குடவோலைமுறை என்பது கிராம நிர்வாகச் சபை உறுப்பினரைத் தேர்ந்தெடுக்கப் பழங்காலத்தில் பயன்பட்ட தேர்தல்முறை. இம்முறையில் கிராமத்தின் பகுதிவாரியாக மக்கள் ஒன்றுகூடி, தகுதியான உறுப்பினர்களின் பெயர்களை ஓலைச்சுவடிகளில் எழுதுவார்கள். அவ்வாறு எழுதப்படும் பெயர்களை மொத்தமாகக் கட்டி ஒரு குடத்தில் போட்டுக் குலுக்கல்முறையில் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பார்கள்.
தமிழ்நாட்டில் குடவோலைமுறைபற்றிய செய்திகள் பாண்டிய நாட்டிலேயே முதலில் கிடைக்கப்பெற்றுள்ளன. எடுத்துக்காட்டிற்கு, பொ.ஊ. 8ஆம் நூற்றாண்டில், திருநெல்வேலி மானூரில் உள்ள மாறன் சடையனின் கல்வெட்டு ஒன்று, பாண்டிய நாட்டுப் பிராமணர்கள் வாழ்ந்த கிராமங்களில் குடவோலைமுறை வழக்கத்தில் இருந்ததாகக் கூறுகிறது [1]. பொ.ஊ. 9ஆம் நூற்றாண்டுமுதல் பொ.ஊ. 16ஆம் நூற்றாண்டுவரை குடவோலைமுறை நடைமுறையில் இருந்தது. இதற்கு ஆதாரமாக உத்திரமேரூர்க் கல்வெட்டு விளங்குகிறது. இக்கல்வெட்டு முதலாம் பராந்தகனின் பதினான்காம் ஆட்சியாண்டில் (பொ.ஊ. 920இல்) அவனது ஆணைப்படி செதுக்கப்பட்டது. பிற்காலச் சோழர் காலத்தில் உத்திரமேரூரில் இருந்த ஊர்ச் சபைக்கு நடந்த தேர்தல்முறையைப் பற்றிய விரிவான செய்திகள் இக்கல்வெட்டில் காணப்படுகின்றன [2]. எனவே, குடவோலைமுறை இராஜராஜ சோழன் காலத்திற்கு முற்பட்டது என்று தெரிகிறது.
உத்திரமேரூர் ஊர்ச் சபையில் உறுப்பினர்களாவதற்குத் தகுதியுடையோர், தகுதியற்றோர்பற்றியும் தகுதியுடையோரில் தேவையான உறுப்பினர்களைக் குடவோலை மூலம் தேர்ந்தேடுக்கும்முறை, தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைப் பல்வேறு வாரியங்களுக்கு நியமிக்கும்முறை, அவர்களின் பதவிக்காலம் போன்றவை பற்றியும் உத்திரமேரூர்க் கல்வெட்டுத் தெரிவிக்கிறது.
தகுதியுடையோர் குறைந்தது கால் வேலி நிலம் உடையவராக இருப்பதோடு தமது சொந்த நிலத்தில் வீடு கட்டிக் குடியிருப்பவராக இருத்தல் வேண்டும். அவர் 35 வயதுக்கும் 70 வயதுக்கும் உட்பட்டவராக இருத்தல் வேண்டும். அதோடு, இத்தகையோர் செயல்திறன் வாய்ந்தவராகவும் கல்வியறிவு பெற்றவராகவும் நல்லொழுக்கம் வாய்ந்தவராகவும் நேர்வழியில் பொருளீட்டி வாழ்ந்து வருபவராகவும் இருத்தல் வேண்டும். மேலும், இவர்கள் கடந்த மூன்றாண்டுகளில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படாதவராக இருத்தல் வேண்டும். ஏற்கெனவே வாரிய உறுப்பினர்களாக இருந்து கணக்குக் காட்டாதோர், அவர்களுடைய உறவினர்கள், பெரும்பாதகங்கள் புரிந்தோர், கூடா நட்புறவால் கெட்டுப் போனோர், பிறர் பொருளைக் கவர்ந்தோர், கையூட்டு வாங்கியோர், ஊர்க்குத் துரோகம் இழைத்தோர், குற்றம்புரிந்து கழுதைமேல் ஏறினோர், கள்ளக் கையெழுத்திட்டோர் ஆகியோர் வாரிய உறுப்பினராகும் தகுதி இல்லாதவர்கள் [2].
குடவோலை மூலம் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும்முறை
தற்காலத்தில் ஓர் ஊரினை அல்லது நகரினைப் பல பகுதிகளாகப் பிரித்து, ஒவ்வொரு பகுதியையும் வட்டம் (Ward) என்று அழைப்பதுபோலப் பிற்காலச் சோழர் காலத்தில் குடும்பு என அழைத்தனர். உத்திரமேரூர் 30 குடும்புகளைக் கொண்டிருந்தமையால் ஒவ்வொரு குடும்பிற்கும் ஓர் உறுப்பினர் என 30 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தேர்தலன்று ஒவ்வொரு குடும்பைச் சேர்ந்தவர்கள், தங்கள் குடும்பில் உறுப்பினராவதற்குத் தகுதியும் விருப்பமும் உடையவர்களின் பெயர்களைத் தனித்தனி ஓலைகளில் எழுதி அவற்றை ஒன்றுசேர்த்துக் கட்டுவார்கள். பின்பு அதன் மேல் ‘இது இந்தக் குடும்பைச் சார்ந்தது’ என்பது விளங்க அந்தக் குடும்பின் பெயர் எழுதப்பட்ட ஓலைக்கட்டை ஒரு குடத்தில் இடுவார்கள். இவ்வாறே 30 குடும்பினரும் தங்கள் குடும்புகளுக்கு உரிய ஓலைக்கட்டுகளை அக்குடத்தில் இடுவார்கள். பின்பு ஊர் மக்கள் கூடியிருக்கும் சபையின் நடுவில் ஊர்ப் பெரியவர் ஒருவர் அக்குடத்தை எல்லாரும் காணுமாறு தூக்கி வைத்துக்கொண்டு நிற்பார். நடப்பது என்னவெனச் சிறிதும் அறியாத ஒரு சிறுவனைக் கொண்டு, அக்குடத்திலிருந்து ஓர் ஓலைக்கட்டை எடுக்கச் சொல்லி, அதிலுள்ள ஓலைகளை மற்றொரு குடத்தில் இட்டு குலுக்கி, அச்சிறுவனையே கொண்டு அதிலிருந்து ஓர் ஓலையை மட்டும் எடுக்கச் செய்வார். ‘மத்தியஸ்தன்’ என்னும் அலுவலர் ஒருவர் அவ்வோலையை ஐந்து விரலும் அகல விரியுமாறு உள்ளங்கையிலே வாங்கி அதிலுள்ள பெயரை உரக்கப் படிப்பார். சபையினுள்ளே இருக்கும் ஆண் மக்கள் எல்லாரும் அதை வாங்கிப் படிப்பார்கள். அந்த ஓலையில் உள்ள பெயருடையவர் அந்தக் குடும்பிற்கு உரிய உறுப்பினராக அறிவிக்கப்படுவார். இவ்வாறே மற்றக் குடும்புகளுக்கும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் [2].
தேர்ந்தெடுக்கப்பட்ட 30 உறுப்பினர்களுள் கல்வியறிவிலும் வயதிலும் முதிர்ந்த 12 பேரைச் சம்வத்சர வாரியத்திற்கும் மற்றவர்களுள் 12 பேரைத் தோட்ட வாரியத்திற்கும் எஞ்சியுள்ள 6 பேரை ஏரி வாரியத்திற்கும் நியமித்தனர். உத்திரமேரூரைச் சுற்றிப் 12 சேரிகள் இருந்தன. அச்சேரிகளிலிருந்து சேரிக்கு ஓர் உறுப்பினர் வீதம் மேலும் 12 உறுப்பினர்களைக் குடவோலை முறையிலேயே தேர்ந்தெடுத்தனர். அவர்களுள் 6 பேரைப் பஞ்சவார வாரியத்திற்கும் 6 பேரைப் பொன் வாரியத்திற்கும் நியமித்தனர். இத்தேர்தலின்போது மத்திய அரசைச் சார்ந்த அலுவலரான சோமாசிப் பெருமான் என்பவன் உடனிருந்தான் என்றும் அவன் சபைத் தேர்தல் முடிவுகளுக்கு ஒப்புதல் அளித்தான் என்றும் உத்திரமேரூர்க் கல்வெட்டுத் தெரிவிக்கிறது [2].
ஊர்ச் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட வாரிய உறுப்பினர்கள் திருவாடியார் எனப்பட்டனர். அவர்களைக் கொண்ட ஊர்ச் சபையானது மகாசபை எனப்பட்டது. வாரிய உறுப்பினர்களின் பதவிக்காலம் ஓர் ஆண்டாகும் [2]. மேலும், அந்நாட்களில் கிராமச் சபை, தேவதானத்துச் சபை, ஊர்ச் சபை, நகரச் சபை என நான்கு சபைகள் இருந்தன. புறம் 39, அகம் 93, நற்றிணை 400, கடைச் சங்கப் புலவர்களின் பாடல்கள் மூலம் சோழர் தலைநகர் உறையூரில் அறங்கூறும் சபை ஒன்று இருந்ததை அறியலாம். அம்மன்றங்களின் உறுப்பினர்கள் குடவோலைமுறை வாயிலாகவே தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பதை அகநானூற்றிலுள்ள கயிறுபிணிக் குழிசியோலை கொண்மார் என்னும் 77ஆம் பாடலின்வழி அறியலாம் [3].
குடவோலைத் தேர்தல்முறையின் குறைபாடுகள்
இத்தகு தேர்தல்முறையில் பல சிறப்புகள் இருப்பினும், இதில் சில குறைபாடுகளும் இருந்துள்ளன. அவை, ஊராட்சித் தேர்தலில் உறுப்பினராகப் போட்டியிட, பெண்களுக்கு உரிமை வழங்கப்படவில்லை. அடுத்து, பாமர மக்கள் உறுப்பினராக இடம்பெற வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
உத்திரமேரூரில் இருந்த ஊராட்சி முறையானது, பிற்காலச் சோழர் ஆட்சியின்போது சோழ நாட்டில் இருந்த எல்லா ஊர்களிலும் அப்படியே அல்லது சிற்சில மாற்றங்களுடன் நிலவியது என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர் [2].
குடவோலைமுறையில் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும்முறை இன்று வழக்கில் இல்லை. என்றாலும், பழங்காலத்து மக்கள் மக்களாட்சி நடத்த கையாண்ட சிறந்த முறையாகவே குடவோலைமுறை இருந்து வந்துள்ளது. இன்று நடத்தப்படும் தேர்தல்களில் பெண்களுக்கும் சம உரிமை தரப்படுவது குடவோலைத் தேர்தல்முறையில் இல்லாத ஒன்றென நாம் அறியலாம். அதோடு, ஆட்சியில் இருந்தோர், இம்முறையை அங்கீகரித்தமையாலும் அவர்களின் நேரடிப் பார்வையில் இத்தேர்தல்முறை இருந்தமையாலும் குடவோலைத் தேர்தல்முறை தமிழக வரலாற்றில் நெடுங்காலமாக இருந்ததை அறிய முடிகிறது.
துணைநூல்கள்
[1] துரை இளமுருகு. (2010) குடவோலை முறை.
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=11346&Itemid=139
[2] TVU Courses, சோழர்களின் நிருவாக முறை.
http://www.tamilvu.org/courses/degree/a031/a0312/html/a0312661.htm
[3] தேர்தல் வரலாறு, சோழர் காலத் தேர்தல் முறை (விகாஸ்பீடியா).