தமிழர் தற்காப்புக் கலைகள்

கற்கால மனிதன் வாழ்ந்த காலக்கட்டத்திலேயே தற்காப்பு என்னும் சிந்தனையும் செயலும் தோன்றியிருக்க வேண்டும். காடுகளில் வாழ்ந்த மனிதன் அங்குள்ள விலங்குகளுடன் போராட்டம் நடத்தவேண்டிய சூழல்கள் ஏற்பட்ட போதெல்லாம், இரவும் பகலும் தன்னைப் பாதுகாத்து வாழ்வதற்காகச் செயல்படுத்தி வெற்றிகண்ட கலையைத் தமிழ்ச் சித்தர்கள் ஆராய்ந்தனர். அவ்வகையில், சித்தர்பெருமக்கள் தம்மளவில் உணர்ந்து, அனுபவரீதியாகச் சோதித்து வெற்றிகண்டவற்றை நூலாக வடிவமைத்து, வருங்காலச் சந்ததிகள் பயன்பெறவேண்டி எழுதிவைத்தனர் [1]. அவையே இன்று தமிழர் தற்காப்புக் கலைகளாக விளங்குகின்றன.  

வேட்டையாடும் சமூகங்களில் வாழ்ந்த மனிதர்கள், எவையேனும் விலங்குகளை நேர்க்குநேர் எதிர்கொள்ள நேரிட்டபோது, ஒன்று அப்படியே அசையாது நிற்பார்கள்; தங்களுக்குப் பாதுகாப்பை வழங்காத நிலையில் அங்கிருந்து ஓட்டமெடுப்பார்கள்; முடியாத பட்சத்தில் இறுதியாகச் சண்டையிடவும் தயங்கமாட்டார்கள். இதை ஆங்கிலத்தில் Freeze – Flight – Fight என்று கூறுவார்கள். இவர்கள் இவ்வாறு நடந்துகொள்வதற்குக் காரணம் அவர்களது நோக்கம் உயிர்களை அழிப்பதன்று, பாதுகாத்தலே ஆகும். எனவேதான், சண்டையிடுதலை இறுதி உத்தியாகக் கையாண்டனர். இந்நிலை காலப்போக்கில் வளர்ச்சியடைந்து, பின்னர்த் தனிமனிதனின் பாதுகாப்புக் கலைகளாக உருப்பெற்றது எனலாம்.

தற்காப்புக் கலைகள் இருவகைப்படும். ஒன்று, கைகளை மட்டும் பயன்படுத்திச் செய்வது; மற்றது, ஆயுதங்களின் உதவியுடன் செய்வது எனப் பகுக்கலாம். முன்னதற்கான எடுத்துக்காட்டுகளாக வர்மக்கலை, அடிதட, குத்துவரிசை, மல்யுத்தம், களரிப்பயிற்று முதலியவற்றைக் குறிப்பிடலாம். பின்னதற்கான எடுத்துக்காட்டுகளாகச் சிலம்பம், முச்சான், இரட்டை முழங்கோல், இரட்டை வாள், வாள், கேடயம், வெட்டரிவாள், கத்தரி, பிச்சுவா, சுருள் பட்டை, சூலம், மடுவு, சுருள் கொம்பு, வளரி முதலியவற்றைக் குறிப்பிடலாம். இத்தற்காப்புக் கலைகள் அனைத்தும் உடலைச் சீர்படுத்தி அதனுள் இருக்கும் ஆற்றலை வெளிக்கொணரும். இக்கட்டுரையில், இக்கலைகளுள் தமிழர்களுக்கென்று தனித்துவமாக விளங்குகின்ற சிலம்பம், வர்மம் குறித்து விளக்கமாகக் காண்போம்.

சிலம்பம்

சிலம்புதல் என்னும் சொல்லுக்கு ஒலித்தல் என்னும் பொருளுண்டு. கம்பினைச் சுழற்றும்போது அதிலிருந்து ஒலி எழும்பும். எனவேதான், இவ்விளையாட்டிற்குச் சிலம்பம் என்று பெயர். இது வீர விளையாட்டுகளுள் ஒன்று எனக் கருதப்படுகிறது. ஆரம்பகாலத்தில், தன்னைக் காத்துக்கொள்ளவேண்டிச் சிலம்பாட்டம் ஆடிய மனிதன், பின்னர் அதனைக் கலையாக வளர்த்தான். ‘நடசாரி’ என்னும் ஓலைப் பட்டயத்தில் சிலம்பாட்டத்தின் தோற்ற வளர்ச்சி குறிப்பிடப்பட்டுள்ளது.

Silambam.png

சிலம்பாட்டத்தில் பல சுவடு முறைகள் கையாளப்படுகின்றன. தட்டுவர்மச் சுவடு அதில் முக்கியமான ஒன்றாகும். முடியாத பட்சத்தில்தான் ‘சாவடி’ என்னும் அடிமுறையைப் பயன்படுத்துவார்கள். சிலம்பாட்டத்தில் பல அடவு முறைகள் உண்டு. கம்பு வீசும் திறன், காலடி எடுத்து வைக்கும்முறை, வேகமாகக் கம்பு வீசும் திறன் என்னும் இம்மூன்றும் சிலம்பாட்டத்தின் முக்கியக் கூறுகளாகும். வீர விளையாட்டாகத் தோற்றம் பெற்று, நுட்பமான செயல் திறனுடன்கூடிய ஒரு தற்காப்புக் கலையாகச் சிலம்பாட்டம் விளங்குகிறது.

சிங்கப்பூரில் களரி பயட் (Kalari-Payat Silambam Centre Singapore), களரி அகாதமி (The Kalari Academy Singapore), சிலம்பம் நண்பர்கள் குழு (Silambam Friends Association Singapore) போன்ற தற்காப்புக் கலைகளுக்கான பயிற்சிப் பள்ளிகளில் சிலம்பாட்டம் சொல்லிக்கொடுக்கப்பட்டு வருகிறது.

வர்மம்

வர்மக்கலை தமிழ் மரபில் தோன்றிய ஒரு கலையாகும். வர்ம சூத்திரம் எனப்படும் தமிழ் மருத்துவ விஞ்ஞானத்தை அடிப்படையாக வைத்துத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஒரு தற்காப்புக் கலையாக இது வளர்த்தெடுக்கப்பட்டது. தமிழர்கள் மனித உடல் குறித்தும் அதில் உள்ள நாடிகள் குறித்தும் (நரம்புகள்) தெளிவான அறிவைக்கொண்டிருந்தார்கள் என்பதற்கு இக்கலை எடுத்துக்காட்டாகும். வர்மக்கலை என்பது உடலின் முக்கிய நாடிகள் – நரம்புகள் அல்லது புள்ளிகளைப் பற்றிய அறிவை மையமாகக்கொண்ட ஒரு தற்காப்புக் கலையாகும். உடலின் குறிப்பிட்ட சில நரம்புகளிலும் குறிப்பிட்ட பகுதிகளில் குறிப்பிட்ட அளவில் தட்டுவதால் ஒருவரை உணர்விழக்கச் செய்யமுடியும். உடல் சீராக இயங்குவதற்காக உடலின் 108 இடங்களில் நின்று இயங்கும் உயிர்நிலைகளே வர்மங்கள் எனப்படும். நரம்புகள், மூட்டுகள், தசைநார், தசைகள் அல்லது உறுப்புகள் அவ்வுயிர்நிலைகளில் அடங்கும். மொத்தம் உள்ள 108 வர்மங்களில் 12 படு வர்மங்களும் (மரணம் விளைவிக்கக்கூடியவை) 96 தொடு வர்மங்களும் உள்ளன [3].

Varmam.jpg

வர்மக்கலையின் சிறப்பை உணர்த்தியவர்கள் சித்தர்கள்

பதினெண் சித்தர்கள் தாங்கள் எழுதிய நூல்களில் சிறுசிறு குறிப்புகளை அவ்வப்போது சில இடங்களில் குறிப்பிட்டுள்ளார்கள். அகத்தியர் – புலிப்பாணி – போகர் ஆகியோர் எழுதிய நூல்களில் வர்மக்கலையின் சிறப்பை எழுதியுள்ளார்கள். வர்மக்கலை குறித்துச் சுவடிகளும் நூல்களும் உள்ளன. சித்தர்கள் அன்று எழுதியவை அனைத்தும் செய்யுள் வடிவத்திலேயே அமைந்துள்ளன. செய்யுள்நடை கடினமாக இருப்பதோடு மட்டுமல்லாமல், பல முக்கிய விஷயங்களை அவர்கள் சிலேடைக் குறிப்புகளாக எழுதிவைத்துள்ளார்கள். இவ்வாறு போகர் மாமுனிவர் எழுதிய செய்யுள்களில் கிட்டத்தட்ட 400 வர்மக்கலை குறிப்புகள் உள்ளன [1].

வர்ம மருத்துவம்

வானோர் வழங்கிய வர்மக்கலையைக் கையாண்டால் நோயின்றி வளமுடன் வாழலாம் என்று பெரியவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இன்று அலோபதி மருத்துவத்தினால், நோய்கள் பல விரைவாகக் குணமானாலும் நோய் குணமான பின்பு பக்கவிளைவுகள் ஏற்படுவதைக் காண்கிறோம். இதனால் மக்களுக்கு ஆரோக்கியம், ஆயுள் குறைவு ஏற்படுகிறது. இந்த நிலையைப் போக்க, வர்ம மருத்துவத்தினால் முடியும். வர்மக்கலை நரம்பியலை அடிப்படையாகக் கொண்டது. மனித உடலில் எண்ணற்ற நரம்புகள் உடலின் மேல்பகுதியிலும் உள்ளுறுப்புகளில் ஊடுருவியும் அமைந்திருக்கின்றன. உடலின் ஓரிடத்தில் நரம்புப் பாதிப்பு ஏற்பட்டால் அந்த உறுப்பை அடிப்படையாகக் கொண்ட மற்ற உறுப்புகளைப் பாதிக்கச் செய்கிறது. மற்ற உறுப்புகள் பாதிக்காமல் நன்முறையில் செயல்பட வர்மக்கலை என்னும் இயற்கை மருத்துவம் உதவுகிறது. சித்த மருத்துவத்தின் ஒரு பிரிவுதான் வர்மக்கலை. சித்த மருத்துவத்தில் நோய்கள் குணமாகப் பல வகையான பிரிவுகள்கொண்ட மருத்துவ முறைகள் உண்டு. அவற்றுள் ஒரு முறைதான் வர்மக்கலை முறையாகும் [1].

வர்மக்கலையின் நன்மைகளைச் சாதாரண ஏழைகள்முதல் செல்வந்தர்கள்வரை எல்லாரும் பயன்பெற்று நலமுடன் நோயின்றி வாழத்தான் தமிழ் முன்னோர்கள் காது குத்துதல், மூக்குக் குத்துதல், அலகு குத்துதல், பாத யாத்திரை செல்லுதல், அங்கப் பிரதச்சனம் செய்தல், தோப்புக்கரணம் போடுதல் போன்ற சிற்சில முறைகளை நம்மைப் பின்பற்ற வைத்துள்ளனர். இவையாவும் ஏதோ சடங்குகள் என்று எண்ணிப் பலரும் இன்று பின்பற்றிவருகிறார்கள். ஆனால், இதன்வழித் தமிழ் முன்னோர்கள் நமக்கு விட்டுச்சென்ற செய்திகளைப் பலரும் அறியாமலேயே உள்ளோம். தோப்புக்கரணம் போடுதலை எடுத்துக்கொள்வோம். நாம் அதனைச் செய்யும்போது கைகளை நெஞ்சுப் பகுதியில் குறுக்காக வைத்துக் காதுகளின் நுனியைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்து எழுந்திருக்க வேண்டும். இது ஒரு தண்டனையாக இன்றளவும் கருதப்பட்டு வருகிறது. ஆனால், அப்படிக் காதுகளின் நுனிகளைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்து எழுந்திருப்பது காதுகளின் நுனிகளில் உள்ள நரம்புகளைத் தூண்டிவிடுகிறது. காரணம், அந்நரம்புகள் மூளையுடன் தொடர்புடையவை. மேலும், உட்கார்ந்து எழுந்திருப்பது ரத்த ஓட்டத்தை அதிகரித்துப் புத்துணர்ச்சியை அளிக்கிறது. இதுபோலத்தான் மற்றவற்றிலும் உள்ளார்ந்த காரணங்கள் சிலவற்றை வைத்துத் தமிழ் முன்னோர்கள் நம்மை இவற்றையெல்லாம் பின்பற்ற வைத்துள்ளனர். இவையாவும் வர்மக்கலையின் அடிப்படைகளே என்பதை அறியாது நாமும் வழிவழியாக இவற்றைச் செய்துவருகிறோம் [1].

வர்மக்கலையின் பிரிவுகள்

வர்ம சூத்திரம் என்னும் நூல் வர்மக்கலையை ஐவகையாகப் பிரித்துள்ளது. அவை பின்வருமாறு: வாத வர்மங்கள் (64), பித்த வர்மங்கள் (24), சிலேத்தும வர்மங்கள் (6), உள் வர்மங்கள் (6), தட்டு வர்மங்கள் (6) ஆகியன. வர்ம பீரங்கி என்பது சித்தர்களின் ஏட்டுச் சுவடிகளைக் கொண்டு எழுதப்பட்டுள்ள நூலாகும். இந்த நூலில் வர்மக்கலையை ஐந்து பிரிவுகளாகப் பிரித்து, மொத்த வர்மங்கள் 108 என்று குறிப்பிட்டுள்ளார்கள். பின்வரும் குறிப்புகள்வழி உடம்பின் பகுதிகளில் வர்ம முனைகள் எங்கெங்குள்ளன என்பதை அறியலாம் [1]. 

கழுத்துக்கு மேல் (25), கழுத்திலிருந்து தொப்புள்வரை (45), தொப்புள்முதல் மூலாதாரம்வரை (9), இரு கைகள் (14), இரு கால்கள் (15) – மொத்தம் 108. 

அடுத்து, வர்மக்கலையை மூன்று முகங்களாகப் பிரித்துள்ளனர் [1]. அவை பின்வருவன: வைத்திய முகம், தற்காப்பு முகம், போர் முகம் ஆகியன. வைத்திய முகம் என்பது வர்மக்கலையின் மூலம் நோய்களுக்கு மருத்துவம் மேற்கொண்டு குணமாக்கும் முறையாகும். தற்காப்பு முகம் என்பது ஒருவர் தம்மைத் தாக்க வந்தால் தற்காத்துக்கொள்ள முகவழியில் அவரைத் தாக்கும் முறையைக் குறிக்கிறது. போர் முகம் என்பது மேற்குறிப்பிட்ட இரண்டு வர்மக்கலைகளையும் கற்றவர்கள் மோதிக்கொண்டு அவர்களுடைய திறமைகளையும் சாகசங்களையும் காட்டுவதைக் குறிக்கிறது.

வர்மக்கலையின் வேறு பெயர்கள்

சித்தர்களின் பாடல்களில் வர்மக்கலை ஒவ்வோர் இடத்திற்கும் தக்கபடி ஒவ்வொரு பெயரிட்டுக் குறிப்பிடப்பட்டுள்ளது. நரம்பைப் பார்த்து அடிப்பதானால் நரம்படி என்றும் இக்கலை அன்று மர்மமாக வைக்கப்பட்டிருந்ததால் மர்மக்கலை என்றும் வாசியோகத்தின் அடிப்படையில் இது இயங்குவதாலும் உயிர்க்கு உறுதுணையாக இருப்பதாலும் உயிர்க்கலை என்றும் குறிப்பிட்டுள்ளார்கள் [1].

குரு–சிஷ்ய முறையில் கற்பிக்கப்பட்டு வந்த இவ்வர்மக் கலையை நம் முன்னோர்கள் பெரும்பாலும் மனிதர்களின் நலனுக்காகவும் மருத்துவத் தேவைகளுக்காகவும்தான் பயன்படுத்தினார்கள். ஆனால், சிலர் இதைத் தவறாகப் பயன்படுத்தியதன் விளைவாக அக்கலை தெரிந்த குருமார்கள் அதனை யார்க்கும் கற்பிக்காமலே இருந்துவிட்டனர். இதனால், இக்கலை இன்று முற்றிலுமாக அழியும் நிலையை எட்டிவிட்டது [3].

துணைநூல்கள்

[1]       முரளிதர், S.N. (2013). வர்மக் கலைக் களஞ்சியம், சென்னை: நிர்மல் பதிப்பகம்.

[2]       சக்திவேல், சு. (2010). நாட்டுப்புற இயல் ஆய்வு, சென்னை: மணிவாசகர் பதிப்பகம்.

[3]       https://ta.wikipedia.org/wiki/வர்மக்கலை