தமிழ்ச் சான்றோர்: இளங்கோவடிகள்

இளங்கோவும் சிலப்பதிகாரமும்

தமிழ் இலக்கிய உலகில் கைக்குக் கிடைத்த முதல் காப்பியமாகக் கருதப்படும் சிலப்பதிகாரத்தை நாடகக் காப்பியம், முத்தமிழ்க் காப்பியம் என்றும் சிறப்பித்துக் கூறுவதுண்டு. காப்பியத்தின் ஆசிரியரை இளங்கோ என்றும் இளங்கோவடிகள் என்றும் அழைப்பார்கள். தமிழில் எழுதப்பட்ட ஐம்பெருங்காப்பியங்களுள் முதன்மையானது என்னும் இடத்தைச் சிலப்பதிகாரம் பெற்றுள்ளது. இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழையும் இணைத்துப் பண்டைய தமிழரின் வாழ்க்கைமுறை, நாகரிகம், அரசியல் போன்றவற்றைச் சிறப்பாக அக்காப்பியத்தின் மூலம் பதிவுசெய்தவர், இளங்கோவடிகள். மேலும், பெண்ணின் பெருமையை முதன்முதலாகக் காப்பிய வடிவில் உணர்த்தியதோடு சேர, சோழ, பாண்டிய நாடுகளின் சிறப்புகளையும் பல அறங்களையும் எடுத்தியம்பிய பெருங்காப்பியம் என்று அதனைப் பெருமையுடன் கூறலாம். அன்றைய சான்றோர்கள் உலக நல்வாழ்வுக்காகப் பொதுநிலையில் நின்று அறம் போதித்தனர். அத்தகு உயர்நோக்கில் இருந்துகொண்டு பெருங்காப்பிய நூல்களை இயற்றினர். அந்த வரிசையில், இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம் தமிழர்களின் வாழ்வியல் சிறப்புகளை ஒருங்கே அமைத்துக் கூறும் காப்பியமாக விளங்குகிறது.

2ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இயற்றப்பட்டதாகக் கருதப்படும் சிலப்பதிகாரம், தமிழர்களின் பண்பாட்டையும் வாழ்க்கை நெறிமுறைகளையும் விரிவாக விளக்கும் வரலாற்றுப் பெட்டகமாக விளங்குகிறது [1].

சேரன் செங்குட்டுவன், பத்தினித் தெய்வமாகிய கண்ணகிக்குக் கோவில்கட்டி விழாவெடுத்தபோது கண்ணகியின் வரலாற்றைச் சாத்தனார் வாயிலாகக் கூறக்கேட்டு இளங்கோவடிகள் காப்பியத்தை இயற்றினார் என்று கூறப்படுகிறது. புகார், மதுரை, வஞ்சி ஆகிய மூன்று காண்டங்களையும், சேர, சோழ, பாண்டிய ஆகிய மூவேந்தர்களின் சிறப்புகளையும் இணைத்து முத்தமிழ்க் காவியமாகப் படைத்த பெருமை இளங்கோவடிகளுக்குரியது.

இளங்கோ பற்றிய பின்னணிச் செய்தி

இளங்கோவடிகள் சமண சமயத்தைச் சேர்ந்தவர். அவர் சேர மன்னன் குடக்கோ நெடுஞ்சேரலாதனின் மகன். சேரன் செங்குட்டுவனின் தம்பி. இளங்கோவடிகள் தூய சோழன் மகள் நற்சோனையின் மகன். அவர் கடைச்சங்கக் காலத்தவர். இளங்கோ இளமைப்பருவத்தில் தம் தமையனோடு இருந்தபோது நிமித்திகன் (சோதிடன்) ஒருவன் இளங்கோவுக்கு அரசராகும் பாக்கியம் உண்டு என்று சொன்னான். அதைக் கேட்ட செங்குட்டுவனின் முகம் வாடக் கண்ட இளங்கோ நிமித்திகனின் மேல் கோபங்கொண்டு, தம் தமையன் வருத்தப்படக்கூடாது என்பதற்காக அன்றே துறவுபூண்டார். இச்சம்பவம் கதையா வரலாறா என்னும் விவாதங்கள் அறிஞர்தம் மத்தியில் பல்லாண்டுகளாக நிலவுகின்றன. 

 

சிதம்பர ரகுநாதன் பார்வையில் இளங்கோ

இளங்கோவடிகள் யார்? என்னும் கேள்வியினை நூலின் தலைப்பாக எழுப்பிக்கொண்டு, சிதம்பர ரகுநாதன் ஆய்வுநூல் ஒன்றினை எழுதியுள்ளார். இவர் தம் நூலில் இளங்கோவடிகள், சங்ககாலப் புலவரும் அல்லர், சேர மன்னர் குலத்தவரும் அல்லர், சேர நாட்டவரும் அல்லர் என்று குறிப்பிட்டுள்ளார். சங்ககாலத்துச் சேர மன்னர்களின் இளைய புதல்வர்கள் இளங்கோக்கள் என்று அழைக்கும் வழக்கு அன்று இருந்துள்ளது என்பார். அவர்தம் பார்வையில், சிலப்பதிகாரம் ஒரு வர்க்க இலக்கியம் என்று குறிப்பிட்டுள்ளார். அது நிலவுடைமைச் சமுதாயத் தலைமைக்கு எதிராக வணிக வர்க்க மேலாண்மையை நிலைநாட்ட எழுந்த காப்பியம் என்று விளக்குகிறார். இது அரச வர்க்கத்திற்கு எதிராக இயற்றப்பட்ட காப்பியமாக உள்ளதால், அரச வம்சத்தைச் சேர்ந்த புலவர் ஒருவர் எழுதியிருக்க வாய்ப்பில்லை என்று கருதுகிறார். இதன் அடிப்படையில், இளங்கோவடிகள் அரச குடும்பத்தைச் சார்ந்தவர் அல்லர் என்று நிரூபிக்கிறார். அதோடு, அரசர்க்கு எதிரான ஒரு கதையை இளங்கோ என்னும் புனைபெயரில் எழுதவும் வாய்ப்பில்லை என்பது அவர்தம் கூற்று. காரணம், இளவரசர் என்று பொருள்படும் இளங்கோ என்னும் பெயரைத் தேர்ந்தெடுத்திருக்கமாட்டார் என்பது அவர்தம் விவாதம். முடிவாக, இளங்கோ என்பவர் வணிகர் குலத்தைச் சார்ந்தவர் என்றும் அதற்கான பல சான்றுகள் உள்ளன என்றும் விளக்குகிறார். சான்றுக்கு, தமிழில் கிடைத்த பழமையான சேந்தன் திவாகரம் என்னும் நிகண்டில் செட்டிகள் பெயர் என்னும் பிரிவில் இவ்வாறு குறிக்கப்பட்டுள்ளது:

         இப்பர், பரதர், வைசியர், கவிப்பர்,

         எட்டியர், இளங்கோக்கள், ஏர்த்தொழிலர், பசுக்காவலர்,

         ஒப்பில் நாயகர், வினைஞர், வணிகர் என்று

         அத்தகு சிரேட்டிகள் – செட்டிகள் பெயரே

         (மக்கட் பெயர்த் தொகுதி – சூத்திரம் 32)  

இதன்வழி, “இளங்கோ என்பது வணிகர்களைக் குறிக்கும் குலப்பெயராக வழங்கி வந்திருக்க வேண்டும் என்பது தெளிவு” (ப. 921) என்று ரகுநாதன் குறிப்பிட்டுள்ளார்.

கரூருக்கு அருகாமையில் உள்ள புகளூர் என்னும் இடத்தில் பல கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. பிராமியில் எழுதப்பட்ட அக்கல்வெட்டுகள் பொ.ஊ. 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை எனத் தொல்பொருள் ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் குறிப்பிட்டுள்ளார். இளங்கோ என்னும் சொல் எல்லா இளவரசர்களையும் குறிக்கும் பொதுப்பெயர் என்றும் அக்காவியம் பிற்காலத்தைச் சேர்ந்தது என்று கருதுவதற்கும் சான்றுகள் உள்ளன என்று மகாதேவன் குறிப்பிட்டுள்ளார்.

இளங்கோவடிகளின் தன்மைகள்

இளங்கோவடிகளின் தோற்றமும் உறவும் கேள்விக்குரியதாக இருப்பினும் இவர்தம் குணநலன்களை இவர் வடித்த இலக்கியத்தின் மூலமாகவே நாம் ஊகிக்கலாம். இளங்கோவடிகள் ஒரு சிறந்த சான்றோர். பிறரை இழிவாகக் கூறும் குணத்தை இவரிடம் காண முடியாது. தாம் கூறவந்த கருத்துகளை மிகச் சிறப்பாகக் கூறுவதில் வல்லவர். தன் வாழ்வையே பறித்துக்கொண்ட மாதவியைக்கூடக் காப்பியத்தின் தலைவி கண்ணகி பழித்துக் கூறுவதை இவர் வடித்த சிலப்பதிகாரத்தில் காண முடியாது. பெண்களை இழித்துக் கூறுவதை விரும்பாதவர், இவர். அக்காலத்தில் சமண சமயத்தைச் சேர்ந்தவர்கள் பெண்களைத் தூற்றிய நிலை இருந்தது. ஆனால், இளங்கோவடிகள் அதற்கு நேர்மாறாகப் பெண்களுக்கு ஏற்றம் தந்த பெரியவர்களுள் முதன்மையானவர் என்று சொல்லலாம்.

சங்ககாலத் தமிழ்ச் சமூகத்தில் பரத்தைமை இருந்ததைச் சங்க இலக்கியங்கள் சுட்டுகின்றன. அந்நிலை இளங்கோவடிகளின் மனத்தைத் தொட்ட காரணத்தினாலேயே சிலப்பதிகார காவியத்தில் மாதவி என்னும் ஒப்பற்ற பாத்திரத்தைப் படைத்து அக்குலத்தில் பிறந்த பெண்களும் நல்வாழ்வு வாழ முடியும் என்பதை உலகிற்கு மெய்ப்பித்தவராகத் திகழ்கிறார். அக்காலத்தில் கற்புக்கு அறிகுறியாக அணிவது முல்லை மலர். இவர் வடித்த சிலப்பதிகார காப்பியத்தில் கண்ணகி மட்டுமல்லாமல் மாதவியும் முல்லை மலரை அணியும் வண்ணம் செய்து பெண்களைச் சிறப்பித்துள்ளார்.

இவர் பல கலைகளைக் கற்றுத் தேர்ந்திருக்க வேண்டும். காரணம், இவருடைய இசைப்புலமையை நாம் கானல்வரி பாட்டில் உணரலாம். இசையோடு மட்டும் நின்றுவிடாமல் நாட்டுப்புறப் பாடல்களிலும் இவர் மனம் தோய்ந்திருந்ததை இவர்தம் குன்றக் குரவை, ஆய்ச்சியர் குரவை காட்டுகின்றன. இவர் சமயப் பொது நோக்குடையவர். இவர் சமண சமயத்தைச் சார்ந்தவர் என்றாலும் பிற சமயங்களைப் பழித்துக் கூறாத பண்புடையவர். தம் மதக் கோட்பாடுகளை எடுத்துக் கூறுவதோடு நின்றுவிடாமல், பிற சமயங்களின் வெற்றிகளையும் எடுத்துக்கூறும் இயல்பினர்[2].

சுருங்கக்கூறின், “நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம்” என்று பாரதியால் சிறப்பிக்கப்பட்ட நாடகக் காப்பியமான இது, அடிப்படையான மனித உணர்ச்சிகளை நிலைக்களமாகக் கொண்டுள்ளது. பாத்திரங்களுக்கு ஏற்பட்ட இன்பியல் துன்பியல்சார்ந்த அனுபவங்களின் தொகுப்பாக விளங்கும் இந்நூல், மனிதகுலத்திற்குப் பல்வேறு வாழ்க்கைப் பாடங்களைக் காலந்தோறும் கற்பிக்கின்றன[3]. இளங்கோவடிகள் பற்றிப் பாடிய பாரதி,

         யாமறிந்த புலவரிலே

         கம்பனைப்போல் வள்ளுவர்போல்

         இளங்கோவைப் போல்

         பூமிதனில் யாங்கணுமே

         பிறந்ததிலை, உண்மை வெறும்

         புகழ்ச்சி இல்லை

என்று குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்களுக்கு எழுச்சியூட்ட வேண்டும் என்பதற்காக உண்மையை மிகைப்படுத்திப் பாடியுள்ளார்.

சிலப்பதிகாரம் மணிமேகலை என்னும்  காப்பியம் படைக்கப்படுவதற்கு உந்துதலாக அமைந்துள்ளது. சிலப்பதிகாரத்தின் கதைத் தொடர்ச்சியின் தாக்கத்தை மணிமேகலையில் காணமுடிகிறது. இவ்விரண்டு காப்பியங்களும் தமிழ் இலக்கிய வரலாற்றில் இரட்டைக் காப்பியங்கள் என அடையாளங்காட்டப்பட்டுள்ளன.  

துணைநூல்கள்

[1]   சேதுப்பிள்ளை, ரா. பி. (2012). தமிழ் இன்பம். சென்னை: ஸ்ரீசெண்பகா பதிப்பகம்.

[2]   வாழ்வியற் களஞ்சியம் (தொகுதி 4). திருவள்ளுவர் ஆண்டு 2022-1991. உரிச்சொல் நிகண்டு. தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர், தமிழ்ப்  பல்கலைக்கழக வெளியீடு 53-4.

[3]   முத்தையா, ஆ. (1978). சிலம்பில் அவலம். மதுரை: அன்றில் பதிப்பகம்.