உரைகள்
திரு நா ஆண்டியப்பன்
தலைவர், சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்
மாண்புமிகு அமைச்சர் ஈஸ்வரன் அவர்களே, தேசிய நூலக வாரியம், தேசியக் கலை மன்றம், தேசிய மரபுடைமைக் கழகம் ஆகியவற்றின் பிரதிநிதிகளே, எழுத்தாள நண்பர்களே அனைவருக்கும் என் வணக்கம்.
“தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்” என்றான் மகாகவி பாரதி. இன்று அவன் கனவு நனவாகியிருக்கிறது. உலகம் முழுவதும் தமிழோசை கேட்கிறது அங்கெல்லாம் தமிழர்கள் பரவியிருப்பதால்.
ஆனால் சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியத்தைப் பற்றி அப்படிச் சொல்ல முடியுமா? கடந்த 2011ஆம் ஆண்டு தேசியக் கலை மன்றத்தின் வலுவான ஆதரவோடும் சமூக லணிகர்களின் ஒத்துழைப்போடும் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் நடத்திய முதல் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம் குறித்தும் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர்கள் பற்றியும் ஓரளவு விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
நம் எழுத்தாளர்கள் ஒரு சிலர் இணைய இதழ்களில் எழுதுகிறார்கள். ஆனால் அவற்றை வாசிப்பவர்கள் மிகவும் குறைவு. மேலும் அந்தப் படைப்புகள் எப்போதுமே அந்த இணைய இதழ்களில் இருக்குமா என்பது சந்தேகமே. இந்தத் தமிழ் மின்னிலக்க மரபுடைமைத் திட்டத்தின் மூலம் நமது படைப்புகள் எப்போதுமே இணையத்தில் இருக்கும். யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் அவற்றை வாசிக்கலாம், விவாதிக்கலாம். பட்டி மன்றங்கள் நடத்தலாம்.
இதனால் நூல் விற்பனை பாதிக்கும் என்று கூற முடியாது. இப்போது நாம் நூல் வெளியீடுகளின் மூலமே போட்ட பணத்தை ஓரளவு திரும்பப் பெறுகிறோம். கடைகளின் மூலம் நம் நூல்கள் விற்பனையாவது மிகவும் குறைவு. அதனால் இந்தத் திட்டத்தால் நூல் விற்பனை பாதிக்காது என்றே கூறலாம். ஆனால் அதே வேளையில் நம் நூல்களை அதிகமானோர் வாசிக்கும் வாய்ப்புக் கிடைக்கிறது.
இன்று இளையர்கள் யாரும் நூல் வாங்கிப் படிப்பதில்லை. கணினி மூலம் இணையத்தில் உலா வரும் அவர்களிடம் சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியத்தைக் கொண்டுபோய்ச் சேர்க்க இந்தத் திட்டம் உதவும் என்று நாம் நம்பலாம்.
அதனால் எழுத்தாளர்கள் அனைவரும் இந்தத் திட்டத்தை ஆதரித்து தங்கள் படைப்புகளை வழங்க முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அதன் ஒரு பகுதியாக நான் எழுதிய மூன்று படைப்புகளையும் எழுத்தாளர் கழகம் வெள்யிட்டுள்ள படைப்புகளையும் இத்திட்டத்திற்கு அளிக்க நான் உறுதி கூறுகிறேன் என்பதைத் தெரிவித்து நிறைவு செய்கிறேன். நன்றி. வணக்கம்.