தோற்றமும் வரலாறும்
தமிழ் என்றால் உ வே சா என்றும் உ வே சா என்றால் தமிழ் என்றும் பலர் குறிப்பிடுவதுண்டு. அந்த அளவிற்குத் தமிழுக்காகவே வாழ்ந்து, தமிழ்த் தொண்டாற்றி, தமிழை உலக மொழிகளிடையே ஒளிவீசச் செய்தவர் டாக்டர் உ வே சாமிநாத ஐயர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள உத்தமதானபுரம் என்னும் சிற்றூரில் இசை வல்லுநராக விளங்கிய வேங்கட சுப்பையர்க்கும் சரசுவதி அம்மாளுக்கும் மகனாக உ வே சா 5.2.1855இல் பிறந்தார். இவர் முழுப்பெயர் உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகன் சாமிநாதன் என்றும் இயற்பெயர் சாமிநாதன் என்றும் அறியப்படுகின்றன.
என் சரித்திரம் என்னும் இவர்தம் சுயசரிதை நூலில், உ வே சா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்[1]: “நான் பிறந்தபோது எனக்குச் சாமிநாதன் என்னும் பெயர் இடப்பட்டது. சாமிமலை என்னும் ஸ்தலத்திலுள்ள முருகக் கடவுளுக்குச் சாமிநாதனென்பது திருநாமம். எங்கள் ஊரினரும் பிறரும் அந்த ஸ்தலத்துக்குச் சென்று வருவார்கள். எங்கள் குடும்பத்தினருக்கும் அதில் ஈடுபாடு அதிகம். அது பற்றியே எனக்கு அப்பெயர் இட்டார்கள். எல்லோரும் என்னை, ‘சாமா’ என்றே அழைப்பார்கள். சாமிநாதனென்பதே மருவி அவ்வாறு ஆயிற்று.”
உ வே சாவின் இளமைக் கல்வி
உ வே சா இளம் பருவத்தில் தம் பாட்டனாரிடம் அரிச்சுவடி கற்றார். அதன்பின் துதிநூல்களைக் கற்றார். நிகண்டு, சதகம், நீதி நூல்கள், அந்தாதிகள் முதலியவற்றைத் தந்தை வேங்கட சுப்பையர் ஆசானாக இருந்து இவர்க்குக் கற்பித்தார். தந்தையார்க்கு இசையில் நாட்டம் அதிகம் இருந்தமையால் உ வே சாவைச் சங்கீத வித்துவானாக்க விரும்பினார். ஆனால், உ வே சாவோ தமிழை நன்கு கற்றுத் தேறவேண்டும் என்று விரும்பினார். அக்காலத்தில் ஆங்கிலம் தெரிந்தவர்கள் குறைவாக இருந்ததால் அவருடைய தந்தையார் இவர்க்கு ஆங்கிலம் கற்றுக்கொடுக்கவேண்டும் என்று விரும்பினார். மேலும், இவரது இசைப்பயிற்சிக்கு உதவும் என்பதால் தெலுங்கையும் கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்தார். ஆனால், உ வே சாவிற்கோ இவ்விரண்டு மொழிகளையும் கற்றுக்கொள்வதில் நாட்டம் இல்லை.
உ வே சா சடகோபையங்கார் என்பாரிடம் சில காலம் தமிழ் கற்றார். அவரிடம் இவர் பாகவதம், கம்பராமாயணம் முதலிய நூல்களைக் கற்றார். அதனால், இவர்க்குத் தமிழ்மொழியின்பால் ஈடுபாடு ஏற்பட்டது. அதன் பின்னர், குன்னம் என்னும் ஊரிலுள்ள சிதம்பரம் பிள்ளையிடம் சிறிய நூல்களையும் திருவிளையாடல் புராணத்தையும் கற்றார். பிறகு, காரைக்ககுடியிலிருந்த கஸ்தூரி ஐயங்காரிடம் தமிழ் கற்றார். இதனால், இவர் இளம் பருவத்திலேயே செய்யுள் இயற்றக் கற்றுக்கொண்டார்.
உ வே சாவிற்கு 16.6.1868ஆம் நாளன்று மதுராம்பிகை என்னும் பெண்ணோடு திருமணம் நடைபெற்றது. அப்போது இவர்க்கு வயது பதிமூன்று[2]. சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு, 1880ஆம் ஆண்டில், கும்பகோணத்தில் கல்லூரித் தமிழாசிரியராகப் பணிபுரிந்தபோதுதான் இவர்க்கு ஓர் ஆண்குழந்தை பிறந்தது.
கல்விப் பயணம்
விருதாசல ரெட்டியார் என்பாரிடம் உ வே சா யாப்பருங்கலக்காரிகை கற்றார். அப்போது இவர் மீனாட்சிசுந்தரம் பிள்ளையைப் பற்றிக் கேள்விப்பட்டார். மாயுரம் என்னும் ஊர்க்குச் சென்று அவரிடம் அதிகக் காலம் தமிழ் கற்றார். இவர் பல அந்தாதிகளையும் பிள்ளைத்தமிழ் நூல்களையும் பிரபந்தங்களையும் கற்றார். அவரிடத்தில் பாடம் கற்றதைப் பற்றிப் “பிள்ளை அவர்களிடம் வந்தேன். என்ன ஆச்சரியம்! எனக்குப் பெரிய விருந்து கிடைத்தது. என் பசிக்கு ஏற்ற உணவு. சில வேளைகளில் அதற்கு மிஞ்சிக்கூடக் கிடைக்கும். “இனி, எமக்குத் தமிழ் பஞ்சம் இல்லை என்ற முடிவுக்கு வந்தேன்” என்று தமிழ்த் தாத்தா குறிப்பிட்டுள்ளார்[3]. உ வே சாவிற்குத் தமிழ்மீது காதலையும் ஈடுபாட்டையும் ஏற்படுத்திய பெருமை மீனாட்சிசுந்தரம் பிள்ளையையே சாரும். மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் மறைவுக்குப் பிறகு, சுப்பிரமணிய தேசிகரிடம் இவர் கம்பராமாயணம், நன்னூல், சித்தாந்த நூல்கள் போன்றவற்றைக் கற்றார்.
உ வே சாவிற்குக் கும்பகோணத்தில் தமிழாசிரியராகப் பணிபுரியும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போது, இவருக்குச் சேலம் இராமசாமி முதலியாரைச் சந்திக்கும் வாய்ப்பும் கிட்டியது. அவர் சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவற்றைக் கற்கத் தூண்டினார்.
படைத்த சாதனைகள்
ஐம்பெருங்காப்பியங்களுள் சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் மூன்றையும் (ஏனைய குண்டலகேசி, வளையாபதி கிடைக்கவில்லை) சீரிய முறையில் ஆய்ந்து தமிழ்ப் பதிப்பு வரலாற்றின் வழிகாட்டியாக வெளியிட்ட பெருமை உ வே சாவிற்கு உண்டு. ஒரு சந்திப்பு ஒரு மனிதனின் போக்கையே மாற்றி, ஒரு மொழியின் புதையலைத் தேடித் தந்துவிட முடியும் என்றால் உ வே சாவும் இராமசாமி முதலியாரும் சந்தித்த நிகழ்ச்சியே ஆகும். அச்சந்திப்பு 21.10.1881 அன்று நிகழ்ந்தது. “பழந்தமிழ் நூல்களான சங்க இலக்கியங்களைப் படிக்கவில்லையா? சீவகசிந்தாமணி? சிலப்பதிகாரம்? மணிமேகலை?” என்று கேட்டவுடன் உ வே சாவால் பதில் சொல்ல முடியவில்லை. அந்தக் கேள்விதான்
உ வே சாவைச் சிந்திக்க வைத்தது.

அந்தச் சந்திப்பு நிகழும்வரை உ வே சா என்ன மனநிலையில் இருந்தார்? வழிபாட்டுச் சிற்றிலக்கியங்களைக் கற்பதும் கற்பிப்பதும் தம் வேலை என்று நினைத்திருந்தார். தமிழின் மற்றொரு பக்கம் இருப்பதை அன்றுதான் இவர் உணர்ந்தார். மறைந்து கிடக்கும் அந்தச் சங்க இலக்கியங்களையும் காப்பியங்களையும் தமிழுலகம் அறியுமாறு தரவேண்டும் என்று இலக்கியச் சுவடிகளைத் தேடி அலைந்து திரிந்தார். தேடுபணியில் எதிர்கொண்ட தடைகளைக் கண்டு இவர் அயரவில்லை; களைப்படையவில்லை; சலித்துக் கொள்ளவும் இல்லை. மேலும், நூல்களைத் தேடிக் கிடைக்காத இடங்களும் பல இருந்தன. தமிழ்மீது கொண்டிருந்த அளவுகடந்த காதல் இவரை வந்த இன்னல்களையெல்லாம் தாங்கிக்கொள்ள வைத்தது. அழிந்துபோகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்களை மீட்டெடுத்து அவற்றை அச்சிட்டுப் பதிப்பித்தார்.
அச்சுப்பதிப்பதில் தமது பங்களிப்பை ஆற்றிய காரணத்தால் தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும் செழுமையையும் உலகு அறியச் செய்தார். உ வே சா 102 நூல்களை அச்சுப் பதிப்பித்ததோடு 3000க்கும் அதிகமான ஏட்டுச்சுவடிகளையும் கையெழுத்தேடுகளையும் திரட்டினார். இவர் பட்ட துன்பங்கள் எல்லாம் சிலை தாங்கும் உளியின் தாக்குதல் என்றாகிச் சங்க இலக்கியங்களாக இன்று நம் கையில் தவழ்கின்றன. இதன் அடிப்படையில், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழுக்குத் தொண்டாற்றியவர்களுள் உ வே சா குறிப்பிடத்தக்கவராக விளங்கினார்.
இவர் 1878முதல் 1942வரை 62 ஆண்டுக்காலம் நூல்களைத் தேடிக் கொணர்ந்து பதிப்பிக்கும் பணியைச் செய்துவந்தார். இவருடைய பதிப்புகள் பிழையற்றவை; மேனாட்டுப் பதிப்புகள் போன்ற அமைப்புடையவை. மேலே குறிபிடப்பட்டுள்ள நூல்களைத் தவிர, பத்துப்பாட்டு, புறநானூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், அடியார்க்கு நல்லாருரை, பெருங்கதை, புறப்பொருள் வெண்பாமாலை, நன்னூல், மயிலை நாதருரை, திருவிளையாடல் புராணம் போன்ற நூல்களையும் பதிப்பித்துள்ளார். மேலும், இவர் எட்டுத்தொகையில் ஐந்து இலக்கியங்களை ஆராய்ந்து வெளியிட்டுள்ளார். புதியதும் பழையதும், கண்டதும் கேட்டதும், நினைவு மஞ்சரி முதலிய உரைநடை நூல்களையும் எழுதியுள்ளார்[4]. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தமிழர்கள் வாழ்ந்த வாழ்க்கை நிலையையும் அவர்களின் பண்பாட்டு நிலையையும் பழக்கவழக்கங்களையும் தெரிந்துகொள்வதற்கு அந்த நூல்கள் கருவிகளாக விளங்குகின்றன.
உ.வே.சாவால் அச்சிடப்பட்ட நூல்களின் தொகுப்பு
ஆண்டு நூல்
1889 பத்துப்பாட்டு
1891 சிலப்பதிகாரம்
1893 புறநானூறு
1898 மணிமேகலை
1903 ஐங்குறுநூறு
1905 தியாகராச லீலை (14 லீலைகளை மொழிபெயர்த்துத் தமிழ்ச் செய்யுளாக இயற்றினார்)
1905 வேம்பத்தூரார் திருவிளையாடல் புராணம்
1912 திருக்காளத்திப் புராணம்
1918 பரிபாடல்
1920 பெருங்கதை
1930 தக்கயாகப் பரணி
1933 மீனாட்சி சுந்தரம் பிள்ளை இயற்றிய சரித்திரத்தின் முதல் பாகமும் 1934இல் இரண்டாம் பாகமும் வெளியிடப்பட்டன
1937 குறுந்தொகை
1939 குமரகுருபர சுவாமிகளின் பிரபந்தங்கள்
1940 என் சரித்திரம்
பண்புநலன்கள்
உ வே சா குருபக்தி மிகுந்தவர் என்பதை உ வே சாவும் இவர்தம் ஆசிரியர் இராமசாமி முதலியாரும் முதலில் சந்தித்த நிகழ்ச்சியை இவரே விளக்கும்போது நாம் நன்கு உணரலாம். அச்சந்திப்பை உ வே சா, “பல காலமாகத் தவம்புரிந்து ஒரு தெய்வ தரிசனத்துக்குக் காத்திருக்கும் உபாசகனைப் போல் நான் இருந்தேன். அவனுக்குக் காட்சியளிக்கும் அத்தெய்வம்போல் அவர் வந்தார். எனக்கு ஆனந்தக் கண்ணீர் துளிர்த்தது,” என்று என் சரித்திரம் என்னும் தம் வரலாற்று நூலில் வர்ணித்துள்ளார்[1].
ஒருமுறை, உ வே சாவிற்குச் சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழாசிரியராவதற்கு அழைப்பு வந்தது. ஏற்கனவே அக்கல்லூரியில் முதிர்ந்த வயதுடைய ஒருவர் தமிழாசிரியராகப் பணியாற்றி வந்தார். அந்த முதியவர்க்கு வயதான காலத்தில் இடையூறு ஏற்படுத்துவதை உ வே சா விரும்பவில்லை. ஆகவே, இவர் அந்த அழைப்பை ஏற்க மறுத்தார். இதிலிருந்து, இவர் பிறர்மீது வைத்துள்ள அன்பையும் மரியாதையையும் உணர முடிகிறது. பின்பு ஒருமுறை சொந்தமாக அச்சகம் ஒன்றை வாங்க அம்பலவாண தேசிகர் ஐயாயிரம் ரூபாயைத் தர முன்வந்தார். ஆனால், ஓர் அச்சகத்தை வழிநடத்துவது எளிதன்று என்றும் அதனால் ஏற்படும் சிரமங்கள் அதிகம் என்றும் கூறி அதனை மறுத்துவிட்டார் உ வே சா ஒரு காரியத்தில் இறங்கும்போது அதன் நன்மை தீமைகளைச் சீர்தூக்கிப்பார்க்கும் பண்புடையவர் என்றும் இவர் பேராசையற்றவர் என்பதையும் இதன்மூலம் அறியலாம்.
மேலும், எளியவர்களிடம் குறைவில்லா அன்பும் அக்கறையும் கொண்டவர் உ வே சா கீழ்நிலையில் பணியாற்றும் சமையற்காரர்கள், வண்டி ஓட்டுநர்கள், வாசல் பெருக்குவோர் முதலியவர்களிடமும் அன்போடும் உண்மையான பரிவோடும் பழகினார். அதனால்தான் அந்த எளிய ஊழியர்கள் “தமிழ்த் தாத்தா” என்றே இவர்மீது மிகுந்த அன்பு செலுத்தினார்கள். இவர் பெற்ற பெருமைகளைக் கண்டு அவர்கள் பூரிப்படைந்தார்கள். தகுதியால் மேனிலையில் இருப்பவர்கள் ஆணையிட்டாலும் கீழ்நிலையில் இருப்பவர்கள் முழு மனத்தோடு ஏற்றுச் செயற்பட்டால்தான் காரியம் நடக்கும் என்னும் உலகியல் தத்துவத்தை நன்கு உணர்ந்தவர் உ வே சா.
எளிமை, இனிமை, நிதானம், புறங்கூறாமை, பிறர்க்கு உதவுதல், அளவிடற்கரிய பக்தி, விருந்தோம்பல் பண்பு, தூய நட்பு, ஒழுங்கு, செய்ந்நன்றியறிதல், திருந்தச் செய்தல், இன்னும் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற விழைவு ஆகியன உ.வே.சா.வின் குணநலன்களாகும்.
கிடைத்த விருதுகள்
உ வே சாவிற்கு 1906ஆம் ஆண்டு “மகாமகோபாத்தியாய”ப் பட்டம் வழங்கப்பட்டது. வட மொழியாளர்களுக்குத் தரும் அப்பட்டத்தை முதலில் பெற்ற தமிழறிஞர் உ வே சாதான் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்து, 1917ஆம் ஆண்டுக்குப் பிறகு, காசியிலுள்ள ‘பாரதி தர்ம மகா மண்டலம்’ சபையினர் இவரது தமிழ்த் தொண்டை அறிந்து ‘திராவிட வித்யா பூஷணம்’ என்னும் பட்டத்தை வழங்கினர். மேலும், அப்போது மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவரான சீனிவாச ஐயங்கார் இவர்க்கு, ‘தாக்ஷிணாத்ய கலாநிதி’ பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தார். அதோடு, 1932ஆம் ஆண்டில் சென்னை பல்கலைக்கழகம் இவர்க்கு ‘டி. லிட்’ பட்டம் வழங்கியது.
சமுதாயத்தில் சாமிநாத ஐயரின் பங்கு
பரணிலும் வீட்டு மச்சுக்களிலும் உறங்கிக் கிடந்த தமிழ்ச் சுவடிகள் மட்டுமா புத்துயிர் பெற்றன? தமிழே புத்துயிர் பெற்றது! தமிழ்த் தாத்தா பட்ட சிரமங்கள், சிந்திய வியர்வை, அலைந்த அலைச்சல், பட்ட இன்னல்கள் எல்லாமே வீண்போகவில்லை. உயர்தனிச் செம்மொழி என்னும் தகுதியைப் பெறுவதற்கான ஆதாரங்களாக விளங்கும் சங்க இலக்கியங்களும் பிற இலக்கியங்களும் உ வே சா மீட்டுத் தந்த புதையல்களே! தமிழுலகம், இவரிடமிருந்து பெற்றுக்கொண்ட அனைத்து நன்மைகளுக்காகவும் இவரைப் போற்றி வணங்குகிறது. இவர் பதிப்பித்த ஒவ்வொரு நூலிலும் நூலைப் பற்றிய குறிப்புகள், நூலின் சிறப்பியல்புகள், மூலப் பிரதிகள் கிடைத்த இடங்கள், பதிப்புக்கு உதவிய நபர்களின் பெயர்கள் முதலிய விபரங்கள் அடங்கியிருக்கும். பழைய சங்க இலக்கியங்கள் பற்றிக் கல்லூரிகளில் இன்று மாணவர்கள் பயில்வதற்கும் தமிழ் மாநாடுகள் நிகழ்வதற்கும் தமிழ்த் தாத்தாவின் அரிய தமிழ்ப் பணியின்றிச் சாத்தியமாயிருக்க வாய்ப்பில்லை.
தமிழர்களின் வாழ்க்கைநிலை குறித்தும் பண்பாட்டுநிலை குறித்தும் பழக்கவழக்கங்கள் குறித்தும் இன்று நாம் அறிந்துகொள்வதற்கு இவர் தொகுத்த நூல்கள் காரணமாக விளங்குகின்றன. பாரி, அதியமான் போன்ற பெயர்களை மட்டுமே கேட்டுக்கொண்டிருந்த மக்களுக்கு, ஐயர்தம் அரும்பணியால் அம்மன்னர்கள் தமிழ் உலகுக்குச் செய்த நன்மைகளை மக்கள் தெரிந்துகொள்ள முடிந்தது.
நண்பர்களின் வற்புறுத்தலுக்கிணங்க, 1940ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தமிழ்த் தாத்தா என் சரித்திரம் என்னும் தலைப்பில் தம் சரிதத்தை ஆனந்த விகடனில் எழுதிவந்தார். அப்போது ஆனந்த விகடனின் ஆசிரியராகக் கல்கி இருந்தார். அந்நூல் 122 அத்தியாயங்களைக் கொண்டது. அந்நூலை எழுதி முடிப்பதற்குள் உ வே சா அமரராகிவிட்டார். இருப்பினும், இவர் கட்டுரைகள் இன்றளவும் பெரிய செய்திக் களஞ்சியமாக விளங்குகின்றன. மேலும், தமிழ்த் தாத்தா எழுதிய கட்டுரைகள் அன்றைய தமிழகத்தில் ஒரு பெரும் எழுச்சியை மக்களிடத்தில் ஏற்படுத்தின.
தமிழ், தமிழ் என்பதே மூச்சாகக்கொண்டு வாழ்ந்த அப்பெருந்தகையார், 28.4.1942அன்று தம் 87ஆவது வயதில் மறைவுற்றார். இவரது நினைவாக, இவர் பெயரில் திருவான்மியூரில் நூலகம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது. அங்குத் தமிழ்த் தாத்தா சேகரித்த சுவடிகளும் நூல்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அன்னார்க்குச் சிறப்புச் சேர்க்கும்படி மகாகவி பாரதியார் இவ்வாறு பாடியுள்ளார்:
பொதியமலைப் பிறந்தமொழி வாழ்வறியும்
காலமெலாம் புலவோர் வாயில்
துதியறிவாய், அவர்நெஞ்சின் வாழ்ந்தறிவாய்
இறப்பின்றித் துலங்கு வாயே!
துணைநூல்கள்
[1] சாமிநாத ஐயர், உ.வே. (1950). என் சரித்திரம். 1ம் பதிப்பு வெளியீடு எஸ்.கல்யாணசுந்தர அய்யர், மகாமகோபாத்தியாய டாக்டர் உ வே
சாமிநாதையர் நூல் நிலையம். சென்னை. 2ம் பதிப்பு, 1982.
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0544_01.html]
[2] பட்டுக்கோட்டை பவளவண்ணன். (2011). செந்தமிழ் வளர்த்த செம்மல்கள். ராஜகுமாரு பப்ளிகேஷன்.
[3] ஜகந்நாதன், கி.வா. (1994). தமிழ்த் தாத்தா (உ வே சாமிநாத ஐயர்). சாகித்திய அக்காதெமி.
[4] சுந்தரமதி, கு (1984). டாக்டர் உ வே சா சங்க இலக்கியப் பதிப்புகள். கேரளப் பல்கலைக் கழகம் காரியவட்டம். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.