top of page
Final.png

பொங்கல்

மனிதனின் வாழ்வையும் கொண்டாட்டங்களையும் பிரிக்க முடியாது. மொழி, இனம், சமயம், நாடு, உறவு எனப் பல்வகைக் கொண்டாட்டங்கள் உலகளாவிய நிலையில் மக்களால் கொண்டாடப்படுவதைப் பார்க்கிறோம். அதுபோல் தமிழினம் இயற்கை அளித்த மகத்தான வாழ்க்கைக்கு நன்றிகூறும் வண்ணம் பொங்கலைக் கொண்டாடுகிறது. பாரெங்கும் பரவியுள்ள தமிழர்கள், ஆண்டுதோறும் தைத் திங்களில் பொங்கலை விமரிசையாகக் கொண்டாடுகின்றனர்.

a6 p1.jpg

 

பொங்கல் பண்டிகை என்பது உழவர் பண்டிகை. அது இயற்கை சார்ந்த பண்டிகை. வயல்களில் உழைக்கும் மக்கள் சூரியனுக்கும் மாடுகளுக்கும் நன்றிசொல்லும் கொண்டாட்டமாகும்[1]. உழவுத் தொழிலில் ஈடுபடும் உழவன், தன்னிடமிருந்த விதையைப் பூமியில் தூவியது முதல் அது பயிராக வளர்ந்து பலன் தருவதுவரை அதனைத் தன் கண்ணுக்குக் கண்ணாகக் காத்துவருகிறான். தான் விதைத்த சிறுவிதை தன் கண்ணெதிரே பூத்துக் குலுங்கிக் காய்த்துக் கனிந்து நிற்பதைக் காணும்போது அவன் உள்ளம் பெருமிதமடைகிறது. அதனால்தான், அவன் தனது விளைச்சலைப் பொங்கலாய்க் கொண்டாடினான்[1].

இயற்கையின் முக்கியத்துவத்தை அன்றே மக்கள் உணர்ந்திருந்தார்கள். நெய்தல் நிலத்தின் தெய்வமாக மழையைப் பழந்தமிழர் வணங்கினர். பாலை நிலத்தவர் கதிரவனை வழிபட்டனர். சிலப்பதிகாரத்தில்வரும் மங்கல வாழ்த்தில், நிலவும் கதிரவனும், மழையும் போற்றப்படுகின்றன. திருக்குறளில் கடவுள் வாழ்த்தைத் தொடர்ந்து வான்சிறப்பு வலியுறுத்தப்படுகிறது. சிலப்பதிகாரத்தில் இந்திர விழாபற்றிக் குறிப்பிடும்போது, அதனை இளவேனில் காலத்தைச் சுட்டும் வசந்த விழா என்றும் குறிப்பிடுவதுண்டு.

தமிழ் மக்கள் பொங்கல் விழாவை ஆரவாரமற்ற நிலையில் இயல்பாகக் கொண்டாடுகின்றனர். உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம்முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்குக் கொண்டுவந்து, தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளையே நாம் தைப்பொங்கல் என்போம். தை மாதத்தின் முதல் நாளே அறுவடைத் திருநாளாகும். அறுவடைத் திருநாளைச் சில ஐரோப்பிய நாடுகளும், சீனா, ஜப்பான், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளும் கொண்டாடிவருகின்றன. பெயரில் மாற்றம் இருப்பதைப் போலக் கொண்டாடும் முறையிலும் வேறுபாடு உள்ளது. எது எப்படி இருப்பினும் கொண்டாட்டத்தின் நோக்கம் என்பது ஒன்றாக உள்ளது[2]. அடுத்து, பொங்கல் விழா எவ்வாறு நடைமுறையில் கொண்டாடப்படுகிறது என்பதைப் பார்க்கலாம்.

போகிப் பண்டிகை

மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று, பொங்கல் விழாவின் தொடக்கமாகப் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ‘பழையன  கழிதலும் புதியன புகுதலும்' என்பதற்கு ஏற்ப, பழைய பொருட்களைத் தீயிட்டு எரித்து, போகிப் பண்டிகையைக் கொண்டாடுவார்கள். இப்பண்டிகையின்போது தமிழ் மக்கள் அறியாமையின் காரணமாகத் தங்கள் வீடுகளில் உள்ள அரிய ஓலைச்சுவடிகளையும் தீயிலிட்டு எரித்துள்ளனர். அதேபோன்று, ஆடிப்பெருக்கின்போதும் தங்களிடம் உள்ள ஓலைச்சுவடிகளின் மதிப்புத் தெரியாமல் ஆற்றுநீரில் விட்டுள்ளனர்.

தமிழகத்தில் போகியன்று, திருமணமாகிய பெண்களுக்கு, பிறந்த வீட்டிலிருந்து சீர்வரிசை அனுப்புவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். சீர்வரிசையில் அரிசி, வாழைப்பழம், கரும்பு, இஞ்சி, மஞ்சள், தேங்காய், சர்க்கரை, வெல்லக்கட்டி, கற்கண்டு போன்ற பொருள்கள் வைக்கப்படும். ஆகவே, பிறந்த வீட்டிற்கும் புகுந்த வீட்டிற்கும் ஓர் இணைப்புப் பாலமாக இப்பண்டிகை விளங்குகிறது[1]. இது புறத்தில் நடக்கும் செயல். அதுபோல் மனிதன் உறவுகளைப் புதுப்பிக்கும் விதமாக, தன் மனத்தில் உள்ள வருத்தங்களையும் கோபங்களையும் நீக்கி உறவுகளை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது நோக்கம்.

a6 p2.jpg

பொங்கல் பண்டிகை

போகிப் பண்டிகைக்கு அடுத்த நாள், தை மாதத்தின் முதல்நாள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தமிழகக் கிராமப் புறங்களில் பொங்கல் வைப்பதற்காகப் புதிய மண்ணைக் குழைத்து வாசல் புறங்களில் அடுப்புகள் அமைக்கப்படும். நகர்ப்புறங்களில் வீட்டின் உள்ளே இருக்கும் அடுப்புகளில் பொங்கல் செய்வது வழக்கமாகும்.

a6 p3.jpg

புதுப்பானையில் கோலமிட்டு, இஞ்சிக் கொத்தையும் மஞ்சள் கொத்தையும் பானையின் கழுத்தில் கட்டுவார்கள். புதிய பச்சரிசியினை இட்டு வெண்பொங்கல் வைப்பார்கள். மற்றோர் அடுப்பில் சர்க்கரைப் பொங்கலும் வைப்பார்கள். உலை பொங்கும்போதும், பொங்கல்செய்து பானையைக் கீழிறக்கும்போதும், சிறுவர்களும் பெரியவர்களும் சேர்ந்து “பொங்கலோ, பொங்கல்!” எனக் கூவுவது மரபு. அதன்பின், வீட்டு முற்றத்தில் வாழை இலையில், வாழைப்பழம், வெல்லக்கட்டி, தேங்காய்ச் சில், துண்டுக் கரும்பு போன்றவற்றை வைப்பார்கள். அத்துடன் வெண்பொங்கலையும் சர்க்கரைப் பொங்கலையும் அவ்விலையின்மீது வைத்துக் கதிரவனுக்குப் படைத்து வழிபடுவார்கள். அதன் பிறகு, இலையிலிருக்கும் உணவுப் பொருள்களை வீட்டிற்குள் எடுத்துச்சென்று அனைவரும் உண்டு  மகிழ்வார்கள்[3].

மாட்டுப்பொங்கல்

​உழவர்களின் உற்ற நண்பனாக விளங்கும் கால்நடைகளுக்கு நன்றிகூறும் நாளே மாட்டுப் பொங்கல். இது பொங்கலுக்கு அடுத்த நாள் கொண்டாடப்படுகிறது. இதைப் பட்டிப் பொங்கல் என்றும் அழைப்பார்கள்[1].

a6 p4.jpg

மாட்டுப் பொங்கலன்று மாடுகள் கட்டும் தொழுவத்தினையும் கால்நடைகளையும் குளிப்பாட்டிச் சுத்தஞ்செய்வார்கள். மாட்டின் கொம்புகளைச் சீவிவிடுவார்கள். கொம்புகள் பளபளப்பாகத் தெரியும் வகையில் வண்ணங்கள் பூசிவிடுவார்கள். கொம்பில் மணிகள், சலங்கைகள் அல்லது தோலாலான வார்ப்பட்டையில் சலங்கைகளைக் கட்டி அவற்றை மாடுகளுக்கு அணிவித்து அலங்கரிப்பார்கள்[3]. பின் மாட்டிற்கு மஞ்சள் பூசி, குங்குமத்தால் திலகமிட்டுப் பூஜை செய்வார்கள். உழவுக்குப் பயன்படுத்தும் அனைத்துக் கருவிகளையும் சுத்தஞ்செய்து மஞ்சள் குங்குமத்தால் பொட்டு வைப்பார்கள். அந்த வருடத்தில் விளைந்த பயிர், காய்கறிகளுடன் தேங்காய், பூ, பழம், நாட்டுச் சர்க்கரை என அனைத்தும் பூஜைக்காக வைப்பார்கள். தொழுவத்திலேயே பொங்கல் வைப்பார்கள். அதைக் கடவுளுக்குப் படைத்தும், தீபாராதனை காட்டி வழிபாடும் நிகழ்த்துவார்கள். பின்னர் மாடு, ஆடு, எருமை போன்ற கால்நடைகளுக்குப் பொங்கலையும் பழங்களையும் கொடுப்பார்கள்.

தமிழர்களின் மரபுவழி விளையாட்டுகளுள் ஒன்று ஏறு தழுவுதல் அல்லது மஞ்சு விரட்டு அல்லது ஜல்லிக்கட்டு எனப்படும். ஏறு என்பது காளை மாட்டைக் குறிப்பதாகும். ஆவேசம்கொண்டு ஓடும் காளையின் கொம்புகளைப் பிடித்து அடக்குவது இவ்விளையாட்டின் அடிப்படையாகும். இவ்விளையாட்டு,

சங்ககாலத்தில் முல்லை நிலத்தில் வாழ்ந்த தமிழர்களிடம் பண்பாட்டுத் திருவிழாவாக இருந்துள்ளது. சங்க இலக்கியங்களுள்ஒன்றான கலித்தொகையில் ஏறு தழுவுதல் பற்றிய குறிப்புகள் உள்ளன. அதோடு, மலைகடுபடாம், பட்டினப்பாலை, சிலப்பதிகாரம் போன்ற நூல்களிலும் ஏறு தழுவுதல்பற்றி அறிந்துகொள்ளலாம்.

காணும் பொங்கல்

தை மாதம் மூன்றாவது நாள் ‘கன்னிப் பொங்கல்’ என்றும் ‘கன்றுப் பொங்கல்’ என்றும் சொல்வார்கள். இவ்விரண்டுக்கும் பெயர்க் காரணங்கள் உண்டு. திருமணமாகாத பெண்களுக்கு உரியது ‘கன்னிப் பொங்கல்’. திருமணமாகாத ஆண்களுக்கு உரியது ‘கன்றுப் பொங்கல்’. திருமணமாகாத இளம் வயதுப் பெண்கள் எல்லாரும் வெள்ளைத் துணியால் மூடப்பெற்ற தாம்பாளங்களை எடுத்துக்கொண்டு மாலை நேரத்தில் ஊரில் உள்ள ஆற்றங்கரை, குளத்தங்கரை அல்லது ஏரிக்கரைக்குச் செல்வார்கள். ஒவ்வொருவர் தாம்பாளத்திலும் கரும்புத் துண்டு, கற்கண்டு, பூ, பச்சரிசி, சர்க்கரை, வாழைப்பழம் ஆகியவை இருக்கும்[1].   தண்ணீர்க் கரையை அடைந்தவுடன் அங்கே ஒரு சிறிய மண்மேடை அமைப்பார்கள். இது திட்டாணி எனப்படும். இளம் பெண்கள் கொண்டுவந்த மங்கலப் பொருட்கள் அடங்கிய தாம்பாளங்களை அந்த மண் மேடையின்மீது வரிசையாக அடுக்கி வைப்பார்கள். பிறகு தாம்பாளங்கள்கொண்ட அந்த மண் மேடையைச் சுற்றி வட்டமாக நின்றபடி கும்மியடித்துப் பாட்டுப் பாடுவார்கள். பாடல்கள் பாடி முடிந்ததும், அவரவர் தாம்பாளங்களில் இருக்கும் பச்சரிசியில் சர்க்கரையைச் சேர்த்து, நீர்வார்த்துக் கலந்துவைப்பார்கள். கற்பூரம் ஏற்றிக் கடவுள் வழிபாடு செய்வார்கள். “சீக்கிரம் திருமணம் நடக்க வேண்டும்” என்று வேண்டிக்கொள்வார்கள். பின்னர் அவர்கள் சர்க்கரை கலந்த பச்சரிசியை அங்கு வேடிக்கை பார்க்க வந்திருக்கும் எல்லாருக்கும் வழங்குவார்கள்.

a6 p5.jpg

சிங்கப்பூரில் பொங்கல் கொண்டாட்டம்

சிங்கப்பூரில் தமிழர்கள் கொண்டாடும் முக்கியமான பண்டிகைகளுள் பொங்கலும் ஒன்று.   சிங்கப்பூரில் தமிழர்களுடன் பிற இனத்தவரும் பொங்கல் திருநாள் கொண்டாட்டங்களில் கலந்துகொள்வதை நாம் பார்க்க முடிகிறது. நம் அமைச்சர்கள் பலரும் சமூக ஊடகங்களில் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவிப்பதன்மூலம் சிங்கப்பூரில் இன நல்லிணக்கத்திற்கு வலுச்சேர்க்கின்றனர். லிட்டில் இந்தியா வட்டாரம் பொங்கல் உணர்வைப் பறைசாற்றும் வகையில் ஒளியூட்டப்பட்டு, சிங்கப்பூரர்களையும் சுற்றுப்பயணிகளையும் வெகுவாக ஈர்த்து வருகிறது. பொங்கலுக்குத் தேவையான வண்ணப்பானைகள், கரும்பு, மஞ்சள் கொத்து, தோரணங்கள் போன்ற பொருட்களையும் லிட்டில் இந்தியா வட்டாரக் கடைகளிலிருந்து மக்கள் எளிதாக வாங்கிச் செல்ல முடிகிறது.

a6 p6.jpg

சிங்கப்பூர்ச் சமூக மன்றங்களில் பொங்கல் கொண்டாட்டம்

இந்தியர்கள் மட்டுமல்லாமல் அந்தந்த வட்டார மக்களும் பொங்கல் திருநாளைப்பற்றி அறிய வேண்டும் என்பதற்காகச் சமூக மன்றங்களில் இவ்விழாவைக் கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர். பின்வருவனவற்றை நிகழ்ச்சியின் பகுதியாகக் காணலாம்:

  • தமிழர் பாரம்பரிய நடனங்கள்

  • பாரம்பரிய விளையாட்டுகள்

  • கோலமிடுதல்

  • பொங்கல் வைத்தல்

 

போன்ற பல நடவடிக்கைகளை நடத்திப் பிற இனத்தவர்களும் அதில் கலந்துகொள்ளுமாறு ஊக்கமளிக்கின்றனர்.

 

உழவுத் தொழில் மனிதகுல நல்வாழ்வுக்கு வித்திடும் அடிப்படைத் தொழில் என்பதை வள்ளுவமும் உணர்த்துகிறது:

 

               சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால்

               உழந்தும் உழவே தலை (குறள் 1031) 

 

நம்முடைய வாழ்வில் உழவுத்தொழில் சிறந்து விளங்குவதோடு அதைச் சார்ந்த மற்றத் தொழில்களும் சிறந்து விளங்குகின்றன. குடும்பங்களில் ஆடு, மாடுகள் உள்ளிட்ட ஆநிரைச் செல்வங்கள் நிறைந்திருக்கின்றன என்பதையெல்லாம் பறைசாற்றும் திருவிழாவாகப் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.  பொங்கல் பண்டிகை நம் மரபில், பண்பாட்டு அடையாளமாகவும் வாழ்க்கை முறையில், ஆழ வேரூன்றிய திருவிழாவாகவும் கொண்டாடப்படுகிறது.

 

துணைநூல்கள்   

[1]   பொன்னி. (1989). தமிழகத் திருவிழாக்கள் பாகம் 1. நடராஜ் ஆப்செட் பிரஸ்.

 

[2]   வானமாமலை. நா.  (1996). தமிழர் வரலாறும் பண்பாடும் (ஆராய்ச்சிக் கட்டுரைகள்). ‘மைக்ரோ’ அச்சகம்.

 

[3]   வைத்தியலிங்கன், செ. தமிழ்ப்பண்பாட்டு வரலாறு, அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடு.

       கலியபெருமாள், கா. (2005). உலகத்தமிழர் பண்பாட்டுக் களஞ்சியம் – பகுதி II வாழ்வியல். மலேசிய வெளியீடு.

       அரங்க. இராமலிங்கம், (2009). திருவடி. அநுராகம்.

bottom of page