top of page
red.png

உரைகள்

திரு அருண் மகிழ்நன்
தலைமை ஒருங்கிணைப்பாளர், தமிழ் மின்மரபுடைமைத் திட்டம்

தமிழ் மின்மரபுடைமைத் திட்டம் என்னும் இத்திட்டம் இழக்கப் போவதையும் இனி வரப்போவதையும் கட்டிக் காக்க உருவான திட்டம். உங்களுக்கெல்லாம் தெரியும் சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியவாதிகள் எத்தனை பேர் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டார்கள் என்பது. பரணன் போன்றவர்கள் அமரர் ஆகிவிட்டார்கள் என்பதோடு ஐ உலகநாதன் போன்றோர் வனவாசத்தில் இருக்கிறார்கள். அவர்தம் நூல்கள்கூட பாரதியினுடையது போன்றோ கண்ணதாசனுடையது போன்றோ கைக்கெட்டிய தூரத்தில் கிடைப்பதில்லை. தேசிய நூலகத்தை விட்டால், அவற்றிற்கெல்லாம் வேறு கதியே இல்லை. ஆயிரத்து எண்ணூறுகளிலிருந்து இலக்கியம் படைத்துக் கொண்டிருக்கும் நம் நாட்டு எழுத்தாளர்களுக்கு இருக்க வேண்டிய பரப்பும் வரவேற்பும் சில பல காரணங்களால் எட்டாமலேயே போய்க்கொண்டிருக்கிறன. அந்தக் காரணங்கள் அனைத்தையும் தீர்க்கவோ குறைக்கவோ முடியாவிட்டாலுங்கூட, மிக முக்கியமான ஒரு காரணத்தை நாம் தீர்க்கமுடியும் அல்லது குறைக்கமுடியும் என்னும் நம்பிக்கையின் அடிப்படையில் உருவானதுதான் இந்தத் தமிழ் மின்மரபுடைமைத் திட்டம்.

இத்திட்டத்தின் வழி யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், எங்கிருந்து வேண்டுமானாலும் சிங்கப்பூர்த் தமிழ் நூல்களை மின்வடிவில் தேடலாம், படிக்கலாம், பதிவிறக்கிக் கொள்ளலாம். சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால் சிங்கைத் தமிழ் இலக்கியத்திற்கு இது ஒரு காமதேனு. மேலும், மறைந்து போன, மறைந்து கொண்டிருக்கின்ற பல இலக்கியப் படைப்புகளுக்கும், ஏன் படைப்பாளிகளுக்கும்கூட, புத்துயிர் அளிக்கும் ஒரு வரப்ரசாதம். வருங்கால சந்ததியினருக்கு அள்ளி அள்ளி வழங்கக் கூடிய ஓர் அட்சய பாத்திரம்.


இடம், பொருள், ஏவல் கருதிச் செயல்பட்டால், காரியம் கைகூடும் என்பார்கள். அந்த வகையில், இத்தத் திட்டம் இந்த நேரத்தில் அரங்கேற்றப்படுவதற்குப் பல காரணங்கள் உள்ளன. காலங்கருதி, ஒரு சிலவற்றை இப்போது குறிப்பிடுகின்றேன். பிறவற்றை, கேள்வி-பதில் நேரத்தில் பேசலாம்.

முதலாவது, தமிழ் நூல்களை மின்னாக்கம் செய்யக்கூடிய தொழில்நுட்ப சூட்சுமம் இப்போதுதான் கைகூடியுள்ளது. நூறு விழுக்காடு துல்லிதமாகச் செயல்பட முடியாவிட்டாலுங்கூட, போதுமான அளவு சரிவரச் செயல்படுகின்ற அளவு தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது.

இரண்டாவது, நமது நாடு தனது 50வது சுதந்திரதின விழாவைக் கொண்டாடவிருக்கின்ற தருணம் ஒரு பொன்னான தருணம். அரிதாக வரும் அந்தத் தருணத்தில், நமக்குள்ள குறுகிய காலத்தையும் வசதியையும் கருதி 50 ஆண்டு இலக்கியத்தையாவது தக்கவைத்துக் கொள்வதுதான் இந்தத் திட்டம். 1965க்கு முன்னும் 2015க்குப் பின்னும் வந்த, வரப்போகும் இலக்கிய நூல்களைப் பின்னொரு கால கட்டத்தில் சேர்த்துக் கொள்வது வருங்காலத் திட்டம்.

மூன்றாவது, இந்த மின்னாக்க முயற்சிக்கு இன்றியமையாதவர்கள் நமது தமிழ் எழுத்தாளர்கள். அவர்கள் அனைவரும் 50வது வயதைக் கொண்டாடும் நமது நாட்டிற்கு ஓர் அன்பளிப்பாக தமது படைப்புகளை மின்னாக்கத்திற்கு அர்ப்பணிக்க எந்த விதத் தயக்கமும் காட்டமாட்டார்கள் என்னும் நம்பிக்கை ஒரு காரணமாகும். ஏற்கனவே பல படைப்பாளர்கள் தங்கள் மனமார்ந்த ஆதரவை எங்களுக்குத் தெரியப்படுத்தியுள்ளார்கள்.

நான்காவது, எழுத்தாளர்கள் போன்றே, நமது சமூகத்தினரும் மனமுவந்து இந்தத் திட்டத்திற்கு ஆதரவளிப்பார்கள் என்பதும் ஒரு காரணமாகும். மின்னாக்கம் செய்யப்பட்ட பதிவுகளை ஒப்புநோக்கவும், நூல்களுக்குக் குறிப்புரைகள் வரைவதற்கும், ஓரளவு நிதியுதவி செய்வதற்கும் நமது சமூக ஆசிரியர்களையும் புரவலர்களையும் நாங்கள் பெரிதும் நம்பியிருக்கின்றோம்.

ஐந்தாவது, 50வது ஆண்டு விழாவின்போது இந்திய சமூகம் நடத்தப் போகும் ஏகப்பட்ட நிகழ்வுகளில் சிலவற்றைத் தொலைநோக்கும் ஆழ்பயனும் உள்ளடக்கியதாக ஆக்க வேண்டும் என்னும் அவா ஒரு காரணம். 2015ம் ஆண்டில் தமிழ் மின்னிலக்கியத் தொகுப்பை அனைத்துத் தமிழ் மொழி சார்ந்த நிறுவனங்களின் பேரிலேதான் நமது நாட்டிற்கு அன்பளிப்பாக வழங்க இருக்கின்றோம் என்பதால், இந்த முயற்சி தமிழ் சமுதாயம் முழுவதுமே பெருமைப்படக்கூடியதாக இருக்க வேண்டும் என்பதும் முக்கியம்.

 

இறுதியாக, தேசிய நூலக வாரியம், தேசிய மரபுடைமைக் கழகம், தேசியக் கலை மன்றம், சிங்கப்பூர்ப் புத்தக வளர்ச்சி மன்றம் ஆகிய நான்கு அரசு சார்ந்த அமைப்புகளும் ஒருங்குகூடி முழுமனத்துடன் நமது சமூகப் பணிக்கு ஆதரவு தர முன்வந்திருப்பது மிக முக்கியமான காரணம்.

 

எனவே, இத்தொடக்க விழாவின்போது தமிழ் மின்மரபுடைமைத் திட்டக் குழுவின் சார்பில், நான்கு வேண்டுகோள்களை முன் வைக்கின்றோம்: ஒன்று, தமிழ் எழுத்தாளர்கள் அனைவரும் தங்கள் நூல்களை மின்னாக்கம் செய்வதற்குத் தயங்காமல் ஒப்புதல் தர வேண்டுகிறோம். இரண்டு, தமிழ் வல்லுனர் பலரும் தாமே முன்வந்து மின்பதிவுகளைச் சரிபார்க்கவும் குறிப்புரைகள் எழுதவும் உதவ வேண்டுகிறோம். மூன்று, பொருள்வசதியுள்ள புரவலர்களும் இந்திய நிறுவனங்களும் நிதியுதவி செய்ய வேண்டுகிறோம். நான்கு, இத்திட்டம் நிறைவுபெறும் நேரத்தில், தமிழ் மொழிக்கும் இலக்கியத்திற்கும் பாடுபட்டு வரும் அத்தனை நிறுவனங்களும் தங்கள் பெயர்களை இத் திட்டத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டுகிறோம்.

bottom of page