ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் நாகரிகத்திலும் பண்பாட்டிலும் சிறந்து விளங்கினர் என்பதை வரலாறும் சங்க இலக்கியச் சான்றுகளும் உணர்த்துகின்றன. தமிழ் முன்னோர்கள் மொழிக்கு இலக்கணம் வகுத்ததுபோல் மனித வாழ்வியலுக்கும் இலக்கணம் வகுத்துள்ளனர். தமிழர் வாழ்வை அக வாழ்வு, புற வாழ்வு என இரண்டாக வகுத்து வாழ்ந்தமை பண்பாட்டின் சிகரமாய்க் கருதப்படுகிறது. மனிதன் சமுதாயமாக வாழத் தொடங்கியதுதான் நாகரிகத்தின் தொடக்கம் என்று தமிழர்கள் கருதுகின்றனர்.
நாகரிகம் புறத்தோற்ற வளர்ச்சியையும் அகச்செம்மையையும் குறிப்பதோடு அவ்வளர்ச்சி காலந்தோறும் மாற்றம் அடையக்கூடிய ஒன்று என்றும் வரையறுக்கலாம்[1]. காலப் போக்கினால் சொற்பொருள்கள் மாறுபடுகின்றன. நாகரிகம் என்னும் சொல்லின் பொருளும் எவ்வளவோ மாறுபட்டிருக்கிறது. தமிழர் நாகரிகத்திலும் பண்பாட்டிலும் பல்வேறு வாழ்வியல் கூறுகள் அடங்கும். இக்கட்டுரை, அத்தகு கூறுகளின் ஒரு சிலவற்றை மட்டுமே குறிப்பிடுகிறது.
நாகரிகம், பண்பாடு: ஒரு பார்வை
நாகரிகம் என்னும் சொல் நகரகம் (நகர் + அகம்) என்னும் சொல்லின் திரிபு. நாகரிகமற்றவர்களை நாட்டுபுறத்தான், பட்டிக்காட்டான் என்று இழித்துரைக்கும் போக்கு இன்றும் உள்ளது. நாகரிகம் என்பது நகரவாழ் மக்களின் திருந்திய வாழ்க்கை. நாகரிகம் தோன்றியது மருத நிலத்திலாகும். உழவுத்தொழிலும் மக்கள் குடியிருப்பும் ஊர்ப்பெருக்கமும் நாகரிகம் தோன்றுவதற்கு வழிவகுத்தன[2]. இச்சொல் நற்றிணையிலும் திருக்குறளிலும் முதன்முதலில் கையாளப்பட்டது.
நகர் என்னும் திராவிடச் சொல் ‘நகர வாழ்க்கையையும், நகர வாழ்க்கையால் பெறப்படும் நலன்களையும் குறிப்பதுடன் அறிவியல் துறையால், பொருளியல் துறையால் மக்கள் அடைந்து வரும் மாற்றங்களையும் முன்னேற்றங்களையும்’ குறிக்கப் பயன்பட்டது[3]. புற வளர்ச்சி முக்கியமானதாகக் கருதப்பட்டபோதிலும், தமிழர்கள் அக ஒழுக்கங்களைப் பெரிதும் முன்வைத்தனர். இதனையே பாவாணர் “திருந்திய வாழ்க்கைப் பண்பாடு” என்பார். அதாவது, “உள்ளத்திற்குப் புறம்பான உணவு, உடை, உறையுள் முதலியவற்றின் செம்மை” நாகரிகம் என்றும் திருந்திய ஒழுக்கம், அதாவது “உள்ளத்தின் செம்மை” பண்பாடு என்றும் குறிப்பிடுகிறார். உள்ளத்தோடு தொடர்புடைய பண்பாட்டுக் கூறுகளை அகநாகரிகம் என்றும் உள்ளத்துக்கு வெளியே உலகத்தோடு தொடர்புடைய புறவளர்ச்சிக் கூறுகளைப் புறநாகரிகம் என்றும் பகுத்துக் காணலாம். இந்நிலையில் முன்னது பண்பாடு, பின்னது நாகரிகம் என்று கொள்ளலாம் [4 ].
பண்பாடும் பழக்கமும்
‘கல்ச்சர்’ (culture) என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையாகத் தமிழில் பண்பாடு என்னும் சொல் பயன்படுத்தப்படுகிறது. இந்தச் சொல்லை ரசிகமணி டி. கே. சிதம்பரநாத முதலியார் உருவாக்கிப் பயன்படுத்தியதாகக் கூறுவார்கள். “பண்பெனப் படுவது பாடறிந்து ஒழுகுதல்” எனச் சங்க இலக்கியமாகிய கலித்தொகை குறிப்பிடுகிறது. உலகத்தின் போக்கறிந்து அதன்படி நடப்பதே பண்பென அப்பாடல் உணர்த்துகிறது. இதனையே திருவள்ளுவர் “உலகத்தோடு ஒட்ட ஒழுகல்” என்று கூறுகிறார்.
பண்படுத்தல் என்றால் சீர்படுத்தல் அல்லது திருத்துதல் எனப் பொருள்படும். உழவன் கடினமான நிலத்தைப் பயிரிடுவதற்காகப் பண்படுத்துகிறான். அதன் பின் அவ்வுழவன் அந்நிலத்தில் விளைச்சலை ஏற்படுத்த முயல்கிறான். அதுபோல ஒருவர் தம் உள்ளத்தை – உரையை – உடலை நல்வாழ்விற்காகப் பண்படுத்துவதுதான் – செம்மைப்படுத்துவதுதான் பண்பாடு ஆகும்[4]. செம்மையான பண்புகளைத்தாம் திருவள்ளுவர் பண்புடைமை என்னும் அதிகாரத்தில் விளக்குகிறார். நல்ல சிந்தனைகள் உள்ளத்தில் (அகத்தில்) தோன்றிச் செயல்கள் மூலம் வெளிப்படுகின்றன. பண்பாடு, நாகரிகம் என்பன அறிவு, நம்பிக்கை, கலை, ஒழுக்கநெறிகள், சட்டம் போன்றவைகளும் மனிதன் சமுதாய உறுப்பினனாக இருந்து கற்கும் பிற திறமைகளும் பழக்கவழக்கங்களும் அடங்கியவையாகும்[5].
தமிழர் வாழ்வியல் கூறுகளில் நாகரிகமும் பண்பாடும்
தமிழர் பண்பாட்டின் இயல்புகளான வீரம், கொடை, காதல், கருணை, அழகுணர்ச்சி, கலையுணர்ச்சி முதலியவை புறநானூற்றில் காணக் கிடக்கின்றன. மதுரைக் குமரனார் என்னும் புலவர், சோழ வேந்தன் ஒருவன் அன்புடன் நடந்துகொள்ளாதது கண்டு, அவன் முன் சென்று, “வேந்தர் தம் மண்ணாளும் பெருஞ்செல்வத்தை யாம் வியந்து நிற்போம் அல்லோம். சிறிய ஊரை ஆளும் தலைவனே ஆயினும், எம் நிலை உணர்ந்து அன்பு செலுத்தும் பண்புடையன் ஆயின் அவனையே கண்டு மதிப்போம்,” என்று கடிந்து உரைத்ததிலிருந்து பொன்னும் பொருளும் வேண்டப்பட்ட போதிலும், உள்ளத்து வெளிப்படும் அன்பையே போற்றினர் என்பதை அறியலாம்[6].
மண்கெழு தானை யொண்பூண் வேந்தர்
வெண்குடைச் செல்வம் வியத்தலோ விலமே;
எம்மால் வியக்கப் படூஉ மோரே …
சீறூர் மன்ன ராயினு மெம்வயின்
பாடறிந் தொழுகும் பண்பி னோரே
மிகப்பே ரெவ்வ முறினு மெனைத்தும்
உணர்ச்சி யில்லோ ருடைமை யுள்ளேம்;
நல்லறி வுடையோர் நல்குரவ
உள்ளுதும் பெருமயா முவந்துநனி பெரிதே. (புறம் 197)
வீரம்
ஒன்றும் அறியாக் குழந்தைகளையும் பொது மக்களையும் கொன்று குவிக்கும் இக்காலத்துப் போர் முறையைப் பண்டைய தமிழர் ஏற்கவில்லை. போர் தொடங்கும் முன்னே பகைவன் நாட்டிலுள்ள கால்நடைகளையும் அந்தணரையும் பெண்களையும் நோய்வாய்ப்பட்டவரையும் குழந்தைப் பேறு இல்லாதவரையும் போர் நிகழும் இடத்தைவிட்டு நீங்கிவிடுமாறு பறையறைந்து அறிவிக்கும் போரறம் இருந்தது. இவ்வாறு பாண்டிய மன்னன் ஒருவன் அறிவித்ததைப் புறநானூற்றுப் பாடல் குறிப்பிடுகிறது.
ஆவு மானியற் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்
தென்புலம் வாழ்நர்க் கருங்கட னிறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்
எம்அம்பு கடிவிடுதும் நும்அரண சேர்மினென
அறத்தாறு நுவலும் பூட்கை (புறம் 9)
மற்றுமொரு புறநானூற்று (66) பாடல், சேரமான் பெருஞ்சேரலாதன் சோழன் கரிகாலனுடன் போரில் ஈடுபட்டமை குறித்து விளக்குகிறது. அப்போது கரிகாலன் எறிந்த வேலானது சேரனின் முதுகைப் புண்படுத்தியது. இந்நிகழ்வின் காரணத்தால் பெருஞ்சேரலாதனுக்கு அவமானம் தாங்க முடியவில்லை. முதுகில் ஏற்பட்ட புறப்புண் புறப்புண்தானே என்று வருந்தி, வடக்கிருந்து (வடக்குத் திசை நோக்கி அமர்ந்தவண்ணம் உண்ணாநோன்பிருந்து உயிர் துறப்பதே வடக்கிருத்தலாகும்) தம் உயிரை மாய்த்துக்கொண்டான். உயிர்துறந்த பெருஞ்சேரலாதனின் செயல், சோழன் கரிகாலன் கண்ட வெற்றியைக் காட்டிலும் புகழுடையது என்னும் பொருள்படும்படி “நின்னிலும் நல்லன் அன்றோ” எனப் புலவர் வெண்ணிக்குயத்தியார் என்னும் பெண்பாற்புலவர் பாடியுள்ளார்.
நளியிரு முந்நீர் நாவா யோட்டி,
வளிதொழி லாண்ட வுரவோன் மருக
களியியல் யானைக் கரிகால் வளவ
சென்றமர்க் கடந்தநின் ஆற்ற றோன்ற
வென்றோய் நின்னினும் நல்ல னன்றே
கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை
மிகப்புக ழுலக மெய்திப்
புறப்புண் நாணி வடக்கிருந் தோனே. (புறம் 66)
கொடை
“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று உலகளாவிய மனிதநேயப் பண்பாடைத் தமிழர்கள் போற்றினர். வீரத்துக்கு அடுத்தபடியாகத் தமிழர் எண்ணிப் போற்றியது கொடைத் திறத்தைத்தான். கொடுப்பதையே ஓர் அருங்கலையாகப் பண்டைய தமிழ் மன்னரும் மக்களும் போற்றிவந்தனர். “ஈ யென இரத்தல் இழிந்தன்று; ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று” என்று கழைதின் யானையார் என்னும் புலவர் பாடினார் (புறம் 204).
சங்ககாலந்தொட்டு ஈகையைத் தலையாய அறமாகத் தமிழர்கள் கொண்டிருந்தனர். ஈகை என்பது என்ன? பிறருடைய துன்பங்களை, அவர்கள் துன்பமுற்றவுடன் விரைந்து வந்து உதவி செய்வதே ஈகையாகும். இல்லாதவர்களுக்கு ஒன்றைக் கொடுத்து இல்லையே என்கிற அவர்களின் ஏக்கத்தை மாற்றுவது. வறுமையுற்றவர்க்குக் கொடுக்கும் பொருளால் அவர் துன்பம் விலகி, மனம் மகிழ்ச்சியுறும். அவ்வாறு அல்லாத மற்றவர்களுக்குக் கொடுப்பதெல்லாம் பயன் எதிர்பார்த்து வழங்கப்படுவதாகும் என்பார் திருவள்ளுவர்:
வறியார்க்குஒன்று ஈவதே ஈகை மற்றெல்லாம்
குறியெதிர்ப்பை நீரது உடைத்து (குறள்: 221)

குறிப்பாக, துன்புறுவோர் நம்மிடம் உதவி கேட்பதற்கு முன்பாக மனமுவந்து ஈதலே சிறப்பு. திருக்குறள் படைக்கப்பட்ட முக்கிய நோக்கங்களுள் ஒன்று ஈகைப் பண்பை மானுட சமூகத்தில் வளர்ப்பதற்காகும். ஈகை மனிதனை மாண்புமிக்கவனாக்குகிறது. அதனால், கிடைக்கும் பயனான புகழைவிட உயிர்க்கு ஊதியம் வேறேதுமில்லை என்று வள்ளுவம் உரைக்கிறது:
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்ல
ஊதியம் இல்லை உயிர்க்கு (குறள்: 231)
பழங்காலத்தில் வறியவர்களுக்கு அரசர்கள் பல்வேறு கொடைகளை வழங்கி வந்தனர். அவை உண்டிக்கொடை, பொற்கொடை, ஊர்திக்கொடை, விலங்குக் கொடை, சின்னக் கொடை, பெயர்க்கொடை, நிலக்கொடை, மகற்கொடை, ஆட்சிக்கொடை என ஒன்பது வகைப்படும் என்பார் தேவநேயப்பாவாணர். அத்தகு கொடைத்திறம் ஈகை என்னும் பண்பில் அடங்கும். எந்தவொரு பயனையும் கருதாமல் ஒருவர்க்கு ஒரு பொருளைத் தரும் போதுதான் அது சிறந்த கொடை மாண்பாகப் போற்றப்படும்.
பழம்பெரும் காப்பியங்களுள் ஒன்று, மணிமேகலை. அந்நூலின்படி, மணிமேகலை கோமுகிப் பூம்பொய்கையைக் கண்டு களிக்கும்போது, திருவோடு ஒன்று அலைகளில் அவளை நோக்கி மிதந்துவந்தது. அதனை வணங்கித் தன் மலர்க்கரங்களால் அவள் எடுத்தாள். அத்திருவோடுதான் அமுதசுரபி. எடுக்க எடுக்க குறையாத உணவை அளிக்கவல்லது அப்பாத்திரம். அதனைக்கொண்டு வறியவர்களின் பசிப்பிணி தீர்க்க மணிமேகலை உதவினாள். ‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’ என்னும் கொள்கையைக் கடைப்பிடித்து, அறப்பணி புரிந்தாள். அக்கதை பசியும் பிணியும் குறித்து மையம்கொள்கிறது.
சீத்தலைச் சாத்தனார் மணிமேகலையைப் “பசிப்பிணி தீர்த்த பாவை” (40:11) என்று காப்பியத்தில் சிறப்பிக்கிறார். மணிமேகலை காப்பியக் கதையின் வாயிலாக ஒர் உண்மை உணர்த்தப்படுகிறது. அதாவது அள்ளிக் கொடுத்தால் வெள்ளம் பெருகும் என்பதாகும். எது பேரறம்? என்னும் கேள்விக்கு மணிமேகலை பதிலளிக்கிறது:
அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின்
மறவாது இதுகேள்! மன்னுயிர்க் கெல்லாம்
உண்டியும் உடையும் உறையுளும் இல்லது கண்டதில்
(மணிமேகலை, 25. 228-230)
தொழில்கள்
அன்றைய தமிழ் மன்னர்கள் உழவுத்தொழிலின் சிறப்பை உணர்ந்திருந்தமையால் அவர்கள் ஆற்றங்கரைகளை உயர்த்தினர்; ஆற்றுநீரை அணையிட்டுத் தடுத்தனர். ஆற்றுநீரைக் கொண்டு குளங்களிலும் ஏரிகளிலும் நீரைத் தேக்கினர். உழவர்களுக்கு அரசர்களின் ஆதரவு இருந்தது. சோழ நாட்டின் நிலத்தில் பேரளவு நெல் விளைந்தது. வேலி, மா என்பன நில அளவைப்பெயர்களாகப் பயன்படுத்தப்பட்டன[7]. நீர்வளம்மிக்க வயல்கள் நன்செய் நிலங்கள் என வழங்கப்பட்டன. நீர்வளம் குன்றிய நிலங்கள் புன்செய் எனப்பட்டன. நன்செய் நிலங்களில் நெல்லும் கரும்பும் மிகுதியாக விளைந்தன. புன்செய் நிலங்களில் துவரை, சோளம், கேழ்வரகு போன்ற பயிர்கள் விளைந்தன.
அன்றைய பொருளாதாரத்திற்கு அடிப்படையாக விளங்கியது நெற்பயிராக இருந்தாலும் மக்கள் கரும்பு, பருத்தி, மிளகு போன்ற பொருள்களையும் பயிரிட்டனர். உழவுக்கு அடுத்தநிலையில் மக்கள் உடைத் தயாரிப்பில் ஈடுபட்டிருந்தனர். அன்று நெய்யப்பட்ட துணிகளின் மென்மை பாம்புச் சட்டையின் மிருதுத் தன்மைக்கும் நீராவிக்கும் ஒப்பிடப்பட்டது. அவர்கள் அணிந்த துணிகளில் மலர்களின் வடிவங்கள் நெய்யப்பட்டன. அவர்கள் பட்டு, கம்பளித் துணி முதலியவற்றைப் பயன்படுத்தினர்[8].
அன்றைய கிராமியத் தொழில்களில் தச்சுத் தொழில், கொல்லத் தொழில், மட்பாண்டத் தொழில், நெசவுத் தொழில் முதலியவை காணப்பட்டன. படைகளுக்கு வாள், வேல், ஈட்டி போன்ற போர்க்கருவிகளைத் தயாரிக்கும் பட்டறைகள் இருந்துள்ளன. பாய் பின்னும் தொழில், தோல் தொழில், சலவைத் தொழில், உப்பெடுக்கும் தொழில், தையல் தொழில் முதலியனவும் காணப்பட்டன. பல்வேறு உலோகங்களைக் கொண்டு பாத்திரங்கள் தயாரிக்கும் தொழில்களும் இருந்துள்ளன. இவைபோன்ற தொழில்கள் சங்ககாலத்தில் இருந்துள்ளமை புலப்படுகிறது[8].
வணிகம்
அன்றைய கிரேக்கர்கள் தமிழகத்திலிருந்து கொண்டு சென்ற பொருள்களுள் இஞ்சிவேர், பிப்பிலி, அரிசி, மிளகு முதலியவற்றைக் குறிப்பிடலாம். ரோம நாட்டுப் பேரரசரான அகஸ்டஸ் காலத்தில் (கி.மு. 21இல்) பாண்டிய மன்னனிடமிருந்து வணிகர் தூதுக்குழு ரோம் நாட்டிற்குச் சென்றது. ரோம் நாட்டின் பொன், வெள்ளி, செப்பு நாணயங்கள் பல அகழ்வாராய்ச்சியின்போது தமிழகத்தில் கிடைத்துள்ளன. சீனத்துப் பட்டும் பிற பொருள்களும் கடல் வழியாகச் சூயஸ் கால்வாய் வரையில் சென்றுள்ளன. அதோடு, தமிழர்கள் பர்மா, மலாயா, இந்தோனிசியா போன்ற நாடுகளுடன் கடல் வணிகத் தொடர்பு வைத்திருந்தனர்.
சேர நாட்டு முசிரி போன்ற துறைமுகங்களிலிருந்து தந்தம், ஆமை ஓடுகள், மிளகு, மணப் பொருள்கள், அகில், சந்தனம் முதலியன ஏற்றுமதி செய்யப்பட்டன. மதுரை, உறையூர் ஆகிய தலைநகரங்களில் முத்து வாணிகம் மிகுதியாக நடைபெற்றது. முத்துக்கள், மெல்லிய ஆடைகள், மிளகு போன்றவை ரோமாபுரி நாட்டிற்கு அனுப்பப்பட்டன. ரோமாபுரியிலிருந்து வெள்ளி நாணயங்கள், மது போன்றவை தமிழகத்தை வந்தடைந்தன. இத்தகு செய்திகளைப் பற்றிப் பிளைநியும் பெரிப்ளூஸ் நூலாசிரியரும் குறிப்பிட்டுள்ளனர்.
வெளிநாட்டு வாணிகத்தைத் தவிர உள்நாட்டு வாணிகத்திலும் தமிழர்கள் ஈடுபட்டிருந்தனர். தமிழ் வணிகர்கள் பலர் எருதுகளிலும் கழுதைகளிலும் பண்டப்பொதிகளை ஏற்றுக்கொண்டு வாணிகம் செய்துள்ளனர். குறிஞ்சிநிலத் தேனும் கிழங்குகளும் கொடுத்து, மீன், எண்ணெயும் கள்ளும் வாங்கப்பட்டன. முசிரியில் நெல் கொடுத்தும் மீன் கொடுத்தும் நெல் வாங்கப்பட்டது. கலிங்க நாட்டில் நெய்யப்பட்ட உயர்ந்த ஆடைகள் தமிழகத்தில் விற்கப்பட்டன[8].
பண்பாடு ஓர் இனத்தின் தேடலையும் நம்பிக்கையையும் மதிப்பீட்டையும் மதிநுட்பத்தையும் எடுத்துக்காட்டுவனவாக அமையும் தன்மை பெற்றது. நாகரிகமும் பண்பாடும் பின்னிப்பிணைந்தவையாக மட்டுமில்லாமல் அவை ஒன்று மற்றொன்றில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஆற்றல்மிக்கது.
துணைநூல்கள்
[1] தமிழ்ச்செல்வன், ச. (2014); எது கலாச்சாரம், பாரதி புத்தகாலயம்.
[2] தேவநேயப்பாவாணர், ஞா. (2011). பண்டைத் தமிழ் நாகரீகமும் பண்பாடும். சென்னை: ஸ்ரீசெண்பகா பதிப்பகம்.
[3] தனிநாயகம் அடிகள். (2010). தமிழர் பண்பாடும் அதன் சிறப்பு இயல்புகளும். நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி)) லிட்.
[4] திண்ணப்பன், சுப. “கலாசார” உலகிற்குத் தமிழர்கள் வழங்கிய நன்கொடை (1994); தேசியக் கல்விக் கழகம்.
[5] மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு (http://tamilthagaval.in/)
[6] வரதராசன், மு. (2002); தமிழ்நெஞ்சம், பதிப்பு: பாரி நிலையம்.
[7] இராசமாணிக்கனார், மா. (2012). தமிழக வரலாறும் தமிழர் பண்பாடும். சென்னை: ஸ்ரீசெண்பகா பதிப்பகம்.
[8] நீலகண்ட சாஸ்திரி. (2015). தமிழர் பண்பாடும் வரலாறும். சென்னை: ஸ்ரீசெண்பகா பதிப்பகம்.
தலைப்புக்குத் தொடர்புடைய பிற வளங்கள்
[1] பழங்காலத் தமிழ்ப் பண்பாடு – பண்டைக்காலப் பண்பாடு, பேராசிரியர் கு வெ பாலசுப்பிரமணியன்
http://www.tamilvu.org/ta/courses-degree-c031-c0311-html-c03116l1-17125
[2] பத்துப் பாட்டில் உணவும் விருந்தோம்பல் பண்பும். வே ராசாம்பாள். முனைவர் பட்ட ஆய்வாளர். கந்தசாமி கண்டர் கல்லூரி,
பரமத்தி வேலூர், நாமக்கல் மாவட்டம்.
http://www.muthukamalam.com/essay/seminar/s3/p94.html
[3] தமிழர் பண்பாட்டில் விருந்தோம்பல். முனைவர் மா பத்மபிரியா உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
எஸ்.எஃப்.ஆர். மகளிர் கல்லூரி (தன்னாட்சி), சிவகாசி.
http://www.muthukamalam.com/essay/literature/p113.html