ஒரு கலைஞரின் வாக்குமூலம்
“ஒரு கலைஞரின் வாக்குமூலம்” — சிங்கப்பூரின் மூத்த தமிழ்க் கலைஞர்களின் குரல்களை ஆவணப்படுத்தும் தொடர்
சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையம் உருவாக்கிய “ஒரு கலைஞரின் வாக்குமூலம்” எனும் 10-பாகங்களைக் கொண்ட காணொளி நேர்காணல் தொடர், 21 பிப்ரவரி 2026 அன்று தேசிய நூலக வாரிய அரங்கில் சிறப்பாக வெளியிடப்பட்டது.
இந்தத் தொடர், சிங்கப்பூரில் பல்லாண்டுகளாகத் தமிழ்க் கலை உலகிற்குத் தம்மை அர்ப்பணித்துச் செயல்பட்டு வந்த 10 மூத்த தமிழ்க் கலைஞர்களின் வாழ்க்கை அனுபவங்களையும் படைப்புப் பயணங்களையும் பதிவு செய்கிறது. ஒவ்வொரு பாகமும் ஒரு கலைஞரை மையமாகக் கொண்டு, அவர்களின் தனிப்பட்ட வரலாறு, கலைத் தத்துவம், முக்கிய திருப்பங்கள், சவால்கள், சாதனைகள் ஆகியவற்றை ஆழமான உரையாடல் வடிவில் பதிவு செய்கிறது.
இந்தத் தொடர், சிங்கப்பூரின் பல்பண்பாட்டு சமூகச் சூழலில் தமிழ்க் கலைகள் எவ்வாறு வளர்ச்சி பெற்றன, மாற்றங்களை எதிர்கொண்டு நிலைத்தன, புதிய அடையாளங்களை உருவாக்கின என்பதற்கான அரிய பண்பாட்டு ஆவணமாக அமைந்துள்ளது.
இத்தொடரில் இடம்பெறும் மூத்த கலைஞர்கள் பலரும் இங்கு குடியேறியவர்கள். அவர்களின் குடியேற்ற அனுபவங்கள், அடையாள உருவாக்கம், பண்பாட்டுப் பரிமாற்றங்கள், சமூக மாற்றங்கள் போன்ற பல்வேறு வாழ்க்கைப் பரிமாணங்களையும் இத்தொடர் பதிவு செய்கிறது. தமிழ்க் கலைஞர்கள் பலர் மூப்படைந்து வருவதால், அவர்களின் அனுபவங்களும் நினைவுகளும் ஆவணப்படுத்தப்படாமல் மறைந்து விடும் அபாயம் நிலவுகிறது. இத்தொடர், அந்த அவசரத் தேவைக்கு ஒரு சிறு முதலுதவி.
கலை மரபு என்பது மேடை நிகழ்ச்சிகளிலும் படைப்புகளிலும் மட்டுமல்ல; கலைஞர்கள் தங்கள் சொந்தக் குரலில் பகிரும் நினைவுகள், சிந்தனைகள், வாழ்க்கைச் சாட்சியங்களிலும் அது உயிர்ப்புடன் வாழ்கிறது என்பதை இத்தொடர் வலியுறுத்துகிறது. சிங்கப்பூர்ப் பல்பண்பாட்டு மரபில், தமிழ்க் கலைகளும் ஒன்றிணைந்தது என்பதைப் புரியவைக்கும் ஆவணப்படுத்தும் ஒரு முயற்சி.
இத்தொடரை உருவாக்குவதில் தேசிய கலை மன்றம், தேசிய நூலக வாரியம் மற்றும் திரு ஜோதி மணிக்கம் ஆகியோரின் ஆதரவு இன்றியமையாதது.
