவர் நடைபோட்டார்.

சிங்கப்பூர் – மலேசியாவில் சுமார் அரை நூற்றாண்டுக் காலம் தமிழ்ச் சமூகத்தின் முன்னேற்றத்திற்காகவே அயராது பாடுபட்ட தமிழ்க்காவலர் கோ சாரங்கபாணி, 16.4.1974 அன்று இயற்கை எய்தினார். தமிழவேள் கோ சாரங்கபாணி, தனிமனிதரல்லர்; இவர் ஒரு சகாப்தம் என்று கூறுவார்கள்[2].

துணைநூல்கள்

[1]   முரசு நெடுமாறன். வெள்ளி விழா மலர் (சிங்கப்பூர் எழுத்தாளர் கழகம்). 

[2]   Elias, M (1997).  தமிழவேள் சாரங்கபாணி.

தலைப்புக்குப் பொருத்தமான பிற வளங்கள்

[1]  தமிழவேளும் தமிழ் முரசும் – https://www.tamilmurasu.com.sg/lifestyle/story20160228-1064.html

[2]  தமிழவேள் கோ சாரங்கபாணி வரவாறு, Jaynath Production. Published on 20 Jan 2017. https://www.youtube.com/watch?v=2aDhsT10QWo